” தமிழகத்தை மிரட்டும் நோய்கள் ” செய்ய வேண்டியது என்ன ?

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் வருடந்தோறும் உயிர் பலிகள் அதிகளவில் ஏற்படுகிறது. தற்போது தமிழகத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் வைரசால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எங்கெல்லாம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது மற்றும் அதன் அறிகுறிகள், செய்ய வேண்டியவை என்ன என்பதை பற்றி விரிவாக காண்போம்.
பன்றி காய்ச்சல் மரணங்கள் :
H1N1 வைரஸ் அல்லது பன்றி காய்ச்சல் வைரஸ் அறிகுறி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 6 பேருக்கு H1N1 வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைரஸ் பாதித்த இரண்டு பெண்கள் இறந்துள்ளனர். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் 60 வயதான ஒருவர் வைரசால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணி பெண் பன்றி காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். தமிழகத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறியோடு 8 முதல் 20 பேர் மருத்துவமனையில் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அறிகுறிகள் :
பன்றி காய்ச்சல் (H1N1 வைரஸ்) மனிதர்களிடையே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவாக பரவக் கூடியவை. அதற்கான அறிகுறிகள்,
- காய்ச்சல் : 100 டிகிரி செல்சியஸ் அளவிற்கு காய்ச்சல் உண்டாகும். 72 மணி நேரத்திற்கு காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைரஸ் பாதிப்பு பற்றி பரிசோதனை செய்ய வேண்டும்.
- தீராத தலைவலி : மாத்திரைகள் எடுத்துக் கொண்டும் தீராத தலைவலி ஏற்பட்டால்.
- வயிற்றுப்போக்கு : அதிக காய்ச்சல் உடன் வயிற்றுப்போக்கு.
- இருமல் மற்றும் தும்மல் : வைரஸ் பாதிக்கபட்டவரிடம் இருந்து நோய் தொற்று ஏற்பட்டால் அதிகமாக இருமல் மற்றும் தும்மல் ஏற்படுவதன் மூலம் அறியலாம்.
- சோர்வு மற்றும் உடல் வலி: வைரஸ் பாதிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் உடலில் சோர்வு மற்றும் வலி உண்டாகும். இது மிக முக்கியமான அறிகுறியாகும்.
- மூச்சு விடுவதில் சிரமப்படுவது போன்றவையும் வைரஸ் அறிகுறியை குறிக்கின்றது.
முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியவை :
- வைரஸ் பாதித்தவர்களிடம் இருந்து உங்களுக்கோ அல்லது உங்களிடம் வைரஸ் பாதிப்பு இருந்து பிறருக்கோ பரவாமல் இருக்க கூட்டமான இடத்தில் இருப்பதை தவிர்க்கவும்.
- அடிக்கடி கைகளை தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். சுத்தமாக இருந்தால் நல்லது.
- மேற்காணும் அறிகுறிகள் தென்பட்டால் வழக்கமான வைரஸ் பாதிப்பு என நினைக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- வைரஸ் பாதிப்பு ஏற்படும் காலத்தில் வெளியே செல்லும் பொழுது கை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.
- வைரஸ் பரவும் காலங்களில் சுறுசுறுப்பாக இருத்தல் நல்லது. நோய் பாதிப்பு ஏற்படுமோ என சோர்வாக இருக்காமல் உடற்பயிற்சி உள்ளிட்டவையை செய்து சுறுசுறுப்பாக இருங்கள்.
- தினமும் 8-10 டம்பளர் தண்ணீர் குடியுங்கள்.
- ஆல்கஹால் மற்றும் கார்போனேட் பானங்கள் போன்றவற்றை அருந்தாமல் இருத்தல் நல்லது.
- வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் கவலையோ அல்லது பயமோ கொள்ளாமல் உடனடியாக மருத்துவனைக்கு சென்று பரிசோதனை செய்து பாருங்கள். அரசு மருத்துவமனைகளில் வைரஸ் பாதிப்பிற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் :
இனி வரும் மழைக் காலங்களில் டெங்கு வைரஸ் அதிகம் பரவும். எனினும், தற்போதே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 முதல் 50 வரை மருத்துவமனையில் டெங்கு அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெங்கு அறிகுறி :
- 3 முதல் 7 நாள் வரையிலான காய்ச்சல்
- தொடர் தலைவலி மற்றும் கண் வலி
- தசை மற்றும் இணைப்புகளில் வலி
- பசியின்மை
- வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
- தோலில் வெடிப்பு( சிவப்பு நிறத்தில்)
- மூக்கு மற்றும் ஈறுகளில் ரத்தப்போக்கு
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை:
- நாம் இருக்கும் பகுதியின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். மழை நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
- பகல் நேரங்களில் கொசுக்கள் அண்டாமல் இருக்க பார்த்திருத்தல் அவசியம்.
- டெங்கு காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லையென்றாலும் காய்ச்சலை குறைக்க மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
- வைரஸ் பாதித்த நபரிடம் இருந்து நோய் பரவாமல் பார்த்திருத்தல் அவசியம்.
- நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை மருந்துகளை அருந்துவதும் பயனளிக்கும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு மூலம் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல் மற்றும் சுகாதாரமாக இருந்தல் போன்றவற்றால் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
Two die of swine flu in Tamil Nadu’s Madurai; six more hospitalised
Swine Flu – Causes, Signs, Symptoms & Prevention
Swine flu precautions Guide lines by the Government of India
Dengue fever – including symptoms, treatment and prevention
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.