புதிய கல்விக் கொள்கையின் 2035 இலட்சியத்தை இப்போதே அடைந்த தமிழ்நாடு !

உயர்கல்வி சேர்க்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும் (Gross Enrollment Ratio)  மொத்த சேர்க்கை விகிதத்தில் (ஜி.இ.ஆர்) 51.4 சதவீதத்துடன் இந்திய அளவில் மிகப் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தன் முதன்மை நிலையை தக்க வைத்துள்ளது தமிழ்நாடு. 

2019-2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் உயர்கல்வி நிலை பற்றிய ஆய்வை வெளியிட்டது  AISHE (உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு). இதில் அதிக மக்கள் தொகை உடைய பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சிக்கிம் (75.8) மற்றும் சண்டிகர் (52.1) மாநிலத்துக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் உள்ளது. 

இந்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் உயர்கல்வி குறித்தான சில முக்கிய தகவல்கள் :

  • இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளை உடைய மாநிலங்களாக  உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு,மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் முதல் 8 இடங்களை பிடித்துள்ளது. 

  • இந்தியாவில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்) 27.1 (புதிய கல்விக் கொள்கையின் மூலம் 2035ல் 50% அடைய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதனை 2020-லேயே எட்டியுள்ளது தமிழ்நாடு).
  • இந்தியாவில் அதிகப்படியான மாணவர்கள் பி.ஏ, பி.எஸ் சி. மற்றும் பி.காம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இளங்கலை அளவில் 32.7% மாணவர்கள் கலை / மனிதநேயம் / சமூக அறிவியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16%, வர்த்தகம் பாடப்பிரிவில் 14.9% மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் 12.6% சேர்ந்துள்ளனர்.
  • 37.27 லட்சம் மாணவர் சேர்க்கையுடன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் படிப்பு இந்திய அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளது. இதில் ஆண் மாணவர்களின் பங்கு 70.8%,  பெண் மாணவர்களின் பங்கு  29.2%.
  • இதில் அதிகப்படியாக 9.3 லட்சம் மாணவர்கள் கணினி பொறியியல் துறையிலும், 6.8 லட்சம் மாணவர்கள் மெக்கானிக்கல் பொறியியல் துறையிலும், 6.1 லட்சம் மாணவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறையிலும், 4.8 லட்சம் மாணவர்கள் சிவில் இன்ஜினியரிங் துறையிலும், தகவல் தொழில்நுட்பம் துறையில் 7.67 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • மொத்த உயர்கல்வி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் 14.7%, பழங்குடியின மாணவர்கள் 5.6%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை (OBC) சேர்ந்த மாணவர்கள் 37% , 5.5% மாணவர்கள் முஸ்லிம் சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்களாகவும் , 2.3% மாணவர்கள் பிற மத சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்களாகவும் உள்ளனர்.  
  •  78.6% க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தனியார் கல்லூரிகளாகவே (அரசு உதவி பெரும் கல்லூரிகளையும் சேர்த்து) உள்ளன; ஆனால் அவற்றின் மொத்த சேர்க்கை விகிதம் 66.3% மட்டுமே.

தமிழக உயர்கல்வி மாணவர் சேர்க்கை மற்றும் தேர்ச்சி எண்ணிக்கை ஒப்பீட்டு ரீதியாக :

மொத்த உயர்கல்வி சேர்க்கை எண்ணிக்கையில் தமிழ்நாடு 22,75,290 மாணவர்களுடன் இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் 47,66,439 மாணவர்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் 30,09,419 மாணவர்களுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. 

இதில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலைமை என்னவென்றால், மாநில பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலேயே பாதிக்கும் மேலான மாணவ சேர்க்கை இருந்துள்ளது.  

இந்திய அளவில் ஒப்பீட்ட அளவில் அதிகப்படியான மாணவர் சேர்க்கையை கொண்டுள்ள  மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா. இந்த 6 மாநிலங்கள் தான்  இந்தியாவில் மொத்த மாணவர் சேர்க்கையில் கிட்டத்தட்ட 53.8%  பங்கை கொண்டுள்ளன. மீதமுள்ள 31 மாநிலங்களில் (யு.டி.க்கள் உட்பட) மொத்த மாணவர் சேர்க்கை சதவீதம் 46.2% மட்டுமே உள்ளது. 

ஆறு மாநிலங்களுடன் தமிழ்நாடு ஒப்பீடு : 

(குஜராத் மாடல் எனும் பரப்புரை தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்ததற்காக  மட்டும்  அந்த மாநிலமும் சேர்க்கப்பட்டுள்ளது.)   

இளங்கலை பட்டப்படிப்பில் குஜராத், ம.பிரதேசம் மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஆண் பெண் சேர்க்கை விகிதத்தில் (ஆண்கள் அதிகமாக) சிறிய அளவிலான வேறுபாடே உள்ளது. இந்த ஆறு மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் இந்த இடைவெளி மிக்க குறைவாகவே உள்ளது. 

இதற்கு நேர்மாறாக, முதுகலை சேர்க்கையில் பெண்கள் எண்ணிக்கையே அனைத்து மாநிலங்களிலும் அதிகப்படியாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த இடைவெளியும் மிக அதிகம். 

சாதி ரீதியான பிரிவுகளின் அடிப்படையில் மாணவ சேர்க்கை விவரம் :

இந்தியாவிலேயே எஸ்.சி பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் உத்தர பிரதேசமாகும். அம்மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிக  எஸ்.சி பிரிவு மாணவர்கள் தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படித்து வருகின்றனர். அதுபோல உ.பி க்கு அடுத்தபடியாக  அதிக OBC மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 

மாநில வாரியாக விடுதிகள் மற்றும் மாணவர் வசிக்கும் எண்ணிக்கை விவரம் :

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுள்கையில் தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் அதிக எண்ணிக்கையில் விடுதியில் தங்கி படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அப்டேட் :

புதிய கல்விக் கொள்கையின் மூலம் ஜி.இ.ஆர் வீதம் 2030ல் 50% அடைய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது என குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், அது 2030-ல் இல்லை, 2035 என்பதால் திருத்தி உள்ளோம். 

Please complete the required fields.
Back to top button