தமிழ்நாட்டின் வெள்ளங்கள்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சும், உண்மையும் !

2023ல் பெய்த வரலாறு காணாத பெரு மழையால் ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் வட பகுதியும், தென் பகுதியும் வெள்ளத்தால் சூழ்ந்து மக்கள் பெரும் பாதிப்பிற்குள் சிக்கி உள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு வெள்ளம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது(15.20நிமிடம்), தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரில் வந்திருக்கும் மழை வெள்ளத்தைப் பற்றி Metrological சென்டர் டிசம்பர் 12 அன்றே தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்றும் பேசி இருக்கிறார்.

ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை வானிலை ஆய்வு மையம் டிச.12 அன்று வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழ்நாட்டில் லேசானது முதல் கன மழை (6 செ.மீ முதல் 11.5 செ.மீ வரை) பொழிவு இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டிசம்பர் 15 அறிக்கையில் மிக கனமழை பெய்யும் (20 செ.மீ வரை) என்று ‘ஆரஞ்சு அலர்ட்’  கொடுக்கப்பட்டு, 16ஆம் தேதியும் அதே எச்சரிக்கை தான் அளிக்கப்பட்டது.

ஆனால், 17ஆம் தேதி காலை 8:30 மணி முதல் 18ஆம் தேதி காலை 8:30 மணிக்குள் பெய்த மழை தான் மிகத்தீவிரமானது. அப்போது பெய்த மழையின் போது தான் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 94.6 செ.மீ மழை பெய்தது. அந்த மழை குறித்து ‘ரெட் அலர்ட்’ 17ஆம் தேதி மதியம் தான் வருகிறது.

மேலும் படிக்க : சரியாகத்தான் வேலை செய்கிறதா இந்திய வானிலை ஆய்வு மையம் ?

ஒன்றிய நிதியமைச்சர் கூறியது தவறான தகவல். டிசம்பர் 12ம் தேதி அறிக்கையில் “டிசம்பர் 12 மற்றும் 16 ஆம் தேதிகளில் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்” என்று தான் கூறியுள்ளது. இதில் மிக கனமழை, அதி கனமழை பற்றியோ, வெள்ளம் பற்றியோ எதுவும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் வந்த அறிவிப்புகள் மிக கனமழை பெய்யும் (ஆரஞ்சு அலர்ட்) என்று தான் தெரிவித்தன. அதி கனமழை பெய்யும் என்கிற அறிவிப்பு வெளியானதே மழை அதிகம் பொழிந்த நாள் (டிச.17) மதியம் தான் என்பதை அறிய முடிகிறது.

தேசிய பேரிடர் அறிவித்தது இல்லை : 

அடுத்ததாக 37.40வது நிமிடத்தில் பேசுகையில், தேசிய பேரிடர்வு என அறிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. அங்கு நடந்தது அப்படி இல்லை, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்தது தான் அப்படி என்று நாங்கள் சொல்லவில்லை. ஏனென்றால், தேசியர் பேரிடர்வு என்ற ஒன்றை மத்திய அரசு அறிவித்தது இல்லை. அந்த சிஸ்டமே இல்லை. ஆனால், மாநில அரசு பேரிடர் என அறிவிக்க நினைத்தால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறி இருந்தார்.

X post link | Archive link 

ஆனால், 1999ல் ஏற்பட்ட ஒரிசா புயல் பாதிப்பை “தேசிய பேரிடர்” என அப்போதைய பாஜக அரசு அறிவித்ததாகவும், அப்படி ஒரு நடைமுறை இல்லை என நிதியமைச்சர் பொய் சொல்கிறார் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இப்பதிவில் 1999 ஒரிசா புயல் பாதிப்பை இந்திய அரசாங்கம் தேசிய பேரிடராக அறிவித்தது என 1999ல் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பான OCHA வெளியிட்ட அறிக்கையை இணைத்துள்ளனர்.

ஆனால், 2002 நவம்பரில் OCHA வெளியிட்ட இறுதி அறிக்கையில் இந்திய அரசாங்கம் ஒரிசா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

நிர்மலா சீதாராமன் பதிவு : 

நிர்மலா சீதாராமன் டிசம்பர் 22ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில், ” இதற்கு முன்பும் எந்த ஒரு மாநிலத்திலும் நிகழ்ந்த எந்த ஒரு பேரிடரையும், இதுவரை எந்த மத்திய அரசாங்கமும் தேசியப் பேரிடராக அறிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்ததில்லை. தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய டிசம்பர் 2004 சுனாமியைக் கூட திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த UPA அரசு தேசியப் பேரிடராக அறிவிக்கவில்லை.

