அரசு பணிகளில் வெளிமாநிலத்தவருக்கான சட்ட திருத்தம், இடஒதுக்கீடு பற்றிய கேள்விகளும் பதில்களும் !

தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில் வெளி மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு வேலை தமிழருக்கே மற்றும் தமிழ்நாட்டை விட்டு வெளிமாநில பணியாளர்கள் வெளியேற்றுங்கள் என்பது போன்ற பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருவதை கண்டிருப்பீர்கள். இது பல மாநிலங்களிலும் எழும் குரலே. அதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பான கேள்விகளையும், பதிலையும் தொடர்ந்து படிக்கவும்.
1. 2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு மற்ற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வேலைக்கு சேரலாம் என்ற சட்டத்தை மாற்றி அமைத்ததா ?
தவறான தகவல். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், இந்திய நாட்டில் எங்கு பிறந்திருந்தாலும் எந்த மாநில வேலைக்கும் விண்ணப்பிக்க முடியும். எனினும், அங்கு இருக்கும் சில விதிகளுக்கு உடன்பட வேண்டி இருக்கும். உதாரணமாக, அந்த மாநிலத்தின் வட்டார மொழியை எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும் (குறிப்பிட்ட கால அவகாசம் கூட வழங்கப்படும்) மற்றும் அந்த மாநிலத்தில் 5-15 வருடங்கள் (ஒவ்வொரு மாநிலத்திற்கும் வருட அளவு மாறுபடும்) வாழ்ந்ததற்கு இருப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விரிவாக படிக்க : தமிழக அரசு தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் சேர 2016-ல் சட்ட திருத்தமா?
தமிழக அரசு தேர்வுகளில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கும் வகையில் 2016-ல் சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லை என கடந்த ஆண்டே விரிவான கட்டுரை ஒன்றை நாம் வெளியிட்டு இருக்கிறோம்.
2. மற்ற மாநிலத்தில் இருந்து வேலைவாய்ப்புக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு வந்தால் அவர்களுக்கு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுமா?
பிற மாநிலத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு வருபவர்கள் பொதுப்பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும். அவர்கள் BC, MBC, SC, ST-யாக மற்ற மாநிலத்தில் கருதப்பட்டாலும், குறிப்பிட்ட மாநிலத்தில் பொதுப்பிரிவில் மட்டுமே போட்டியிட முடியும். மாநிலங்கள் வாரியாக OBC சமூகங்களை இந்திய அரசின் NCBC இணையதளத்தில் காணலாம்.
3. மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை என்று சட்டம் இயற்ற முடியுமா ?
அம்மாநில மக்களுக்கான முன்னுரிமை வழங்கும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்றினாலும், அது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக இருக்கும். உச்சநீதிமன்ற வழக்கிற்கு இதுபோன்ற சட்டங்கள் செல்கையில் சட்டம் செல்லாது என அறிவிக்கப்படும்.
4. மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு மாநில மக்களுக்கு முன்னுரிமை என்ற சட்டம் இயற்றும் அதிகாரம் யாருக்கு உள்ளது ?
லோக் சபா, ராஜ்ய சபா என இரண்டிலும் சட்டம் உருவாக்கி அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இந்த சட்டத்தை உருவாக்கலாம். அதற்கு, மத்திய அரசு மற்றும் மற்ற மாநிலங்களின் ஆதரவும் வேண்டும்.
5. மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வரும் வரை இதை நிறைவேற்ற மாற்றுவழி என்ன ?
இந்தியாவில் காஷ்மீர் மட்டுமே மாநில சுயாட்சி கொண்ட ஒரே மாநிலம். அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, நிலம் வாங்குவது மற்றும் பல மத்திய அரசின் சட்டங்கள் எதுவும் அங்கு செல்லாது. எந்த சட்டம் உள்ள வர வேண்டுமாயின் அம்மாநிலம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது சாத்தியம். ஆனால், 2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. மாநில சுயாட்சி தான் இதுபோன்ற மற்ற பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக இருக்கும்.
நன்றி: இளையதலைமுறை
Proof links :
http://www.stationeryprinting.tn.gov.in/extraordinary/2016/197A_Ex_IV_1.pdf
https://indianexpress.com/article/india/how-10-states-1-ut-recruit-for-government-jobs-6560664/
http://www.ncbc.nic.in/user_panel/centralliststateview.aspx
priority-certificate-alone-does-not-guarantee-right-for-job-preference
job-quota-for-locals-an-idea-whose-time-may-not-come
domicile-based-job-quota-the-law-sc-rulings-and-special-cases
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.