This article is from Apr 30, 2021

கே.வி ஆனந்த் மறைவிற்கு தவறான புகைப்படத்துடன் பதிவிட்ட தமிழக பாஜக| நீக்கியதாக விளக்கம் !

பிரபல திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்ததால் அவரின் மறைவிற்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்தி பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் கே.வி ஆனந்த் வீட்டிற்கு நேரில் சென்று மாநிலத் தலைவர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தியதாக வெளியிட்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

” சற்று முன்னர் மறைந்த சினிமா இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி விட்டு அவர் குடும்பத்தாரிடம் இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொண்ட நமது மாநில தலைவர் டாக்டர் திரு.@Murugan_TNBJP.. உடன் மாநில துணைத்தலைவர் திரு.எம்.என்.ராஜா அவர்கள் ” என ஏப்ரல் 30-ம் தேதியுடன் இடம்பெற்று இருக்கிறது.

Archive link

இந்த ஸ்க்ரீன்ஷார்ட் உடன், ” இயக்குநர் கே.வி.ஆனந்த் அவர்கள் உடல் அவர் வீட்டுக்கே எடுத்த செல்லவில்லை, கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பு இருந்ததால் நேரடியாக பெசண்ட் நகர் மின் மயானத்துக்கு எடுத்து சென்று விட்டார்கள்.பாஜக முருகன் மட்டும் எப்படி சந்தித்தார் என்று தெரியவில்லை. பிகு: இது அரங்கநாயகம் அவர்கள் வீட்டில் எடுத்த புகைப்படம் ” என சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்தும் வாசகர்கள் கேட்டு வருகின்றனர்.

கொரோனா காரணமாக இயக்குநர் கே.வி.ஆனந்த் உடல் மருத்துவமனையில் இருந்து வாகனத்தில் அவரின் வீட்டு வாசல் வரை மட்டுமே கொண்டு வரப்பட்டு நேரடியாக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், ஸ்க்ரீன்ஷார்ட் பதிவில் இருக்கும் புகைப்படங்கள் மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் C.அரங்கநாயகம் அவர்களின் உடலுக்கு மாநில தலைவர் எல்.முருகன் அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பவர்களுடன் ஒத்துப் போகிறது. 

வைரல் செய்யப்படும் பதிவு உண்மையா அல்லது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதா என தெரிந்து கொள்ள தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.நிர்மல்குமார் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, ” அது பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அரங்கநாயகம் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். தவறான புகைப்படங்கள் உடன் பதிவிட்டதால் போஸ்டை நீக்கி விட்டோம் ” எனப் பதில் அளித்து இருந்தார்.

அதன்பின்னர், எல்.முருகன் உடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவுகள் வெளியாகி இருக்கிறது. அதை தமிழக பாஜகவும் ரீட்வீட் செய்து உள்ளது. 

முன்னாள் கல்வி அமைச்சர் C.அரங்கநாயகம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உடன் கே.வி.ஆனந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தியதாக  பதிவு வெளியிட்டதால் உடனடியாக பதிவை நீக்கி இருப்பதாக பாஜக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

Please complete the required fields.




Back to top button
loader