நாட்டிலேயே அதிக ஓபிசி, எஸ்.சி பிரிவு உயர்கல்வி ஆசிரியர்கள் கொண்ட தமிழ்நாடு! | சமூகநீதியின் முன்னோடி !

மத்திய அரசு வெளியிட்டு உள்ள 2020 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி குறித்தான அறிக்கையில் இந்தியாவிலேயே அதிக அளவிலான ஆசிரியர்களை தமிழ்நாடு கொண்டுள்ளது.
இந்திய கல்வி அமைச்சகம் உயர்கல்வி குறித்தான விரிவான கணக்கெடுப்பு அறிக்கையை (AISHE) வெளியிட்டது. உயர்கல்வி சேர்க்கை, கல்வி நிறுவனங்களின் விவரம், கல்வி தரம், பேராசிரியர்கள் குறித்தான விவரங்கள் என பல்வேறு கோணங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கையின் படி, உயர்கல்வி மாணவ சேர்க்கையில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எவ்வாறு சிறந்து விளங்குகிறது போன்ற விவரங்களை ஏற்கனவே யூடர்ன் செய்தியை வெளியிட்டு இருந்தது.
தற்போது இந்திய அளவில் உள்ள பல்வேறு விதமான உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள் குறித்தான சில முக்கிய தகவல்கள் :
- AISHE-யின் படி இந்தியாவில் 1,043 பல்கலைக்கழகங்கள், 42,343 கல்லூரிகள் மற்றும் 11,779 தனியாக செயல்படும் கல்வி நிறுவனங்கள் (பாலிடெக்னிக் , நர்சிங் , டீச்சர் ட்ரைனிங் போன்றவை) உள்ளன.
- 396 பல்கலைக்கழகங்கள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன. 420 பல்கலைக்கழகங்கள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. 110 பல்கலைக்கழகங்கள் இரட்டை முறை படிப்பை (தொலைதூரக் கல்வி மற்றும் வழக்கமான நேர்முகக் கல்வி) அளிக்கின்றன.
- பெண்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 17. (அதிகப்படியாக ராஜஸ்தானில் 3, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிற்கு 2 பல்கலைக்கழகங்கள் உள்ளன).
- இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளை உடைய முதல் 8 மாநிலங்கள் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்.
- இந்தியாவில் மொத்தம் 11.53 லட்சம் மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். அதிகப்படியாக தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.
- உயர்கல்வியில் மொத்த சேர்க்கை 38.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 19.6 மில்லியன் மாணவர்கள், 18.9 மில்லியன் மாணவிகள். மாணவிகளின் மொத்த சேர்க்கை சதவீதம் 49%
- மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 15,03,156. இதில் சுமார் 57.5% ஆண் ஆசிரியர்கள் மற்றும் 42.5% பெண் ஆசிரியர்கள். இவர்களில் பெரும்பான்மையான ஆசிரியர்கள் உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் ஆக உள்ளனர்.
- இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான மாணவர்கள் (5,57,284) அரசு கல்லூரிகளில் படித்து பயனடைகிறார்கள்
காலேஜ் டென்சிட்டி :
காலேஜ் டென்சிட்டி என்பது ஒரு லட்சம் மாணவர்களுக்கு எவ்வளவு கல்லூரிகள் இருக்கிறது என்பதை குறிக்கும் அளவு. இந்த அளவு தான் ஒரு மாநிலம் அல்லது ஒரு நாடு கல்வியை மக்களுக்கு எவ்வளவு தூரம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும். இந்தியாவின் காலேஜ் டென்சிட்டி அளவு 30.
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எண்ணிக்கையில் தமிழ்நாடு :
இந்தியாவிலேயே கல்லூரிகள் அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழ்நாடு 6-ம் இடத்தில் உள்ளது.
கிட்டத்தட்ட 68 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவர்களை உடைய மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் காலேஜ் டென்சிட்டி மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும் இன்னும் போதிய அளவை எட்டவில்லை என்பதையே இந்த எண்ணிக்கைகள் குறிக்கின்றன.
பல்கலைக்கழகங்கள் :
பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை அதிக பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாக ராஜஸ்தான் மாநிலம் (89) உள்ளது, அடுத்தப்படியாக உத்தரப்பிரதேசம் (81), குஜராத் (76), கர்நாடகா (69) உள்ளன. தமிழ்நாட்டில் 59 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இன்ஸ்டிடியூட் ஆப் நேஷனல் இம்போர்ட்டன்ஸ் எனப்படும் IIT ,NIT ,NIFT போன்ற தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் தமிழ்நாட்டு எண்ணிக்கை 7. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் அதிகபட்சமாக 9 உள்ளன.
அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 21 . அதிகப்படியாக கர்நாடகாவில் 30-ம், குஜராத் மற்றும் உ.பிரதேசத்தில் 28-ம் உள்ளன.
இந்தியாவிலேயே அதிகமான (26) தன்னிச்சையாக செயல்படும் (Deemed) பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது.
பொது பல்கலைக்கழகம் (அனைத்து துறைகளையும் உள்ளடக்கியது) அதிகமாக உள்ள மாநிலமாக ராஜஸ்தான் (50) உள்ளது. தமிழ்நாட்டின் எண்ணிக்கை 22. குஜராத் மற்றும் உ.பிரதேசத்தில் முறையாக 42 ம்ற்றும் 47 உள்ளன.
மருத்துவ பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் நான்கும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் தலா 8-ம் உள்ளது.
கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் :
இந்தியாவில் அதிக அலோபதி மருத்துவக் கல்லூரி (42), துணை மருத்துவக் (Paramedical) கல்லூரி (36) மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரி (455) கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
தமிழ்நாட்டின் மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 2610. பிற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 914. அதிகபட்சமாக உ.பிரதேசத்தில் 7788 கல்லூரிகள் உள்ளன. ஆந்திராவில் 2750 கல்லூரிகள் உள்ளன.
அதிக கலைக் கல்லூரிகள் உள்ள மாநிலம் உ.பிரதேசம் (200), மகாராஷ்டிரா (120). தமிழ்நாட்டில் 59 கலோரிகளே உள்ளன. மக்கள் தொகை அடிப்படையாகக் கொண்டாலும் கர்நாடகா (73), பஞ்சாப் (113) கல்லூரிகளைக் கொண்டுள்ளது.
கர்நாடகாவிற்கு (256) அடுத்து அதிக நர்சிங் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது .
இந்தியாவில் உள்ள மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை (AISHEயின் படி) 39955. இதில் 31390 கல்லூரிகள் தனியார் கல்லூரிகளே. வெறும் 8565 கல்லூரிகள் தான் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
தமிழ்நாட்டை பொருத்தவரை 2610 கல்லூரிகளில் 357 கல்லூரிகளே அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெறும் 4 அரசு கல்லூரிகளே புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. அதே ஆண்டில் ராஜஸ்தானில் 45 கல்லூரிகளும், கர்நாடகாவில் 18 கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 36 தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
உயர்கல்வி ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் :
உயர்கல்வி ஆசிரியர்களைப் பொருத்தவரை சாதி ரீதியாக அகில இந்திய மட்டத்தில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொதுப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்களே(56%), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆசிரியர்கள் 32.1% உள்ளனர். SC பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள் 9 % மற்றும் பழங்குடியின ஆசிரியர்கள் வெறும் 2.4% மட்டுமே உள்ளனர். முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 5.6 சதவீதமும், பிற சிறுபான்மை மதங்களை சேர்ந்தவர்கள் 9 சதவீதமும் உள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகப்படியான ஓபிசி பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர். SC ,ST பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழ்நாட்டில் தான் அதிக சதவீதத்தில் உள்ளனர்.
கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் கணக்கெடுப்பில் குறைவாக உள்ள தமிழ்நாடு, ஆசிரிய- மாணவருக்கான விகிதத்தில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உள்ளது .
PUPIL-TEACHER RATIO -PTR எனப்படும் இந்த விகிதத்தில் இந்தியாவின் சராசரி 28 (பாலிடெக்னிக் போன்ற தனியாக செயல்படும் கல்வி நிறுவனங்களை தவிர்த்து பார்த்தால்) . அவற்றையும் சேர்த்து பார்த்தால் 26. அதாவது 26/28 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனர். தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனர்.
ஆசிரியர்கள் விவரம் – தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் ஒப்பீடு :
இந்தியாவிலேயே அதிக உயர்கல்வி ஆசிரியர்களை கொண்ட மாநிலமாகவும், அதிக ஓபிசி மற்றும் எஸ்சி பிரிவு ஆசிரியர்களை கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது. அதுமட்டும் அல்ல அதிக பெண் ஆசிரியர்களை கொண்ட மாநிலமும் தமிழ்நாடு தான். இந்தியாவிலேயே அதிக முஸ்லீம் ஆசிரியர்களை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், அதிக பிற சிறுபான்மை மதத்தை சேர்ந்த ஆசிரியர்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடும், கேரளாவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
Link :
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.