தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் 20 ஆண்டுகளாக இருக்கும் ‘சனாதன தர்மம்’.. நீக்கப்படுமா ?

மிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ எனப் பேசியதை தொடர்ந்து பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் எழத்தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும் புத்தகம் ஒன்றில் “சனாதன தருமம்‘ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும்” என்றுள்ளது என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன ?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையாக உள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ ஒருங்கிணைக்கப்பட்டது.

அம்மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இந்த மாநாட்டிற்குச் சனாதன எதிர்ப்பு மாநாடு எனப் பெயர் வைக்காமல் சனாதன ஒழிப்பு மாநாடு எனப் பெயர் வைத்துள்ளீர்கள். சிலவற்றை நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது” எனக் கூறினார்.

அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை அவர் பேசி விட்டார் என்றும், இன அழிப்பிற்கு அழைப்பு விடுக்கிறார் என்றும் உதயநிதி பேசிய கருத்துக்களைத் திரித்து பாஜக மற்றும் வலதுசாரிகள் சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கினர். மேலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அரசின் முக்கிய அமைச்சர்களும் பேசினார்கள்.

அது மட்டுமின்றி பரமஹன்ஸ் ஆச்சார்யா என்ற சாமியார் அமைச்சரின் தலையைக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும் என அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாடப் புத்தகத்தில் சனாதனம் : 

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு முற்போக்காளர்கள் மத்தியில் ஆதரவும், வலதுசாரிகள் மத்தியில் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய பள்ளிப் பாடப் புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய பத்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுவதைக் காண முடிகிறது. 

12ம் வகுப்பிற்கான ‘அறவியலும் இந்தியப் பண்பாடும்’ என்னும் புத்தகத்தில் ‘வேதகால பண்பாடு’ என்னும் பாடத்தில் (பக்.54) “வேத உபநிடதங்களை ஏற்கும் சனாதன தர்மம் என்கிற இந்து மதத்திற்கு ஒரு குறிப்பிட்ட நூல் மட்டுமே புனித நூலாக அமையவில்லை. வேதம், உபநிடதம், பகவத்கீதை, புராணங்கள், இதிகாசங்கள் என்ற நீண்ட பட்டியலே உண்டு. 

புத்தகம் : 12ம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும், பக்.54 (2022ம் ஆண்டு பதிப்பு)

ஒவ்வொன்றும் மனித இயல்புகளுக்குத் தக்க படி வாழ்க்கை நெறிமுறை மற்றும் தத்துவங்களைப் போதிக்கிறது. வேதங்களில் யாகங்களும் சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றன. உபநிடதங்களில் எளிதில் புரிந்துகொள்ள முடியாத தத்துவ உண்மைகள் காணப்படுகின்றன. எனவே, உபநிடதங்களை அனைவரும் புரிந்துகொண்டு, நடைமுறை வாழ்க்கை மேற்கொள்ளப் பகவத்கீதை, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வழிகாட்டுகின்றன” எனச் சனாதனம் குறித்து இவ்வாறு உள்ளது.

மேலும், ‘இந்தியப் பண்பாடும் சமயங்களும்’ என்னும் பாடத்தில் (பக்கம். 58) “இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்‘ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும்” என்றுள்ளது. 

புத்தகம் : 12ம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும், பக்.58 (2022ம் ஆண்டு பதிப்பு)

அது மட்டுமின்றி, ‘உலகிற்கு இந்தியப் பண்பாட்டின் கொடை’ என்னும் பாடத்தில் (பக்கம். 239) “சனாதன தர்மம் என்பதற்கு ‘முடிவில்லா அறம்’ என்று பெயர். மனிதன் இயற்கையோடு ஒன்றிய நல்வாழ்விற்கு அடிப்படையாக விளங்குவது தர்மமேயாகும். சடங்குகளைவிட ஒழுக்கமே முக்கியம் என்று தருமம் கூறுகிறது. மனிதனின் குடும்பக்கடமைகள் சமூகக்கடமைகளாகப் போற்றப்படுகின்றன” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இத்தகைய வாக்கியங்கள் 2019ல் வெளியான முதல் பதிப்பிலும், அதனைத் தொடர்ந்து வெளியான 2020 மற்றும் 2022 திருத்தப்பட்ட பதிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் முதல் பதிப்பு வெளியாகி இருப்பினும் கடைசியாக வந்துள்ள பதிப்பின் போது ஆட்சியில் இருந்தது திமுக என்பது குறிப்பிடத்தக்கது. 

