This article is from Jan 10, 2021

குப்பைகளைப் பிரித்துக் கொடுத்தால் நகரம் சுத்தமாகுமா? படுகுழிகளில் அழுத்தப்படும் சென்னையின் நுரையீரல் !

“மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை இனி வெகுஜன மக்கள் பிரித்துத் தர வேண்டும்” என்கிற அரசாணை இன்று முதல் (01-Jan-2021) சென்னை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல் வடிவம் பெறுகிறது.

அதாவது, துவக்கநிலை பகுப்பு (Segregation at source) என்பது தான் இதன் இலக்கு. சென்னை மாநகராட்சி தனது திடக்கழிவு மேலாண்மை வரைவில், ஏழு படிநிலை திட்டமொன்றை முன்வைக்கிறது.

இதன்படி,

  • துவக்கநிலை பகுப்பு (Segregation at Source)
  • சென்னையின் பெரும் குப்பைக் கிடங்குகளின் மீதான (கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி) அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், இயன்றவரை குப்பைகள் (மக்கும் குப்பைகள்) தொடங்கும் இடத்திலேயே மறுசுழற்சி செய்தல்.
  • மக்காத குப்பைகளை சேகரிக்க (புதைக்க), மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் (மையக் கிடங்குகளாக அல்லாது), குப்பைக் கிடங்குகளை உருவாக்குதல்.
  • மின்னணு குப்பைகள் மற்றும் கட்டுமான உபரிகளை (Debris) மறுசுழற்சி செய்ய பாதுகாப்பான மறுசுழற்சி கிடங்குகளை உருவாக்குதல்.
  • குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் வெகுஜன மக்களிடம், திடக்கழிவு மேலாண்மையில் அறிவியல்பூர்வமான முறைகள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குதல்.
  • குப்பைகளைக் குறைத்தல், பிரித்தல், நகர்த்தல், மறுசுழற்சி செய்தல் மற்றும் இறுதிநிலை அகற்றல் என எல்லா நிலைகளிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பைப் பெறுதல்.
  • திட்ட ஒருங்கிணைப்பில், அந்தந்த துறையினரின் பொறுப்புகளை முழுமையாக முறையாக பகிர்தல்.

என மேற்சொன்ன ஏழு படிநிலைகளை, சென்னை மாநகராட்சி தனது வரைவில் குறிப்பிட்டுள்ளது.

இதுதான் சென்னையின் மொத்த திடக்கழிவு மேலாண்மை குறித்த அரசின் திட்டம். தவிர, சென்னை என்கிற பெருநகர் தான் முன்னோடி மாநகராட்சி என்பதால், கிட்டதட்ட தமிழ்நாட்டின் சிறந்த மற்றும் முதன்மையான (The best and first policy) “திடக்கழிவு மேலாண்மை திட்டமாக” இதனைக் நாம் கருத்தில் கொள்ளலாம்.

இது முழுமையான திட்டமா ? மிகச் சரியான, பயனுள்ள திட்டமா ? என்பது போன்ற ஆராய்ச்சிகளுக்கு முன், நாம் சில புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் நாளொன்றிற்கு சேரும் குப்பைகளின் மொத்த அளவு தோராயமாக 14,200 டன்கள்.

ஒரு நிரப்பப்பட்ட சரக்கு விமானத்தின் (Cargo Flight) எடை 80 டன்கள். அப்படி என்றால், 140 சரக்கு விமானங்களின் எடைக்கு நிகரான குப்பைகளை தமிழர்கள் இயற்கைக்குப் பரிசாகத் தருகிறோம்.

இவற்றில், தோராயமாக 5,000 டன்கள் மட்டும் சென்னை மாநகராட்சி வழங்கும் கொடை. ஏனைய மாநகராட்சி (14) மற்றும் நகராட்சிகளின் (121) மொத்த அளவு தோராயமாக 7200 டன்கள். டவுன் பஞ்சாயத்துகளின் மொத்த பங்களிப்பு தோராயமாக 2000 டன்கள்.

