This article is from Mar 12, 2021

தமிழக எம்எல்ஏக்கள் 33% பேர் கிரிமினல் வழக்கு கொண்டவர்கள் – ADR தகவல் !

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் பிரச்சாரங்கள் பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கையில், தமிழக சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய எம்எல்ஏக்கள் மீதான குற்ற பின்னணி, சொத்து, கல்வி உள்ளிட்ட விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு(ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு எலெக்சன் வாட்ச் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

அறிக்கையின் மூலம் வெளியான சில முக்கிய தகவல்கள் பின்வருமாறு,

தமிழகத்தில் ஆய்வு செய்யப்பட்ட 204 எம்.எல்.ஏக்களில் 68 எம்.எல்.ஏக்கள் (33%) தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் குறித்து தாங்களே தெரிவித்து இருக்கிறார்கள். இதில் 38 எம்.எல்.ஏக்கள் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கொலை முயற்சி தொடர்பான வழக்குகளை (IPC SECTION 107) கொண்ட எம்.எல்.ஏ.க்கள் மட்டும் 8 பேர். 2 எம்.எல்.ஏ.க்களின் மேல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன (IPC SECTION 354 AND 509).

கட்சி ரீதியாக பார்க்கையில், திமுகவில் உள்ள 86 பேரில் 40 எம்.எல்.ஏ.க்களின் மீதும், அஇஅதிமுகவில் உள்ள 109 பேரில் 23 எம்.எல்.ஏ.க்களின் மீதும், காங்கிரஸில் உள்ள 7 எம்.எல்.ஏ.க்களின் மீதும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளது.

அதேபோல், திமுகவில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்களின் மீதும், அஇஅதிமுகவில் உள்ள 13 எம்.எல்.ஏ.க்களின் மீதும் , காங்கிரஸில் உள்ள 2 எம்.எல்.ஏ.க்களின் மீதும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் மீதும் தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளது.

204 எம்.எல்.ஏ.க்களில் 157 பேர் அதாவது 77% பேர் கோடீஸ்வரர்கள் ஆக உள்ளனர். திமுகவில் 74 எம்.எல்.ஏ.க்களும், அஇஅதிமுகவில் 76 எம்.எல்.ஏ.க்களும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

பதவியில் இருக்கும் ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.05 கோடி. 109 அதிமுக எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ3.49 கோடி, 86 திமுக எம்.எல்.ஏ-வின் சராசரி சொத்து மதிப்பு ரூ 9.49 கோடி. 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ3.72 கோடியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதில், 204 பேரில் 27 (13%) எம்.எல்.ஏக்கள் வருமான வரி விவரங்களை அறிவிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 89 (44%) . 110 (54%) எம்.எல்.ஏ.க்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கல்வித் தகுதி இருப்பதாக அறிவித்துள்ளனர். 204 எம்.எல்.ஏக்களில், 17 (8%) எம்.எல்.ஏ.க்களே பெண்கள்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 4 இடங்கள் காலியாக உள்ளன. தெளிவான ஆவணங்கள் மற்றும் போதுமான பத்திரங்கள் இவ்வறிக்கையை தாக்கல் செய்யும்போது கிடைக்காததால் மீதமுள்ள 26 எம்.எல்.ஏ.க்களை ஆய்வு செய்யவில்லை.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கும் நிலையில் வெளியான ஆய்வறிக்கை, கடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் மீதான குற்ற பின்னணிகள், சொத்து மதிப்புகள் போன்றவற்றை வாக்காளர்கள் அறியும் வகையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது தங்களின் கல்வி, சொத்து, குற்ற வழக்குகள் உள்ளிட்ட விவரங்களை வழங்குகிறார்கள்.  தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் பற்றி வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் இனையதளத்தில் இருந்து கிடைக்கும் தகவலை மையமாக வைத்து இந்த அறிக்கையை வெளியிடுவதாக ஏடிஆர் தெரிவித்துள்ளது.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)

Links : 

Tamil Nadu Assembly Election 2016: Analysis of Criminal Background, Financial, Education, Gender and other details of Sitting MLAs

Please complete the required fields.




Back to top button
loader