ஆகஸ்ட் 2013ல் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த UPA II அரசின் மத்திய உள்துறை இணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பாராளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார்: “…, வழிகாட்டுதல்களில் இயற்கைப் பேரழிவை தேசியப் பேரிடராக அறிவிக்க எந்த விதியும் இல்லை ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

X post link | Archive link

இதற்கு பதில் அளிக்கும் வகையில், 2004 சுனாமி பேரழிவிற்கு பிறகு தான் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ல் தொடங்கப்பட்டது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் வந்த பிறகும் தேசிய பேரிடர் என எங்கும் அறிவிக்கப்படவில்லை, அதற்கு முன்பாக 1999ல் ஒரிசா புயலின் போதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை.

NDRF நிதி vs நிர்மலா சீதாராமன் : 

தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதி(SDRF) பிரிவில் ஏற்கனவே அளிக்கப்பட்ட 450 கோடியும், இரண்டாவது தவணையாக 450 கோடியும் அளிக்கப்பட்டது. இவை வழக்கமாக அளிக்கப்படும் நிதியே. ஆனால், வெள்ள பாதிப்பிற்கு சிறப்பு நிதி எதுவும் அளிக்கவில்லை என்றும், தற்போதுவரை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (NDRF) இருந்து நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றிய அரசு மீது முன்வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஒன்றிய அரசிடம் கேட்ட கூடுதல் நிதி குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், அதற்காக மத்திய அரசு குழு ஒன்று வந்து ஆய்வு செய்த பின் உள்துறை அமைச்சரிடம் பேசிய பிறகு பரிந்துரைகள் செய்வார்கள், அதற்கான நடைமுறைகள் உள்ளது எனத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், 2021 மே 17ம் தேதி குஜராத் மாநிலத்தில் தாக்டே புயல் தாக்கிய போது மே 19ம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் புயல் பாதிப்பை ஆய்வு செய்தார். அதற்கு அடுத்தநாளே ரூ.1000 கோடி NDRF நிதியாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி இருக்க, தமிழ்நாட்டின் சென்னை மழை வெள்ள பாதிப்பையோ, தென் மாவட்ட வெள்ள பாதிப்பையோ பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரே பார்வையிட்டு சென்றனர். அப்படி இருந்தும், கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்றே கேள்வியே எழுகிறது.

தமிழ்நாடு வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்தால் தான் NDRF நிதி கிடைக்கும் எனத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், அது உண்மை அல்ல. புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் மாநில பேரிடர் நிவாரண நிதியையும் தாண்டி செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது NDRF நிதிக்கு தகுதி பெறுவர். 2020 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டிற்கு NDRF நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகையால், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடும் பேரிடராக(Calamity of severe nature) என்று அறிவிக்க வேண்டும் என்றும், நிவாரண நிதியாக 21 ஆயிரம் கோடியை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடமைகளையும், உறவினர்களின் உயிரையும் இழந்து அரசு நிவாரண உதவிகளை எதிர்நோக்கி இருக்கும் சூழலில் மாநில, ஒன்றிய அரசுகளின் மோதல் போக்கு பெருந்துயரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் துயரத்தையே அளிக்கிறது.

 

ஆதாரங்கள் : 

12th Dec: https://internal.imd.gov.in/press_release/20231218_pr_2700.pdf
13th Dec: https://internal.imd.gov.in/press_release/20231213_pr_2688.pdf
14th Dec: https://internal.imd.gov.in/press_release/20231214_pr_2690.pdf
15th Dec: https://mausam.imd.gov.in/Forecast/marquee_data/Press%20Release%2015-12-2023.pdf
16th Dec: https://internal.imd.gov.in/press_release/20231216_pr_2693.pdf
17th Dec: https://internal.imd.gov.in/press_release/20231217_pr_2695.pdf

Cyclone in Orissa: UNICEF Situation Report 3

India: Orissa Cyclone Appeal No. 28/1999 Final Report

Guidelines for National Disaster Response Fund (NDRF).pdf

LOK SABHA UNSTARRED QUESTION NO. 940

MONTHLY SUMMARY FOR THE CABINET FOR THE MONTH OF APRIL AND MAY, 2021.

Please complete the required fields.
Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader