தமிழ்நாடு vs குஜராத் மருத்துவ சேவையில் யார் முன்னோடி ?| ஆதாரத்துடன் அலசல் !

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அவலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ வசதி சமூக வலைதளங்களில் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதற்கிடையில், தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரவுகளை ஒப்பிட்டு சில பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

அதில், இரு மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மருத்துவர்களை கொண்ட நிலையங்கள் தமிழகத்தில் 73.5 சதவீதமும், குஜராத்தில் 23.6 சதவீதமும் இருக்கிறது, பெண் மருத்துவர்களை கொண்ட நிலையங்களில் தமிழகம் 72.7%, குஜராத் 29.7% ஆகவும், 24 மணி நேரமும் இயங்கும் நிலையங்கள் தமிழகத்தில் 89.3%, குஜராத்தில் 22.6% ஆகவும், பிரசவ அறையுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் 95.4%, குஜராத்தில் 80% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் , இந்திய அளவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மருத்துவர்கள் கொண்டவை 26.9%, பெண் மருத்துவர்களை கொண்டவை 27%, 24 மணி நேரமும் இயங்கும் நிலையங்கள் 39.2%, பிரசவ அறை கொண்ட நிலையங்கள் 69% இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் 2015-ம் ஆண்டு ஊரக சுகாதார புள்ளி விவரங்களின் அடிப்படையில் வெளியான அச்சிடப்பட்ட பக்கத்தில் இருந்தே மீம் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்தும், தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களின் சுகாதார வசதி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பல தரவுகளை தொடர்ந்து இங்கே காண்போம்.

Advertisement

ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) :

மத்திய அமைச்சகத்தின் 2015-16ம் ஆண்டு ஊரக சுகாதார புள்ளி விவர அறிக்கையின்படி, ” குஜராத்தில் உள்ள 1314 ஆரம்ப சுகாதார நிலையங்களில்(PHC) 310 நிலையங்கள் ( 23.6%) மட்டுமே 2 மருத்துவர்கள் உடனும், 390 நிலையங்கள் (29.7%) பெண் மருத்துவர் உடனும் இயங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 1368 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 1006 நிலையங்கள்(73.5%) 2 மருத்துவர்களை கொண்டும், 995 நிலையங்கள்(72.7%) பெண் மருத்துவரை கொண்டும் இயங்குகிறது(Health Manpower in Rural Areas-அட்டவணை 22).

இதுமட்டுமின்றி, குஜராத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 மருத்துவர்களை கொண்டவை 3 மட்டுமே, 4 மருத்துவர்கள் கொண்டவை ஏதுமில்லை. ஆனால், தமிழகத்தில் 3+ மற்றும் 4+ மருத்துவர்களை கொண்டவை 72 மற்றும் 162 சுகாதார நிலையங்கள்  இயங்குவதாக ” குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்களே இல்லாமல் குஜராத்தில் 107 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

பிரசவ அறைகளுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் குஜராத்தில் 994(75.6%) ஆகவும், தமிழ்நாட்டில் 1287 (94.1%) ஆகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது(Status of Facilities available-அட்டவணை 36). மேற்காணும் தரவுகள் இடம்பெற்ற ஊரக சுகாதார புள்ளி விவர அறிக்கையில் 24×7 மணி நேரமும் இயங்கும் சுகாதார நிலையங்கள் குறித்த தரவுகள் மட்டும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்திய அளவில் உள்ள 25,354 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6,832 மட்டுமே(26.94%) இரு மருத்துவர்களை கொண்டு இயங்குகிறது, 6,835 நிலையங்கள்(26.95%) மட்டுமே பெண் மருத்துவர்கள் உடன் இயங்குகிறது. பிரசவ அறையுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 70.9% உள்ளன.

ஆக, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் குஜராத் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ சேவை நிலை குறித்த தரவுகள் ஆனது நமக்கு கிடைத்த 2015-16 ஆண்டு தரவுகளுடன் பொருந்தி உள்ளன. தற்போதைய புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி எழுப்புவது இயல்பானதே. ஆகையால், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையே மருத்துவத்துறையில் இருக்கும் பிற ஒப்பிட்டு  தகவல்களையும் காணலாம்.

