தேர்தல்: சாமானிய மக்களின் மனநிலையும், எதிர்பார்ப்பும் !

தொகுதிப் பங்கீடுகள், ஆட்சிக்காக அறிவிக்கப்படும் செயல் திட்டங்கள், கடைசி நேர கடன் தள்ளுபடிகள், காவல்துறையால் கைப்பற்றப்பட்ட பரிசுப் பொருட்கள் என பரபரப்பான ஓட்டு அரசியலுக்கு மத்தியில் வாக்குரிமை, தேவை, மாற்றம், வளர்ச்சி சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கு மக்களின் பார்வை பின்வருமாறு.

Advertisement

குறிப்பு : இப்பதிவு மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் செய்தி தொகுப்பாகும். அரசியல் கருத்துக்கணிப்பு அல்ல.

“இந்த ஏழ்மை நிலை மாறும் அப்படினு நினைத்து தான் ஒவ்வொரு முறையும் ஓட்டு போடுவோம். கொரோனா சமயத்தில் அரிசி மூட்டை வாங்கிக் கொடுக்குறதில் இருந்து எல்லாமே போலீஸ்காரங்க தான் பண்ணாங்க, எந்த அரசியல் தலைவரும் எங்களை கவனிக்கவில்லை. விலைவாசி எல்லாம் ஏறிடுச்சு, நான் ஆட்டோ ஓடிட்டு இருக்கேன் பெட்ரோல் விலை ஏறிடுச்சு, விலை கம்மியான நல்லாயிருக்கும், நான் மக்கள் கிட்ட 10 ரூபாய் அதிகமா வெச்சு கேட்ட அவங்க நீங்க என்கிட்ட வாங்கிறீங்க நான் யார்கிட்ட வாங்க முடியும்னு கேக்குறாங்க அந்த மாறி இருக்கு இப்போ.

நான் மட்டும் தேர்ந்து எடுக்கறது இல்லை. எல்லாரும் ஒரு நல்ல தலைவரை தேர்ந்து எடுத்தாங்கன்னா எல்லாம் கொஞ்சம் மாறும் அப்படிங்கிற ஒரு எண்ணம் தான். அப்புறம் விவசாயம் முக்கியம், ஆட்சி செய்கின்ற யாரும் விவசாயத்தை கண்டுகொள்வதில்லை. எந்த ஒரு கட்சி விவசாயத்தை முன்னிலை படுத்துகிறதோ அவங்களுக்கு ஓட்டு போடலாம்னு இருக்கேன்” என்றார் ஆட்டோக்காரர்.

“நம்ம அத்தியாவசியம் அவங்க கிட்ட தானே இருக்கு. நமக்கு என்ன தேவை, என்ன தேவையில்லை என்று அவங்கதானே முடிவு பன்றாங்க அதனால நாம ஓட்டு போட்டு நல்ல தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டும். நாட்டில் பெரிய பிரச்சனையே விவசாயம் தான். கொரோனா காலத்துல எல்லாரும் எதைத் தேடி ஓடினோம் சாப்பாடு தானே? அவங்க வாழ்க்கையே போராட்டமாக இருக்கு, அதை சரி செய்ய வேண்டும். விவசாயிங்க முன்னேறினால் நாடு வளர்ச்சி அடையும். அடித்தட்டு மக்களுக்கு யாரு உதவுவதில்லை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்றாங்க. அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயினுடைய நலனை நினைக்கிறவங்களுக்கு தான் என் ஓட்டு” என உறுதியாகக் கூறினார் சாலையோர துணி வியாபாரி.

Advertisement

“எல்லா தடவையும் ஓட்டு போடுவோம். அது போட்ட தான் நாங்க இருக்கோம்னு தெரியும். நாம ஓட்டு போடலை என்றால் நாம செத்துட்டோம்னு பெயர் எடுத்துருவாங்க ” எனப் பேச ஆரம்பித்த இரண்டு பெண் சுகாதார தொழிலாளிகளிடம் நீங்கள் ஓட்டுப் போட்டால் என்ன மாற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ? உங்கள் கோரிக்கை என்ன என்ற கேள்விக்கு “ஏதோ ஒன்னு மாறிட்டு இருக்க வேண்டும். ஜெயலலிதா, கலைஞர் அப்படி மாறிட்டு இருக்கனும்” என்று கூறிய பதிலே பெரும்பான்மையான மக்களின் பார்வையாகவும் இருந்தது. மீண்டும் கேள்வியை அவர்களுக்குப் புரிய வைத்த உடன் இருவரும் சேர்ந்து கூறிய பதில் “நகைக்கடன் தள்ளுபடி.”

“ ஓட்டு போட்டால்தான் நமக்கு உரிமையே கிடைக்கும். பணத்துக்காக ஓட்டு போடக்கூடாது. நம்ம ஊருக்கு நல்லது நடக்கனும் என்றால், நல்ல மாற்றம் வேண்டுமென்றால் நல்ல அரசியல்வாதிகளைப் பார்த்து ஓட்டு போடணும். ரேஷன் கடைகளில் நல்ல அரிசி கிடைப்பதில் இருந்து எல்லாமே ஓட்டு போட்டால் தான் மாறும். மற்றபடி அடித்தட்டு மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அது நடக்காது. வேலை வாய்ப்பே இல்லையே. நல்ல படிச்சுட்டு சரியான வருமானம் இல்லாமல், குடும்ப பாரம் தாங்க முடியாமல் நிறைய பேர் மனநலன் பாதிக்கப்பட்டு இருக்காங்க. நான் 40 வருசமா உழைக்கிறேன் ஆனா எனக்கு சொந்த நிலம் கூட இல்லை. இந்த வளர்ச்சியை தான் அரசியல் தலைவர்கள் கொண்டுவரவேண்டும்” என தெளிவாகப் பேசினார் இளநீர் வியாபாரி.

கொரோனாவுக்கு அப்புறம் ஒண்ணுமே சரியில்ல. ஏதோ தெம்பு இருக்கு கடை போட்டேன். என் கூட ஸ்கூல்ல நல்ல சம்பளத்துக்கு வேலை செஞ்ச பெண்களா இப்போ அதுல பாதி கூட இல்லாம வீட்டு வேலை பாக்குறாங்க. இதுல, எங்க இருந்து தனியா சேர்த்து வைக்குறது ” என்றார் ஒரு தர்பூசணி வியாபாரி.

“நல்ல இருக்கனும்னா நல்லா இருக்குறதுக்கு உதவி செய்யனும். எம்.ஜி.ஆர் படம்லாம் பாத்துருக்கியா நீ ? எல்லாத்துக்கும் ஒவ்வொன்னு சொல்லிட்டு போனாருள்ள அவரு. அவரு சொன்னத வெச்சு தான் நாங்க வாழ்ந்தோ. அந்த மாறி நல்லது பன்றவங்க வரனு” என தன் கால அரசியலை சிலாகித்தார் ஒரு அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன்.

“கண்டிப்பா எல்லாரும் ஓட்டு போடணும். மனிதன்னு என்னைக்கு பிறந்தோமோ, ஓட்டு உன்னோட உரிமைன்னு கொடுத்துட்டான். பிறந்ததுல இருந்து காங்கிரஸ் கொள்கை தான் எங்களுக்கு. மத்த காட்சிகள் எல்லாம் சீட்டு ஆட்டம் மாறி வெறும் கோல்மால் தான். நான் எதைச் செய்தாலும் ஒன்னு மாறப்போறது இல்லை. விலைவாசி எல்லாம் குறையாது. எல்லாம் திருடங்க. நமக்கு நல்லது செய்யவே மாட்டாங்க” என அனுபவத்தை வெளிப்படுத்தியவர் சுமார் 70 வயதுடைய பெட்டிக்கடைக்காரர்.

“பெட்ரோலை விடுங்க, காய்கறி, நோட்டு புத்தகம் விலை என்னனு பாருங்க, ஓடிகிட்டே இருக்கணும்னா என்ன பண்றது ? யார் வந்து இந்த விலைவாசி எல்லாம் கட்டுப்படுத்துறாங்களோ அவங்க வரட்டும். யார் வந்தாலும் சரி.” என தன் அடிப்படைக் கோரிக்கையை முன்வைத்துக் காத்திருக்கிறார் செல்போனுக்கு “டெம்பர்கிளாஸ்” ஒட்டிக்கொண்டே.

இந்த பார்வைகள் வெறும் “மைக்ரோ ஸ்கோபிக் “ கருத்து தொகுப்புகள் அன்றி இந்தியாவின் 80% மக்களின் பிரதிநிதித்துவமாகும். தேர்தலால் தனக்கு இந்நாள் வரை மாற்றம் ஏற்பட்டதில்லை என தெரிந்து உடம்பில் சாட்டை அடித்தப்படியும், கண்ணாடி பாட்டில்களை சேகரித்துக்கொண்டும், வாக்காளர் அட்டையே இல்லாத மக்கள் என இந்த நவீன உலகம் கண்டுக்கொள்ளாத பல மனிதர்களுக்கும் சேர்த்து பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது வரவிருக்கும் ஓட்டு அரசியல்.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button