பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை பல இடங்களில் பொய்யான தகவல்களைப் பேசி விமர்சனத்துக்கு உள்ளானவர். சமீபத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட்டை இழந்தார் எனச் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியிருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதனைத் தவிர்த்து வேறு எந்த தேர்தலிலும் அவர் தோல்வி அடையவில்லை. அவர் தோல்வி அடைந்தாலும் 50,782 வாக்குகளைப் பெற்றிருந்தார். அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 43 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.
ஒரு தொகுதியில் மொத்தமாகப் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு (16.67 சதவீதம்) வாக்கினைப் பெற்றாலே தேர்தல் வைப்புத் தொகை திரும்பப்பெற வேட்பாளர் தகுதியானவர் ஆவார். அந்நிலையில் ஜெயலலிதா டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை பேசியது ஒரு தவறான தகவல்.
மேலும் படிக்க : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் டெபாசிட் இழந்ததாக அண்ணாமலை சொன்ன பொய் !
EWS :
அண்ணாமலை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் EWS-க்கு அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினரும் பயன் பெற முடியும் எனக் கூறி இருந்தார்.
EWS எனும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு; பொதுப் பிரிவினர் எனும் முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்படுகிறது. ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் இட ஒதுக்கீட்டைப் பெறுபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது எனக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : EWS இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர் பயன் பெற முடியுமா ?
2 லட்சம் வழக்கு :
20,000 புத்தகங்களைத் தான் படித்ததாக அண்ணாமலை பேசியது பெரும் கேலிக்கு உள்ளானது. அதேபோல், “11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்கள் என்னுடைய வாழ்க்கையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம் கேஸ் (வழக்கு) போட்டு இருக்கிறேன்” எனக் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
11 ஆண்டுகளில் மொத்தம் 4,015 நாட்களே வரும். ஆனால், 5,000 நாட்கள் பணியாற்றியதாகத் தவறாகக் கூறி இருக்கிறார். அவர் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று 2011ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி ராஜினாமா செய்து உள்ளார். ஆக, 9 ஆண்டுகள் (முழுமையாக நிறைவடையவில்லை) மட்டுமே ஐபிஎஸ் பணியிலிருந்துள்ளார். என்சிஆர்பி தரவுகளின்படி 2011 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 12,25,950 ஐபிசி குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
அதேபோல், அண்ணாமலை பணியாற்றிய மாவட்ட வாரியாக பதிவான ஐபிசி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்திற்குள் தான் உள்ளது. இதன்படி பார்க்கையில் அவர் சுமார் 20,000 வழக்குகளை மட்டுமே பதிவு செய்திருப்பார். இரண்டு லட்சம் வழக்குள் என அவர் கூறியது பொய்.
மேலும் படிக்க : அன்று 20,000 புத்தகங்கள், இன்று 2 லட்சம் வழக்குகள்.. பொய் பேசி சிக்கும் அண்ணாமலை.. முழுமையான ஆதாரங்கள் !
தமிழ்நாடு உளவுத்துறை :
தமிழ்நாடு உளவுத்துறையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலுள்ள பதவிகளில் 60% மேல் ஒரு மதத்தினை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் மிஷினரி போலச் செயல்படுகிறார்கள் என அண்ணாமலை பேசியிருந்தார்.
காவல் கண்காணிப்பாளர் (SP) சரவணன் அவர்கள் அளித்த தரவின்படி, உளவுத்துறையில் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), கண்காணிப்பாளர் (SP), ஐஜி , ஐடிஜிபி (ADGP) என மொத்தம் 61 பணியிடங்கள் உள்ளன. அதில் 11 பேர் கிறிஸ்தவ மதத்தினை சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை என்பது அண்ணாமலை சொல்லுவதைப் போல, 60 சதவீதம் இல்லை. உண்மையில் அது 18 சதவீதம் என அறிய முடிந்தது.
மேலும் படிக்க : உளவுத்துறையின் உயர் பதவிகளில் 60% மேல் கிறிஸ்தவர்கள் உள்ளதாக அண்ணாமலை பரப்பும் அவதூறு !
இந்து கோவில்கள் இடிப்பு :
100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்களை இடித்ததை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பெருமையாகப் பேசுகிறார். இந்த காரணத்திற்காகத் தான் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் கூறுவதாக அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் 40 வினாடி வீடியோ பதிவிட்டிருந்தார்.
ஆனால் உண்மையில் டி.ஆர்.பாலு “என்னுடைய தொகுதியில் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கத்தின் போது சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி இந்த மூன்று கோவிலை இடித்தேன். அவர்களுக்கு அதை விடச் சிறந்ததாக, 100, 200 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் வைத்து புதிய கோவில் கட்டிக் கொடுத்தேன்” எனப் பேசி இருந்தார். அவர் பேசியதிலிருந்து ஒரு சிறு பகுதியை மட்டும் எடிட் செய்து தவறாகப் புரிந்து கொள்ளும்படி அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க : எம்பி டி.ஆர்.பாலு கோவில், மசூதி இடிப்பு பற்றி பேசிய வீடியோவை எடிட் செய்து திரித்து பரப்பும் அண்ணாமலை !
காமன்வெல்த் போட்டி :
2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியில் 61 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்திருந்தது. இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய போட்டிகளில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது என இதுவரை இந்தியா பெறாத இடத்தை பெற்று இருப்பது போலக் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில், 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்கள் உடன் 3-ம் இடமும், 2014-ல் ஸ்காட்லாந்த்தில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் உடன் 4-ம் இடமும் இந்தியா பெற்றுள்ளது.
முன்னதாக 2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் மொத்தம் 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 2ம் இடம் பிடித்ததே இன்றுவரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இதுவரை இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியல்களில் கடைசியில் இருந்ததாக பொய் சொன்ன அண்ணாமலை !
மணிப்பூர் பாஜக வாக்கு சதவீதம் :
மணிப்பூர் மாநிலத்தில் 2013ல் 0.5 சதவீதமாக இருந்த பாஜவின் வாக்கு சதவீதம், 9 வருடத்தில் 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
ஆனால், 2012ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக 2.12 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதே போல், 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 37.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதிலிருந்து அண்ணாமலை கூறியது பொய்யான தகவல் என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க : மணிப்பூரில் 52 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக.. அண்ணாமலையின் அடுத்த பொய் !
கோவை கார் வெடிப்பு :
கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் குறித்து கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ காவல் நிலையத்தில் தான் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கைது செய்யப்பட்ட 6 பேரும் கொச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறியிருந்தார்.
ஆனால், 2022, அக்டோபர் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல் துறையின் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 26ம் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) அவ்வழக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு செய்தது.
மேலும் படிக்க : கோவை கார் வெடிப்பு வழக்குப் பதிவு பற்றி அண்ணாமலை சொன்ன பொய் !
அதேபோல் கைது செய்யப்பட்ட 6 பேரும் கோயம்புத்தூர் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் உள்ள என்.ஐ.ஏ-வின் முதல் FIR பதிவு இந்த வழக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
மேலும் படிக்க : தமிழ்நாடு ‘பாஜகவின் ஐடி விங்’ தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
இதற்கு முன்பாக, தமிழ்நாடு பாஜகவின் செயற்குழு உறுப்பினர் செளதா மணி, முன்னாள் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு குறித்தும் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
மேலும் படிக்க : தமிழ்நாடு குறித்து கர்நாடகாவில் அண்ணாமலை சொன்ன பொய்கள் !