வேலுநாச்சியார், வ.உ.சி, பாரதியார் மாறுவேடம் அணிந்து வந்தால் பக்கெட் பிரியாணி இலவசம் !

2022 டெல்லி குடியரசு தின விழாவில் பங்குபெற தமிழ்நாட்டின் வேலுநாச்சியார், வ.உ.சி, பாரதியார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் சந்தித்தது. இதனால், ஒன்றிய தேர்வுக் குழுவால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னையில் தமிழக அரசின் குடியரசு தின விழாவில் பங்கேற்றது.
இதற்கிடையில், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வேலுநாச்சியார், வ.உ.சி, பாரதியார் போன்று மாறுவேடம் அணிந்து வரும் குழந்தைகளுக்கு ஒரு பாக்கெட் பிரியாணி இலவசம் என பிரபல பிரியாணிக் கடையான ” தொப்பி வாப்பா பிரியாணி ” அறிவித்து இருந்தது.
இந்த அறிவிப்பால், ஜனவரி 26-ம் தேதியன்று குழந்தைகள் பலரும் வேலுநாச்சியார், வ.உ.சி, பாரதியார் மாறுவேடம் அணிந்து வந்து பிரியாணியைப் பரிசாகப் பெற்றுள்ளனர்.
” நீங்கள் இவர்களை மறைப்பதாய் நினைத்து விதைத்து விட்டீர்கள்… தற்போது தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் முளைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ” என மாறுவேடத்தில் வந்த குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பேசும் வசன வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார்கள்.