2012ல் இருந்து சாலை விபத்துகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்.. சென்னையில் குறையும் விபத்துகள்.. விரிவான தரவுகள் !

சாலை விபத்துகளினால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளில் உத்தரபிரதேசமும், உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னையும் முதலிடத்தில் உள்ளன !

ஒன்றிய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் சாலை விபத்துகளில் மட்டும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 19 இறப்புகளும், ஒவ்வொரு நாளும் 462 இறப்புகளும் ஏற்படுகின்றன என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் முதல் 20 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

X post link

இந்நிலையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளதாக வெளியான செய்தி உடன், சென்னையில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும், விபத்துகளின் தீவிர தன்மை தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக இருப்பதாகவும் கூறும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய மற்றொரு கார்டும் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. அந்த கார்டு திமுக ஐடி விங் தரப்பில் வெளியிடப்பட்டது.

எனவே இது குறித்த உண்மைத்தன்மையை அறிய, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாக சாலை விபத்துகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்தோம்.

தொடர்ந்து சாலை விபத்துகளில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு:

ஒன்றிய  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலை விபத்துகளின் மூலம் இந்தியாவில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,43,366-ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,68,491-ஆகவும் உள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 11.9 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது.

2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் மாநிலங்களில் 64,105 எண்ணிக்கைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதில், 2022-ஆம் ஆண்டில் 54,432 எண்ணிக்கைகளுடன் மத்தியப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 43,910 எண்ணிக்கைகளுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தமிழ்நாடு குறித்த மொத்தத் தரவுகளை மேலும் ஆய்வு செய்ததில், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருவதை அறிய முடிந்தது.

சாலை விபத்துகளினால் ஏற்படும் அதிக உயிரிழப்புகளில் முதலிடம் பிடித்த உத்தரப்பிரதேசம்:

இதைத் தொடர்ந்து சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கைகளைக் கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில், 2022-ல் உத்தரப்பிரதேசம் 22,595 எண்ணிக்கைகளுடன் முதலிடத்தில் உள்ளதைக் காண முடிந்தது. மேலும் இது கடந்த 2018-இல் இருந்தே முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்த சென்னை:

இந்த அறிக்கையின் படி, கடந்த 2021ல் சென்னையில் 5,034 விபத்துகள் நிகழ்ந்துள்ளன, 2022-ல் அவை குறைந்து 3,452 எண்ணிக்கைகளுடன் விபத்துகளை குறைத்த மாநகரங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நிகழும் சாலை விபத்துகள் கடந்த 2021 ஆண்டை விட 1,582 குறைந்துள்ளன. இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினம், மும்பை, பாட்னா மற்றும் சூரத் நகரங்கள் இடம் பிடித்துள்ளன. மேலும் இதில் சாலை விபத்துகளை -31.4 % வரை சென்னை மாநகரம் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் அதிக சாலை விபத்துகளை ஏற்படுத்தியுள்ள மாநகரங்களில் 5,652 (7.36 %) எண்ணிக்கைகளுடன் டெல்லி மாநகரம் முதல் இடத்திலும், 4,680 (6.10 %) எண்ணிக்கைகளுடன் இந்தூர் மாநகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அதேபோல், சென்னை சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் குறைந்துள்ளன. கடந்த 2021ல் சாலை விபத்துகளில் 998 பேர் உயிரிழந்து உள்ளனர், அதுவே 2022ல் 507 ஆக குறைந்துள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்பை தடுப்பதில் சென்னை மாநகரம் முதலிடத்தில் இருக்கிறது.

தீவிர விபத்துகளில் இந்தியாவின் சாராசரியை விட தமிழ்நாடு குறைவு : 

சாலை விபத்துகளின் தீவிரத்தன்மை ஒவ்வொரு நூறு விபத்துகளுக்கும் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து கணக்கிடப்படும். அதன்படி மிசோரம் மாநிலத்தில் அதிகபட்சமாக ஒவ்வொரு நூறு விபத்துகளுக்கும், 85 பேர் வரை இறக்கின்றனர். அதற்கு அடுத்தப்படியாக பீகார், பஞ்சாப் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் உள்ளன.

இதில், இந்தியாவின் சாராசரி எண்ணிக்கையான 36.5-ஐ விட தமிழ்நாடு குறைவான சராசரியைக் கொண்டுள்ளது. இதன்படி 27.9 எண்ணிக்கைகளுடன் தமிழ்நாடு 26-வது இடத்தில் இருப்பதை இந்த அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.

சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள் என்ன ?

சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது என பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் கூறப்படுகிறது. எனவே இது குறித்து ஆய்வு செய்ததில், 2022 தரவுகளின்படி அதி வேகத்தில் வாகனம் ஓட்டுவதன் மூலம் அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதன் மூலம் 2022-ல் மட்டும் 3,33,323 சாலை விபத்துகளும், 1,19,904 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த சாலை விபத்துகளில் அதி வேகமாக வாகனம் ஓட்டியதே 72.3 சதவீத சாலை விபத்துகளுக்கு காரணம் என்பதை அறிய முடிகிறது. 

மேலும் ‘மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்’ 2.2 சதவீத சாலை விபத்துகளுக்கும், ‘தவறான பாதையில் வண்டி ஓட்டுதல்’ 4.9 சதவீத சாலை விபத்துகளுக்கும், ‘வண்டி ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துதல்’ 1.6 சதவீத சாலை விபத்துகளுக்கும், ‘மற்ற காரணங்கள்’ 18.2 சதவீத சாலை விபத்துகளுக்கும் காரணம் என்பதை இந்த அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. 

மதுபோதையில் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக, அதிக சாலை விபத்துகள் மற்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு அதிகபட்சமாக மதுபோதையில் ஏற்பட்டுள்ள விபத்துகளின் எண்ணிக்கை 4,220 ஆகவும், உயிரிழப்புகள் 2186-ஆகவும் உள்ளன.

இந்த உயிரிழப்பு தமிழ்நாட்டில் 71 எண்ணிக்கைகளுடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துகளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முன்னெடுப்புகள்:

‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டம்:

கடந்த 2021 டிசம்பர் 17 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள் அல்லது இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு இத்திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு, நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (ceiling limit) சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 6 மாதங்களில் 80,000 பயனாளிகள் வரை பயனடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் இந்த திட்டம் குறித்த விவரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

சென்னையில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு:

இந்த திட்டத்தின் படி பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு வேக வரம்புகளை அறிவித்துள்ளது. இந்த திட்டம் நவம்பர் 04 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இலகுரக வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இருசக்கர வாகனங்களை 50 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும்.

இது தவிர குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வகையான வாகனங்களும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்:
.
‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ‘நம்ம சாலை’ என்ற செயலி கடந்த நவம்பர் ௦1 அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, சாலையில் பள்ளம் உள்ளிட்ட சேதங்கள் ஏற்பட்டால், பொதுமக்களே அதனைப் புகைப்படம் எடுத்து ‘நம்ம சாலை’ செயலியில் பதிவேற்றிக் கொள்ளலாம். அந்தப் பழுது 24 முதல் 72 மணி நேரத்துக்குள் அரசு சார்பில் சரி செய்யப்படும். இதுமட்டுமன்றி, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை எளிதில் இணைக்கின்ற வகையில், ‘Closed User Group’ மொபைல் எண் சேவையும் அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
.
அரசு அறிவித்துள்ள இந்த முன்னெடுப்புகளை தவிர, பொதுமக்கள் அனைவரும் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டுவதையும், ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட்களைப் பயன்படுத்தாது பயணிப்பதையும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும், வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டியது அவசியானது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்..!!
.
மித வேகம் மிக நன்று..!!

 

ஆதாரங்கள்:

https://morth.nic.in/sites/default/files/RA_2022_30_Oct.pdf

https://morth.nic.in/sites/default/files/Road_Accidents_in_India_2012.pdf

https://morth.nic.in/sites/default/files/Road_Accidents_in_India_2017.pdf

https://www.hindutamil.in/news/tamilnadu/816236-treatment-for-80-000-people-under-the-nammai-kakkum-48-scheme.html

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader