மத்திய அரசு தடுப்பூசி வழங்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறதா ?

மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும் நிலைகளில் தமிழகம் உள்ளது.

Advertisement

“மாநிலத்தில் வெறும் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே இருப்பு உள்ளது. இது இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும், எனவே தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்படலாம்” என சுகாதாரத்துறை அமைச்சர் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். மேலும்,” 25 லட்சம் தடுப்பூசிகளை தமிழகம் பெறவிருந்த நிலையில் 13 லட்சம் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை. இந்த நிலைமை குறித்து மத்திய அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியிருந்தார்.   

தோராயமாக தற்போது தமிழகத்தில் 3 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், சராசரியாக நாள் ஒன்றுக்கு தோராயமாக 30 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், நோய் கட்டுப்பாட்டுக்காக ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு. வருமானம் இழந்து, தொழிலையும், அன்றாட வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக முடக்கிப்போட்ட இந்த கொரோனா நோய் தொற்றில் இருந்து மீள ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் என மக்கள் முகாம்களை நோக்கி செல்லும் இவ்வேளையில் தடுப்பூசி போதுமான அளவில் இல்லை என மாநில அரசுகள் திணறுகிறது.

என்ன நடக்கிறது தடுப்பூசி விநியோகத்தில் ? தமிழகம் ஏன் தடுப்பூசி செலுத்துதலில் இவ்வளவு பின்தங்கி இருக்கிறது? தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தும் நிலைக்கு நாம் ஏன் வந்தோம்? போன்ற கேள்விகளை தெளிவுப்படுத்தும் நோக்கோடு பின்வரும் செய்திகளை காண்போம்.

போதுமான தடுப்பூசிகள் உள்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யாமல் விட்டது, தாமதமாக தயாரிப்பு பணிகளைத் தொடங்கியது, வெளிநாடுகளுக்கு ஏகோபித்த அளவில் தடுப்பூசிகளை விநியோகம் செய்தது என ஆரம்பம் முதலே மிகத்தவறான மேலாண்மை காரணமாக தற்போது இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாட்டுக்கு வித்திட்டது மத்திய அரசு. 

இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் என்பது முழுக்க முழுக்க  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க கூடியதாக உள்ளது. தன்னிச்சையாக செயல்பட்டு தடுப்பூசிகளை வாங்குவதற்கு பல மாநில அரசுகள் கோரிக்கைகள் வைத்தும் இப்போது வரை மௌனம் காத்து வருகிறது மத்திய அரசு.       

இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்படுவதில்லை. இந்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு விற்க வேண்டும், மற்ற 50 சதவீதத்தை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட விலையில் வாங்கிக்கொள்ளலாம். 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் தான் வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை மத்திய அரசு தான் தீர்மானிக்கும்!  

Advertisement

மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு வழங்கியுள்ள தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 96 லட்சம் . அதில் 91 லட்சம் உபயோகிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில்  தமிழகத்தில் தடுப்பூசி வீணாகும் சராசரி அதிகமாகவே இருந்து வந்துள்ளது. மே 3-ம் தேதி நிலவரம் படி 8.8% இருந்து உள்ளது. இது லட்சத்தீவை அடுத்து அதிகப்படியான விரயம் ஆகும். தற்போது அந்த விரயம் வெகுவாக கையாளப்பட்டு 4.1% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்திற்கு தடுப்பூசிகளின் வரவுகளின் தரவுகள் சமநிலை அற்றதாக உள்ளது. மக்கள் தொகை, தடுப்பூசியை கையாளும் முறை மற்றும் தொற்று பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்து வந்தாலும், தரவுகள் வேறு செய்திகளை சொல்கின்றன. 

தற்போது அதிகப்படியான கொரோனா தொற்றுக்கு உள்ளான மக்களின் எண்ணிக்கை படி பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு இரண்டாம் இடம், கர்நாடக முதல் இடத்தில் உள்ளது . இறப்பு சதவீதம் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. எனினும் அங்கு தற்போது பாதிப்புக்குள்ளான மக்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டை விட குறைவு. 

மக்கள் தொகை மற்றும் தொற்று பரவல் அடிப்படையில் தடுப்பூசிகளை வழங்குவதாக கூறும் மத்திய அரசு தொற்று அதிகம் உள்ள மற்றும் 7.6 கோடி மக்கள் தொகையுள்ள மாநிலமான தமிழ்நாட்டிற்கு 89 லட்சம் தடுப்பூசிகளையும், கிட்டத்தட்ட அதே மக்கள் தொகை உடைய, தொற்று பரவல் குறைவான ராஜஸ்தான் மாநிலத்திற்கு 1.7 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக (மே 31-ம் தேதி தரவுகள்) காண்பிக்கின்றன. இன்னும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய  தகவல் என்னவென்றால் வெறும் 32 ஆயிரம் கொரோனா தொற்று உடைய மாநிலமான குஜராத்திற்கு 1.7 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது மத்திய அரசு. குஜராத்தின் மக்கள் தொகை 6.8 கோடி மட்டுமே. 

தமிழகத்தில்  தொற்று பரவல் மிக அதிகமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலான ஊசிகளையே வழங்கியுள்ளது மத்திய அரசு. மே 1-ம் தேதி தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 7.33 லட்சம் அதே வேளையில் குஜராத் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை 16 லட்சம் தற்போது தொற்று பரவல் மிக அதிகமாக உள்ள மாநிலமான கர்நாடகாவிற்கு 13 லட்சம் தடுப்பூசிகள் தான் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

18-44 வயதினருக்கான 25 லட்சம் தடுப்பூசிகளை தமிழக அரசு ஆர்டர் செய்து உள்ளது. ஆனால் மே மாத தடுப்பூசி விநியோகத்தில் தமிழகத்திற்கு 13 லட்ச தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 21 லட்ச ஊசிகள் வழங்கப்பட்டுள்ளது. (உ.பி மக்கள் தொகை 22.5 கோடி). இதிலும் தமிழ்நாட்டை விட குஜராத்துக்கு அதிகமாக 16 லட்ச ஊசிகள் வழங்கப்பட்டு உள்ளது.   

தற்போது ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் அதில் 7.9 கோடி ஊசிகள் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “ஜூன் மாதத்தில் 42 லட்சம் தடுப்பூசிகள் மாநிலத்திற்கு வர உள்ளன. ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து மே மாதத்திற்கான 1.74 லட்சம் டோஸ் வரவேண்டியுள்ளது. ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வருகிறது. இதன் காரணமாக ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது.” என தெரிவித்து உள்ளார். 

இதுவரையிலும் தமிழகத்திற்கு மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே தடுப்பூசி ஒதுக்கீடு செய்து வந்த நிலையில், இந்த ஜூன் மாதத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்திற்க்கான எண்ணிக்கை என்ன என்பது பற்றிய தரவுகள் உறுதியாக வரவில்லை.  

Links :

modi-govt-allotted-2-12-crore-vaccines-for-1-15-may-states-hospitals-bought-2-crore-more

tamil-nadu-govt-raises-concern-over-vaccine-availability

https://www.mygov.in/covid-19

https://www.covid19india.org

tamil-nadu-has-covid-19-vaccine-stock-only-for-two-more-days-says-health-minister

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button