இப்போ எதற்கு டாஸ்மாக்.. எழும் கண்டன குரல்கள் !

கொரோனா காலத்தில் போதுமான வருமானம் இன்றி மக்கள் தவித்து வரும் சூழ்நிலையில, ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகளை திறக்க ஆளும் கட்சியான திமுக அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூட பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றுதல், கடைகளை ஊருக்கு வெளியில் மாற்றுவது என சில சொற்ப முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை முழுவதும் மூடப்படும் எனும் வாக்குறுதிகள் கட்சி பாகுபாடு இல்லாமல் வெறும் தேர்தல் பிரச்சார யுக்தியாக மட்டுமே முடிந்து விடுகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அரசு கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட போவதாக மே 7 ஆம் தேதி திமுக கட்சி அறிவித்தது. இதனையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த முடிவை மிக வன்மையாக கண்டித்து போராட்டத்தில் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், தற்போதைய சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “கருப்பு சின்னம் அணிவோம் , டாஸ்மாக் திறப்பை எதிர்ப்போம் ” எனும் தலைப்பில் செய்தி அறிக்கை வெளியிட்டார்.
மேலும், ” ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்! ” என உணர்ச்சிகரமாக ட்விட்டரில் பதிவு செய்து செய்தார்.
ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதைக் கண்டித்து, தலைவர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் இளைஞரணியினர் கருப்புச் சின்னம் அணிந்து தங்களின் வீட்டின் முன்பு நின்று கொரோனா ஒழிப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்! @dmk_youthwing pic.twitter.com/UipzdpYMUk
— Udhay (@Udhaystalin) May 6, 2020
திமுக கட்சியின் எம்.பி கனிமொழி உட்பட அனைவரும் கருப்பு உடை அணிந்து, கோசங்களை எழுப்பி வந்தனர். “ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு” எனும் பதாகையை தூக்கிப் பிடித்துக்கொண்டு நடத்திய இப்போராட்டம் சமூக வலைதளங்களில் பெரு வாரியான கவனத்தை பெற்றது. செய்திகளிலும் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. “குடியைக்கெடுக்கும் அதிமுக” , “குடியைக்கெடுக்கும் எடப்பாடி” எனும் ஹாஸ்டாக்குகள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.
மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போது..#குடியைக்கெடுக்கும்அதிமுக#குடிகெடுக்கும்_எடப்பாடி pic.twitter.com/dllyvca5pg
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 7, 2020
ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளை திறந்து கொரோனாவிலும் கொள்ளை அடிக்கும் #குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை கண்டித்து கருப்பு உடையணிந்து கண்டன குரலெழுப்பிய சேலம் மாநகர @dmk_youthwing அமைப்பாளர் கேபிள் எஸ்.சரவணன் உள்ளிட்ட இளைஞரணியினருக்கும் மாவட்டக் கழகத்தினருக்கும் வாழ்த்துகள்! @Udhaystalin pic.twitter.com/wstTWHZ3zO
— DMK Youth Wing (@dmk_youthwing) May 7, 2020
Twitter link
கடந்த ஆகஸ்ட் மாதம் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே
” யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!” என பதிவை செய்து இருந்தார்.ஆனால், தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பெருகி வரும் சூழ்நிலையில் தன்சொல்லுக்கு புறம்பாக தற்போது செயல்பட்டு வருவது எதிர்ப்பை பெற்று வருகிறது.
சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு.
யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்!
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!
— M.K.Stalin (@mkstalin) August 17, 2020
எதன் அடிப்படையில், எதற்காக டாஸ்மாக் கடைகளை அரசு திறக்க இருக்கிறது எனும் கோபமும், வருத்தமும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. இந்த முடிவுக்கு எதிராக அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் உட்பட பல்வேறு மக்களும் இந்த முடிவை விமர்சித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் கோரிக்கை வைத்துக்கொண்டு உள்ளனர். அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமா, டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் எதற்கு டாஸ்மாக் !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.