உதவித் தொகையை உயர்த்தக் கோரி தமிழக மருத்துவ மாணவர்கள் கோரிக்கை !

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசுப் பணியில் இல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கும் பயிற்சி கால உதவித்தொகை(Stipend) மிகவும் குறைவாக வழங்கப்படுவதாகவும், அதை தமிழக அரசு உயர்த்தி தர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து மருத்துவ மாணவர்கள் தமிழக அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement

ஜூன் 14-ம் தேதி தங்கள் கோரிக்கையை முன்வைத்து கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ மாணவர்கள் உதவித்தொகை உயர்த்தக் கோரி கைகளில் பதாகை உடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை மருத்துவர் மாணவர் ஒருவர் நமக்கு அனுப்பி இருந்தார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.37,000 முதல் ரூ.42,000 வரையும், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ரூ.42,000 முதல் ரூ.47,000 வரையும் ஆண்டு வாரியாக பயிற்சி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.70,000, ரூ.75,000, ரூ.80,000 என ஆண்டு வாரியாகவும், உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ரூ.80,000, ரூ.85,000, ரூ.90,000 என ஆண்டு வாரியாகவும், சி.ஆர்.ஆர்.ஐ உதவித்தொகை 21,000 முதல் 30,000 வரையும், ஆண்டுதோறும் உதவித்தொகையில் 10% உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஜூன் 11-ம் தேதி தமிழ்நாட்டின் செயலாளரான உமாநாத் அவர்களுக்கு தமிழ்நாடு பல் மருத்துவர்கள் சங்கம் அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், பிற மாநிலங்களில் மருத்துவ மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையை(Stipend) குறிப்பிட்டு அனுப்பி உள்ளனர்.

Advertisement

பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவ மாணவர், ” அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் குறைந்த வருமானம் உடைய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. 25 வயதிற்கு மேல் ஆன எம்.டி.எஸ் / எம்.டி / எம்.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாணவர்கள் தற்போதும் பொருளாதார ரீதியாக பெற்றோரை எதிர்பார்க்க வேண்டியுள்ள நிலை மிக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் சமீப காலமாக பல முதுநிலை பட்டதாரிகளுக்கு இந்த நிதி பாதுகாப்பின்மை மனச்சோர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. இதுபோக தமிழ்நாட்டில் உள்ள எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் திருமணம் ஆன மருத்துவர்களை கூட்டாக தங்க அனுமதி இல்லை. இதனால் வெளியே வீடுகளை வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, கூடுதல் நிதி சுமை உண்டாகிறது ” எனத்  தெரிவித்து இருந்தார்

” சுகாதாரத்துறையில் தமிழ்நாடு சிறந்தது. ஆனால், நாங்கள் நாட்டிலேயே மிகக் குறைந்த ஊதியம் பெறுகிறோம். நாங்கள் கடினமாக உழைக்கிறோம், ஆனால் குறைந்த ஊதியம் பெறுகிறோம். கிட்டத்தட்ட அனைத்து முதுநிலை மாணவர்களும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள், பலர் திருமணம் ஆனவர்கள். நகர்ப்புறங்களில் வேலை செய்பவர்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்கின்றனர். நாங்கள் அதிக ஊதியம் கேட்கவில்லை, நாட்டின் பிற மாநிலங்களில் வழங்கப்படுவதை போன்று வழங்குமாறு கேட்கிறோம் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கீர்த்தி வர்மன் தி ஹிந்து செய்திக்கு தெரிவித்து இருக்கிறார்.

2018-ம் ஆண்டு ஜூலையில் உதவித் தொகையை உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கையால், உள்ளிருப்பு பயிற்சி மருத்துவர் மாணவர்களுக்கு 13,000-ல் இருந்து 20,000 ஆகவும், முதுநிலை மாணவர்களுக்கு 25,000ல் இருந்து 35,000 ஆகவும்  உதவித் தொகையை தமிழ்நாடு அரசு கணிசமாக உயர்த்தி இருந்தது.

2020-ல் பயிற்சி உதவித் தொகையை உயர்த்தக் கோரி மருத்துவ மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை எனக் கூறுகின்றனர். தற்போதுள்ள அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசின் கவனத்தை பெற முயல்கின்றனர் .

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button