This article is from Sep 30, 2018

இனி இலவசமாக தமிழில் Degree வாங்கலாம்..!

தமிழ்..! தமிழ்..! என்று என்னதான் பெருமையாக பேசினாலும் அந்த தமிழை கல்லூரில் பயில பலரும் தயங்குகின்றனர். தமிழ் துறையில் பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் பள்ளியில் குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைக்கக் கூட இங்கு பலரும் தயாராக இல்லை.

“ கற்றது தமிழ் “ என்று படத்தில் தமிழை மிகவும் நேசிக்கும் மாணவன் அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழ் மொழியில் பட்டம் பெறுவதும், தமிழ் பயின்றால் ஆங்கிலம் பேசத் தெரியாதவன்,  அறிவில்லாதவன் என்ற மாய பிம்பத்தை உடைக்கும் விதத்தில் அக்கதாப்பாத்திரம் அமைந்திருக்கும்.

தமிழ் துறையில் இளங்கலை பட்டம் பெறுபவர்கள் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க முதுகலை பட்டப்படிப்பில் மாணவர்களின் சேர்க்கை மிகவும் சொற்ப எண்ணிகையில் மட்டுமே உள்ளன. இதனால் தமிழியல் துறையில்மாணவர்களை ஈர்க்கவும், தமிழ் பட்டத்தை ஊக்குவிக்கவும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று உதவ முன்வந்துள்ளது.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமின்றி படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2018-2019 ஆண்டிற்கான தமிழ் எம்.ஏ படிப்பிற்காக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவர்களை ஊக்குவிக்கவும் கல்விக் கட்டணம் 12,000 ரூபாயை பல்கலைக்கழகம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த கட்டண விலக்கு தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ தென் மாவட்டங்களில் தமிழ் முதுகலைப் படிக்க விரும்பும் மாணாக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழ் வளர்ச்சி தடைபடும் என்பதை  அறிந்து தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் கட்டணமில்லா இலவசக் கல்வி இந்த ஆண்டு முதல் வழங்கிட பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் முதுகலைப் பட்டத்திற்கு சேரும் மாணாக்கர்களுக்கு இந்த ஆண்டு (2018-2019) கல்விக் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. கட்டணமில்லா இலவசக் கல்வியாக முதுகலைப் தமிழ்ப்படிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் படிக்க விரும்பும் மாணாக்கர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் பாஸ்கர் அறிவித்துள்ளார் ” என இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பேசிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கே.பாஸ்கர், “ 2016- 2017 ஆண்டில் தமிழ் முதுகலைப் பட்டத்தில் 3  பேர் மட்டுமே சேர்ந்தனர். சென்ற ஆண்டிலும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருந்தனர். இந்த ஆண்டில் 30 இடங்கள் கொண்ட தமிழ் எம்.ஏ பட்டத்தில் 10 பேர் விண்ணப்பித்துள்ளனர். 25 வருடங்களாக பல்கலைக்கழகத்தில் இருக்கும் தமிழியல் துறை சில சிறப்பான ஆசிரியர்களாக நிறுவப்பட்டது.

தமிழக அரசு தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறது. எனினும், தமிழ் படிப்பில் குறைவான மாணவர்களே உள்ளனர். ஆகையால், முதுகலை பட்டத்தின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம்” என கூறியுள்ளார்

இதன் பயனாக பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் பட்டப்படிப்பில் சேரும் மாணாக்கர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.12,000 முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், இந்த சலுகை எம்.ஏ தமிழ் பட்டத்திற்கு மட்டுமே பி.ஏ தமிழ் மற்றும் தொலைத்தூர பட்டப்படிப்பிறகு வழக்கமான கட்டணமே என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தவிர்க்கப்படும் தமிழ் படிப்பை ஊக்குவிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.

 

Manonmaniam Sundaranar university waives MA Tamil Literature Fees 

Please complete the required fields.




Back to top button
loader