75% சென்னை மருத்துவமனை படுக்கை நிரம்பியது! தமிழகத்தின் முழு நிலவரம்.

கொரோனாவின் இரண்டாம் அலையால் நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதால் 20% படுக்கைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் மீதம் உள்ளன.
ஏப்ரல் 24-ம் தேதி நிலவரப்படி, சென்னை ராஜீவ் காந்தி, கீழ்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்தூரார், கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள 4,368 படுக்கைகளில் 3,444 படுக்கைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளன, 924 படுக்கைகளே மீதமுள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள 1,618 படுக்கைகளில் 512-ம், ஸ்டான்லியில் உள்ள 1200-ல் 191-ம், ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள 575-ல் 72ம், கிங்ஸ்ன் 525-ல் 59ம் , கேஎம்சிஎச்-ல் உள்ள 450-ல் 90 படுக்கைகள் மட்டுமே மீதமுள்ளதாக தமிழக அரசு அளித்த தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மாவட்டம் வாரியாக கொரோனா பராமரிப்பு மையங்களில் உள்ள 11,645 படுக்கைகளில் 9,253 மீதமுள்ளன. திருச்சி நகரில் உள்ள எம்ஜிஎம்ஜிஎச்-ல் உள்ள 750 படுக்கைகளில் 520 நிரம்பி உள்ளன. திருச்சியில் உள்ள 6 கொரோனா பராமரிப்பு மையங்களில் உள்ள 1,660 படுக்கைகளில் 550 நிரம்பி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.
கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 680 கொரோனா படுக்கைகளில் 636 நிரம்பி உள்ளன, ஆக்சிஜன் உதவியுடன் இருக்கும் 284 படுக்கைகளில் 2 மட்டுமே காலியாக இருக்கிறது. எனினும், கோவை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் உள்ள 865 படுக்கைகளில் 244 நிரம்பி இருக்கிறது, ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 190 படுக்கைகளில் 95 மீதம் இருக்கிறது. எனினும், அரசு மருத்துவமனையில் உள்ள 1,825 படுக்கைகளில் 826 படுக்கைகள் மீதம் உள்ளன. மாவட்டத்தின் கொரோனா பராமரிப்பு மையங்களில் உள்ள 2,630 படுக்கைகளில் 1,505 மீதமுள்ளன.
மதுரையில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளில் இருக்கும் 1,887 படுக்கைகளில் 933 மீதம் உள்ளன. கொரோனா மையங்களில் உள்ள 700 படுக்கைகளில் 416 மீதமுள்ளது.
stopcorona.tn.gov.in தளத்தின் மூலம் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய படுக்கைகள், ஐசியூ, வெண்டிலேட்டர் போன்றவற்றின் எண்ணிக்கையும், நோயாளிகள் மற்றும் மீதமுள்ளவற்றின் எண்ணிக்கையும் அளிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மாவட்டம் வாரியாக தொகுத்து எந்தெந்த நகரங்களில் எவ்வளவு சதவீதம் நிரம்பி உள்ளது என கீழே காண்பித்து உள்ளோம்.