ஒரு மருத்துவர் :

2018-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியான தி ஹிந்து ஆங்கில செய்தியில், ” குஜராத் மாநிலத்தில் உள்ள 1,392 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்(100%) ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாகவும், அதே தமிழகத்தில் உள்ள 1,362 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 14.4% மட்டுமே ஒரு மருத்துவருடன் இயங்குவதாக ” என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் ராஜ்ய சபாவில் இத்தகவலை அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது

மருத்துவமனை படுக்கைகள் :

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லை என்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று. சமீபத்திய CDDEP வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, இந்தியாவின் பொது மருத்துவமனைகளில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை 51.74 ஆக இருக்கிறது.

இதில், தமிழகத்தின் பொது மருத்துவமனைகளில் 87.24 ஆகவும், குஜராத்தின் பொது மருத்துவமனைகளில் 30.58ஆகவும் மட்டுமே படுக்கைகள் இருப்பதாக தரவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2018ல் pib.gov.in வெளியிட்ட தரவுகளின்படி, ” குஜராத்தில் உள்ள மொத்த அரசு பொது மருத்துவமனைகளின் (PHC, CHC, SDH, DH) எண்ணிக்கை 2,236. அதிலுள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 41,129. அதேபோல், தமிழகத்தில் உள்ள 2,581 அரசு பொது மருத்துவமனைகளில் 72,616 படுக்கைகள் உள்ளன.

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை :

2018ம் ஆண்டு pib.gov.inல் வெளியான தகவலின்படி, குஜராத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 3,050 மருத்துவ சீட்களும் உள்ளன. அதே தமிழகத்தில் 25 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 3,250 மருத்துவ சீட்களும் இருந்தன. 2020-ல் குஜராத் அரசு 5 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க பரிந்துரைத்து இருந்தது. இதேபோல், 2020-ல் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதாக அறிவிப்பு வெளியாகியது.

எம்எம்ஆர், ஐஎம்ஆர் விகிதம் :

இந்தியாவில் பிரசவத்தின் போது ஏற்படும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை(MMR) குறைப்பதை அரசு முயன்று வருகிறது. 2020ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்ட தகவலின் படி, 2030க்குள் இந்தியாவில் 1,00,000 குழந்தை பிறப்பின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் 70 ஆக குறைக்க வேண்டும் எனும் இலக்கை நிர்ணயித்து உள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தின் எம்எம்ஆர் விகிதம் 60 ஆகவும், குஜராத்தின் விகிதம் 75 ஆகவும் உள்ளது.

ஐஎம்ஆர் விகிதம் ஆனது பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பு விகிதம் என்பதைக் குறிக்கிறது. 2018-ம் ஆண்டு தரவுகளின்படி, தமிழகத்தின் ஐஎம்ஆர் 15(1000 குழந்தைகளுக்கு) ஆகவும், குஜராத்தின் ஐஎம்ஆர்  28 ஆகவும் இருந்தது.

மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் :

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் 1:1000 ஆக இருக்க வேண்டும். 2018ல் CAG வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் 1:2092 ஆக இருப்பதாகவும், இது இந்தியாவின் விகிதமான 1: 1613ஐ விட குறைவாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர்-மக்கள் தொகை விகிதத்தில் இந்திய அளவில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது. 2018ம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில், ” தமிழகத்தில் மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் 1:253 ஆக இருப்பதாக ” கூறப்பட்டுள்ளது.

Links :

Hospitals in the country

https://nrhm-mis.nic.in/Pages/RHS2016

Medical Infrastructure in India 

Only one doctor in most primary health centres

Infant mortality rate in Gujarat fell by two points in 2019

India’s maternal mortality ratio declines by 7.4%, Rajasthan, UP show most reduction

6 states have more doctors than WHO’s 1:1,000 guideline 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button