தமிழகத்தை நெருங்கிய கருப்பு பூஞ்சை.. மருந்து தட்டுப்பாட்டை சமாளிக்குமா தமிழக அரசு ?

கொரோனா பாதிப்பிற்கு இடையே மியூகோர்மைகோசிஸ்(mucormycosis) என அழைக்கப்படும் தீவிரமான அரிய வகை பூஞ்சை தொற்று தமிழகத்திலும் பாதிப்பை துவங்கி இருக்கிறது.

Advertisement

கருப்பு பூஞ்சை” என அழைக்கப்படும் இந்த வகை பூஞ்சை தொற்று கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலைப் பாதிக்கும் இந்த பூஞ்சை நோய் தீவிர சர்க்கரை நோய் உடையவர்கள், புற்றுநோய் நோயாளிகள் அல்லது எச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளவர்கள் போன்ற கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தலைவலி, கண்கள் மற்றும் மூக்கில் உள்ள சைனஸின் வீக்கம் அல்லது பிற பார்வை தொந்தரவுகள், முகங்கள் கருத்தல், முக உணர்வின்மை, தாடை வலி மற்றும் பற்கள் தளர்வது போன்ற அறிகுறிகளுடன் இந்த தொற்று ஏற்படுகிறது.

இந்தியாவில் கர்நாடகா, உத்தரகாண்ட், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, ஹரியானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் “கருப்பு பூஞ்சை” தொடர்பான பாதிப்புகள் பதிவாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்நோயினால் இரண்டு பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குஜராத்தின் ஐந்து நகரங்களில் எட்டு முக்கிய மருத்துவமனைகளில், தற்போது குறைந்தது 1,163 மியூகோர்மைகோசிஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 100க்கும் அதிகமானோரும், கர்நாடகாவில் இதுவரை 97 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அம்மாநில அரசு மருத்துவமனையில் இதற்கான பிரத்யேக சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு மியூகோர்மைகோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஏழு பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. மேலும் ஏழு நோயாளிகளுக்கு கண்கள் பாதிக்கப்பட்டன. அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களின் நிலை சீராக உள்ளது. மியூகோர்மைகோசிஸ் எந்த நபரும் இறக்கவில்லை. இது சிகிச்சையளிக்கக்கூடிய நோய் தான், எனவே யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

மியூகோர்மைகோசிசை கண்காணிக்க 10 பேர் கொண்ட தனி குழுவை அரசு அமைத்துள்ளது. தமிழக மருத்துவ சேவைகள் கழகத்தில் பூஞ்சை தொற்று சிகிச்சையில் பயன்படுத்தப்படும் லிப்சோமல் ஆம்ஃபோடெரிசின் பி என்ற மருந்து உள்ளது. இருப்பினும், மேலும் 5,000 குப்பிகள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மியூகோர்மைகோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக பொது சுகாதார இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ” என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்நோய் குறித்து மருத்துவர் பிரவீன் கூறுகையில் , ” கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு ஸ்டெராய்டுகள் கொடுக்கப்படுகிறது. நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கு, ஆக்சிஜன் அளவை கட்டுப்படுத்துவதற்கு என ஸ்டெராய்டுகள் கோவிட்-19 நோய்க்கு எதிராக நல்ல பலன்களை அளிக்கிறது. அதேவேளையில், அவை நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு அல்லாத கோவிட்-19 நோயாளிகளிளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சி இந்த மியூகோர்மைகோசிஸ் நோய்க்கு தூண்டுதலாக அமைந்து உள்ளது. மியூகோர்மைகோசிஸ் என்பது மிக மிக அரியவகை நோய். இது கொரோனா பாதிப்புக்கு உள்ளான அனைவரையும் தாக்காது. தீவிரமான நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களே பாதிப்புக்கு உள்ளாக்குகிறனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.

நோயைத் தடுப்பது குறித்து :

மருத்துவர்கள் பரிந்துரைத்த பின்பே நோயாளிகள் ஸ்டெராய்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்துகளில் உள்ள போது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கொரோனா நோயிலிருந்து மீண்டதற்கு பிறகும் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு சுத்தமான சூழலில் தங்க வேண்டும்.

மருந்துகள் குறித்து :

“ஆம்ஃபோடெரிசின் பி , லிப்சோமல் ஆம்ஃபோடெரிசின் பி ஆகியவை இந்த நோயை எதிர்கொள்வதற்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள்.

மியூகோர்மைகோசிஸ் பாதித்த ஒருவருக்கு மருந்து தேவையென தமிழக சுகாதாரத்துறை, நிதித்துறை அமைச்சர்களை உதவி கோரும்படி டிவிட்டர் பக்கத்தில் ஒருவர் பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் தியாகராஜன் அவர்கள். ” அரவிந்த் கண் மருத்துவமனைகளில் இருந்து ஏராளமான அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒரு நபருக்கு 50 டோஸ் மருந்து தேவைப்படுகிறது. கடும் தட்டுப்பாடு, அதீத விலை மற்றும் மிகக் குறைந்த சப்ளையர்களே உள்ளனர். மருந்துக்காக நாங்கள் துரிதமாக முயற்சித்து வருகிறோம் ” எனக் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பிற்கு இடையே கருப்பு பூஞ்சை எனும் மியூகோர்மைகோசிஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் அதன் பாதிப்பும் உயர்ந்து வருகிறது. இதற்கான மருந்துகளுக்கு வடமாநிலங்களில் தற்போதே தட்டுப்பாடு, கள்ளச்சந்தை விற்பனை நிலை ஏற்பட்டு இருக்கிறது. ரெம்டெசிவிர் மருந்து போன்று மக்கள் மியூகோர்மைகோசிஸ் மருந்திற்காக தமிழகத்தில் அலையாமல் இருக்க அரசு உடனடியாக மருந்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். எதற்கும் தயாராக இருத்தல் அவசியம் என்பதை கொரோனா பெருந்தொற்று மக்கள் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

Links :

expert-committee-recommends-measures-after-uttarakhand-reports-1st-black-fungus-death

nine-diagnosed-with-mucormycosis-in-tn-to-date-all-stable-says-health-secretary

protocol for mucormycosis

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button