’தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு பற்றிப் பாடம்’ எனப் பரப்பப்படும் பழைய புத்தகத்தின் புகைப்படம்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்படும் பாடப் புத்தகத்தில் சீட்டு விளையாடுவது எப்படி என இருப்பதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்படுகிறது. 

இணையத்தில் பணம் கட்டி விளையாடக் கூடிய ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து 2020ம் ஆண்டின் போது அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து ஜிங்க்லி கேம்ஸ், ரீட் டிஜிட்டல், ப்ளே கேம்ஸ் என்ற நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல்வேறுகட்ட விசாரணைக்குப் பிறகு ஒட்டுமொத்தமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க முடியாது என அச்சட்டத்தினை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பிறகு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் படிக்க : ஆன்லைன் சூதாட்ட தண்டனையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தவறானச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்

இதனை விமர்சிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பள்ளி பாடப் புத்தகத்தில் சீட்டுக்கட்டு குறித்து பாடம் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது. அப்போதே இது குறித்து யூடர்ன் தளத்தில் கட்டுரை வெளியிட்டுள்ளோம். 

சிறார் எழுத்தாளர் உமாநாத் செல்வன் கூறுகையில், ”சீட்டுக்கட்டு என்றாலே பயமூட்டுபவை என்கிற பாவனையே அச்சமூட்டுகிறது. சீட்டுக்கட்டுகள் மூலம் கணிதத்தில் பல கூறுகளை எளிதாக கற்கலாம். இந்த பாடத்திலும் சீட்டுக்கட்டினைக் கொண்டு கூட்டல் கழித்தலையே எளிதாகச் சொல்லித் தருகின்றனர். இதில் சூதாட்டம் எங்கே வந்தது?” எனக் கேள்வி எழுப்பினார்.  

மேலும், “சீட்டுக்கட்டு மிக எளிதான விளையாட்டுப்பொருள். அது சூதாடவும் பயன்படும், மறுப்பதற்கு இல்லை. ஆனால், சூதாட்டத்தைத் தவிரச்  சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ஏராளமான விளையாட்டுகளை விளையாடலாம். சீட்டுக்கட்டு விளையாட்டுகள் மூலம் கணித அறிவு மட்டுமல்ல, Logical Thinking வெகுவாக உயரும்” எனக் கூறினார். இதே புகைப்படத்தைத்தான் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.

சீட்டுக் கட்டு இடம்பெற்றிருந்த இந்த பாடம் 6ம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் ’முழுக்கள்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. சீட்டுக் கட்டு தொடர்பான அப்பகுதி தற்போதும் உள்ளதா என்பதை அறியக் கடந்த கல்வியாண்டில் (2023-24) ஆறாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்படி எந்த பகுதியும் இல்லை என்பதைக் கூறியதுடன் அப்பாடப் பக்கத்தின் புகைப்படத்தையும் நமக்குப் பகிர்ந்தார். இதில் இருந்து பரவக் கூடிய புத்தகத்தின் புகைப்படம் பழைய பதிப்பு என்பதை உறுதி செய்ய முடிந்தது. 

மேலும் 9 மற்றும் 10ம் வகுப்புகளிலும் நிகழ்தகவு எனப்படும் Probability தொடர்பான கணக்குகளுக்குச் சீட்டுக் கட்டுப் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அது குறித்துத் தேடியதில், சீட்டுக் கட்டு பகுதிகளைப் பள்ளி பாடப் புத்தகத்தில் இருந்து தமிழ்நாடு அரசு நீக்கியது தொடர்பான செய்திகளைக் காண முடிந்தது. 

இது குறித்து 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களைத் தொடர்பு கொண்டு பேசியதில், அப்பகுதி நீக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய முடிந்தது.  

சீட்டுக்கட்டு சூதாட்டமா : 

Sex education எனப்படும் பாலியல் தொடர்பான கல்வி மாணவர்களுக்கு அவசியம் எனக் கல்வியாளர்கள் கருத்து முன்வைக்கும் போது, ‘Sex’ என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களின் கற்பனைத் திறன்களால் அது கூடாது என வாதிட்டனர். 

அப்படித்தான் இந்த சீட்டுக் கட்டு விஷயத்திலும் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தோன்றுகிறது. இந்த சீட்டுக் கட்டை வைத்து சூதாட்டம் ஆடுவது எப்படி எனப் பாடப் புத்தகத்தில் எந்த ஒரு இடத்திலும் சொல்லித்தரப்படவில்லை. அப்படி இருக்கும் போது சீட்டுக் கட்டு என்ற ஒற்றைக் காரணத்திற்காக அதனைப் புத்தகத்தில் இருந்து நீக்குவது எப்படிச் சரியான அணுகுமுறையாக இருக்கும். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதிற்காகச் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அதற்காக கிரிக்கெட் ஒரு சூதாட்டம் எனச் சொல்லிவிட முடியுமா. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே விளையாடவும் பார்க்கவும் வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டியது அரசு மற்றும் பெற்றோரின் கடமை. 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader