தமிழகத்தில் உயர்கிறது மின்கட்டணம்.. எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம் ?

தமிழ்நாட்டில் மின்துறையில் அதிகரித்து வரும் கடன் காரணத்தினாலும், ஒன்றிய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும் மின் கட்டண முறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

புதிய அறிவிப்பின்படி, ” தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19%) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை. அனைத்து வீட்டுகளுக்கும் 100 யூனிட்வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

வீடுகளில் 2 மாதங்களில் மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படுகிறது. 2 மாதங்களில் மொத்தம் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படுகிறது.

400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் கட்டணமாக மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படுகிறது. 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக மாதம் ஒன்றிற்கு ரூ.297.50 உயர்த்தப்படுகிறது. 600 யூனிட்களுக்கு ரூ.155-ம், 700 யூனிட்களுக்கு ரூ.275-ம் , 800 யூனிட்களுக்கு ரூ.395-ம் , 900 யூனிட்களுக்கு ரூ.565-ம் கூடுதல் கட்டணமாக உயர்த்தப்படுகிறது.

வீட்டு மின் உபயோகத்தில் 500 யூனிட் மாற்றம் : 

தற்பொழுது, வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணமாக மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மின் நுகர்வு ஆனது 500 யூனிட்டிலிருந்து, 501 யூனிட்டுகளாக அதிகரிக்கும் பொழுது அதற்கான மின் கட்டணத் தொகையானது 58.10% அதிகரித்து மொத்தம் ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் கூடுதலாக பயன்படுத்தினாலும் மின் நுகர்வோர் கூடுதலாக ரூ.656.60 செலுத்தி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றப்பட்டு உள்ளது.

மின் மானியத்தை விட்டுக் கொடுக்கும் திட்டம் : 

100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குறைக்கப்பட்ட மின்சாரத்திற்குரிய மின் மானியத்தை தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு வீட்டிற்கு ஒரு இனைப்பு : 

ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை/ குத்தகைக்கு விடப்பட்டதை தவிர மற்ற கூடுதல் மின் இணைப்பிற்கு மாதம் ரூ.225 வசூலிக்கப்படும்.

வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைகட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். அதற்கு மேல் யூனிட் ஒன்றிற்கு ரூ.70 பைசா கட்டணம் உயர்த்தப்படுகிறது.

கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.94,312 கோடியாக அதிகரித்து 31.03.2021 வரை ரூ.1,13,266 கோடியாக  உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader