தமிழகத்தின் 60% எம்.எல்.ஏக்கள் மீது குற்ற வழக்குகள், 86% பேர் கோடீஸ்வரர்கள் – ADR அறிக்கை

2021 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் குற்ற பின்னணி, சொத்து மதிப்பு, கல்வி உள்ளிட்ட விவரங்களை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு(ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு எலெக்சன் வாட்ச் ஆகியவை இணைந்து சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.
#TamilNaduAssemblyElections2021: Analysis of Criminal Background, Financial, Education, Gender and Other Details of Winning Candidates
Full report: https://t.co/jiFMqBAW8X
— ADR India & MyNeta (@adrspeaks) May 5, 2021
தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 224 எம்.எல்.ஏக்கள் வேட்புமனு தாக்கலில் அளித்த விவரங்களின் அடிப்படையில் இவ்அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
224 எம்.எல்.ஏக்களில் 134 பேர் (60%) தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். இதில் 57(25%) எம்.எல்.ஏக்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.
கட்சி வாரியாக பார்க்கையில், திமுகவின் 125 எம்.எல்.ஏக்களில் 96 (77%) பேர், காங்கிரசின் 16 எம்.எல்.ஏக்களில் 12 (75%)பேர், அதிமுகவின் 66 எம்.எல்.ஏக்களில் 15 (23%) பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 4(80%) பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 4 எம்.எல்.ஏக்களில் 3(75%) பேர், பாஜகவின் 4 எம்.எல்.ஏக்களில் 2(50%) பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 (100%)எம்.எல்.ஏக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தீவிர குற்ற வழக்கு கொண்டவர்களை கட்சி வாரியாக பார்க்கையில், திமுகவின் 125 எம்.எல்.ஏக்களில் 39 (31%) பேர், காங்கிரசின் 16 எம்.எல்.ஏக்களில் 6 (38%)பேர், அதிமுகவின் 66 எம்.எல்.ஏக்களில் 5 (8%) பேர், பாட்டாளி மக்கள் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களில் 3(60%) பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 4 எம்.எல்.ஏக்களில் 1(25%) பேர், பாஜகவின் 4 எம்.எல்.ஏக்களில் 2(50%) பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 1 (50%) ஆக உள்ளனர்.
2021-ல் வெற்றி பெற்ற 224 எம்.எல்.ஏ.க்களில் 192 பேர் (86%) கோடீஸ்வரர்கள் ஆக உள்ளனர். திமுகவில் 111(89%) எம்.எல்.ஏக்களும், அஇஅதிமுகவில் 58(88%) எம்.எல்.ஏக்களும், காங்கிரசில் 14(88%) பேரும், பாட்டாளி மக்கள் கட்சியில் 3(75%) பேரும், பாஜகவில் 3(50%) பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 2 (50%) பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1 (50%) பேரும் 1 கோடிக்கும் அதிகமான மதிப்பில் சொத்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர். 5 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட எம்எல்ஏக்கள் 103 பேர் உள்ளனர்.
ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.27 கோடியாக உள்ளது. 125 திமுக எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ 12.96 கோடி, 66 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ11.78 கோடியாக இருக்கிறது.
இதேபோல், 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ16.57 கோடி, பாட்டாளி மக்கள் கட்சி 5 எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ2.22 கோடி, பாஜகவின் 4 எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ12.14கோடி, 4 விசிக எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.05 கோடி, 2 சிபிஐ எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ2.61 கோடி, 2 சிபிஐ(எம்) எம்.எல்.ஏ-க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12 லட்சமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 234 எம்.எல்.ஏ-க்களில் 224 எம்.எல்.ஏ-க்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஏடிஆர் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இவ்வறிக்கையை தாக்கல் செய்யும் போது, திமுகவின் 8 எம்எல்ஏக்கள், காங்கிரசின் 2 எம்எல்ஏக்களின் தெளிவான ஆவணங்கள் மற்றும் போதுமான பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்காததால் ஆய்வு செய்யவில்லை எனக் கூறியுள்ளனர்.
Link :