புத்தகம் : 12ம் வகுப்பு இந்தியப் பண்பாடு, பக்.110 (2004ம் ஆண்டு பதிப்பு)

இதே போல் 2004ம் ஆண்டு வெளியான ‘இந்தியப் பண்பாடு’  என்ற 12ம் வகுப்பு புத்தகத்திலும் ‘இந்து மதம் என்பதற்கு “சனாதன தர்மம்” என வேறு ஒரு பெயர் கூறுவாரும் உண்டு. இதற்கு அழிவில்லாத அறம் என்பது பொருள்’ என்றுள்ளது. 

சனாதனம் – மகாபாரதத்தில் குறிப்பிடுவது என்ன ? 

மகாபாரத போர் நடைபெறுவதற்கு முன்னதாக அர்ஜுனன் தான் போர் புரிய மாட்டேன் எனக் கூறுகிறார். அதற்குக் காரணமாக, எதிரில் உள்ளவர்களில் பலரும் நமது உறவினராக (சத்திரியர்கள்) உள்ளனர். போரின் இறுதியில் இரண்டு தரப்பிலும் சத்திரியர்களின் உயிரிழப்பு ஏற்படும். அப்படி உயிர் இழப்பு ஏற்பட்டால் சத்திரியப் பெண்கள் மற்ற வர்ணத்தாருடன் கலந்து விடுவார்கள். வர்ண கலப்பு ஏற்பட்டால் சனாதன தர்மமே அழிந்துவிடும் என்று கூறுகிறார் (பகவத் கீதை. அத்தியாயம் 1, வசனம் 32 – 42).

அதற்குக் கிருஷ்ணன் கூறும் பதில்; பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய 4 வர்ணங்களையும் நானே படைத்தேன். அதனை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது. ஒவ்வொரு வர்ணத்தினருக்கும் ஒவ்வொரு கடமைகள் உண்டு. நீ சத்திரிய வர்ணத்தைச் சேர்ந்தவன் என்பதால் போர் புரிய வேண்டும். அது உன் வர்ணத்துக்கான தர்மம், விதி. அப்படிச் செய்யவில்லை என்றால் பழிக்கு ஆளாவாய் என்கிறார். 

மேலும் அத்தியாயம் 3 (வசனம் 35) மற்றும் 18ல் (வசனம் 47), நான்கில் ஏதேனும் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர், தான் இருக்கும் வர்ணத்திற்கு ஒதுக்கப்பட்ட வேலையைக் காட்டிலும், வேறொரு வர்ணத்தினரின் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்னும் போதிலும் அதனைச் செய்யக் கூடாது என்றுள்ளது. 

அதாவது, பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவரது தொழில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அதன் பொருள். மலம் அள்ளுபவரின் வாரிசு மலம் தான் அல்ல வேண்டும். சலவைத் தொழில் செய்பவரின் பிள்ளை சலவைத் தொழில் தான் செய்ய வேண்டும் என மறைமுகமாகக் குறிப்பிடுவதே அந்த வாக்கியத்தின் பொருள். 

இப்படிப்பட்ட நிலையினை மாற்ற பல்வேறு சமூக சீர்திருத்தத் தலைவர்களும் தொடர்ந்து போராடி, இட ஒதுக்கீட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ள உரிமைகள் பங்கிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தகைய இடஒதுக்கீட்டில் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதன பிற்போக்குத் தனத்தைப் பள்ளி பாடப் புத்தகத்தில் வைத்திருப்பது எந்த வகையில் சரி என்பதே கேள்வியாக உள்ளது. முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் கொண்டுவரப்பட்ட பாடப் புத்தகம் எனச் சப்பை கட்டுக் கட்டாமல், சமூக நீதிக்கு எதிரான சனாதனம் குறித்த பகுதிகளைப் பள்ளி புத்தகத்திலிருந்து  நீக்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசு மேற்கொள்ள வேண்டும். 

Links: 

12th-Std-Indian-Culture-TM – 2004

12th_Ethics-and-Culture_TM – 2022

12th_Std_Ethics_and_Indian_Culture – 2020

12th Standard Ethics & Cultural of India – 2019

Bhagavad Gita

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader