பாடநூல்களில் தமிழ் அறிஞர்களின் சாதி பெயர்கள் 2019-லேயே நீக்கப்பட்டுள்ளது !

தமிழ்நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தமிழ் அறிஞர்கள் மற்றும் பாட ஆசிரியர்களின் சாதி பெயர்கள் நீக்கப்பட்டு, அவர்களின் பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்ட புத்தங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக வெளியான செய்திகள் ஊடக மற்றும் சமூக வலைதள விவாதங்களை ஏற்படுத்தியது. இது அவசியமா, அரசியலா என விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்கையில் இதை யார் செய்தது என்கிற குழப்பமும் உண்டாகியது
இந்நிலையில், பள்ளிப் பாடப்புத்தங்களில் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டது உண்மையே, ஆனால் அது 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மாற்றம் செய்யப்பட்டவை என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி விளக்கம் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், ” தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட புத்தங்களில் தமிழ் அறிஞர்கள் உடைய பெயர்களில் சாதி பெயர் நீக்கப்பட்டு இருப்பதாக வெளியான பரபரப்பான செய்தியை பார்த்த பிறகு உடனடியாக அதற்கான விவரங்களை சேகரித்தோம்.
அதில், 12-ம் வகுப்பு வரை உள்ள புத்தகத்தில் தமிழ் அறிஞர்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பது உண்மை தான். அவற்றில், நாமக்கல் ராமலிங்க பிள்ளை என்பது நாமக்கல் ராமலிங்கனார் என்றும், தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத ஐயர் என்பது உ.வே. சுவாமிநாதர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆனால், அந்த நீக்கப்பட்ட பாடப் புத்தகம் அச்சடிக்கப்பட்ட காலம் 2019-ம் ஆண்டு. 2019-ல் கல்வி அமைச்சராக இருந்தவர் மாண்புமிகு.செங்கோட்டையன் அவர்கள், அப்போது பாடநூல் கழகத் தலைவராக இருந்தவர் திருமதி.வளர்மதி அம்மையார். அவர்கள் காலத்தில் தான் முடிவெடுக்கப்பட்டு, எஸ்சிஇஆர்டி-க்கு பரிந்துரை செய்து புத்தங்கள் வெளி வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிற்பாடு வெளி வந்தது போல் தொலைக்காட்சிகள் செய்திகளை சித்தரித்து உள்ளனர். இது பழைய செய்தி. இதற்கு முழு பொறுப்பு 2019-ல் இருந்த கல்வித்துறை தான் ” என பதில் அளித்து இருக்கிறார்.
இணையத்தில் 12-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தை எடுத்து பார்க்கையில், 2020-ல் அச்சிடப்பட்ட தமிழ் புத்தகத்தில் உ.வே. சாமிநாதர் என இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 2019-ல், திருத்திய பதிப்பு 2020-ல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உ.வே. சாமிநாதர் பெயர் இடம்பெற்ற புத்தகத்தின் பக்கமே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
Links :