ஆக, சென்னையே ஏறக்குறைய தமிழகத்தின் பாதி குப்பைகளுக்குக் காரணம். அப்படி என்றால் சென்னை மாநகராட்சியின் குப்பை மேலாண்மைத் திட்டங்களின் அத்தியாவசியம் குறித்து நம்மால் உணர முடியும் தானே ?

அப்படி என்ன தான் கொட்டுகிறோம்.?

அரசின் அறிக்கைகளின்படி, சென்னையில் கிடைக்கிற மொத்த குப்பைகளில் 68% குடியிருப்புகளில் இருந்து வரும் மக்கும்/மக்காத குப்பைகள். 16% வணிக நிறுவனங்களின் குப்பைகள், 14% கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களின் குப்பைகள், 2% பெருதொழிற்சாலை கழிவுகள்.

தவிர, இவற்றை மக்கும் மற்றும் மக்காக் குப்பை என்று பகுக்கும் போது, 32% மக்கும் குப்பைகளும், 33% மக்காத நெகிழி குப்பைகளும், இதர 35% கற்கள் மற்றும் இரும்பு வகைகள். மேற்படி விவரங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), தனது ஆண்டறிக்கையில் வழங்கி இருக்கிறது.

இதன்படி, கடந்த ஆண்டு மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 14,228 டன்கள் குப்பையைத் தமிழகம் உருவாக்கியிருக்கிறது.

அதில், 13,955 டன்கள் குப்பை சேகரிக்கப்பட்டதாக அறிக்கை சொல்கிறது. அப்படி என்றால் நாளொன்றுக்கு 275 டன்கள் அளவிலான குப்பையை, அரசு சேகரிக்க இயலாத குப்பை என்று குறிப்பிட விரும்புகிறது. இது ஆண்டொன்றிற்கு 1,00,375 டன்கள்.

இந்த பெருமளவு குப்பை, சேகரிக்க இயலாத நிலையில் அங்காங்கே தமிழகம் முழுக்க பரவிக் கிடக்கிறது என்பது பொருள். ஒரு அரசின் மொத்த ஆயுட்காலமான 5 ஆண்டுகளில் இதன் மொத்த அளவு 5,01,875 டன்கள்.

அதாவது உங்கள் வீடுகளுக்கு அருகில் ஒரு காலி மனையில் தேங்கிக் கிடக்கும் குப்பையை நீங்கள் அகற்ற சொல்கிறீர்கள் என்றால், அது நிரந்தர தீர்வு அல்ல. ஒரு தற்காலிக மாற்றமே என்பதை நீங்கள் உணர வேண்டும். மற்றொரு ஆறுமாத கால அளவில் அதே காலியிடத்தில் மீண்டும் ஒரு குப்பை மேடு உதயமாவதைத் தடுக்க இயலாது என்பது தான் மேலே சொன்ன புள்ளிவிவரத்தின் விளக்கம்.

மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள், இப்படி உபரியாக விடப்படும் குப்பைகளை அடையாளம் கண்டு எடுக்க பயன்படுமா என்றால் அது தர்க்கத்தில் தான் சென்று முடியும். உண்மை நிலவரம் எதுவென்று ஒரு ஆறுமாத காலம் கழித்து உங்கள் அருகில் இருக்கும் காலியிடத்தில் கிடைக்கும். காத்திருப்போம்.

சரி, அப்படி சேகரிக்கப்படுகிற 13,955 டன்கள் (நாளொன்றுக்கு) அளவிலான குப்பை என்ன செய்யப்படுகிறது.? என்று கேள்வி எழுகிறதா.?

அந்த மொத்த அளவில், கிட்டதட்ட 47% அளவிலான குப்பைகள் (6,620 டன்கள்), பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கோ (Recycle), மறு உபயோகத்திற்கோ (Reuse) எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அதாவது, மின்னணு உபரிகள் மறு சுழற்சிக்கும், மருத்துவக் கழிவுகள் எரிப்பான்களின் வழி (Incinerator) பஸ்பமாக்கப்பட்டும், மக்கும் தன்மையுள்ள உணவுக் குப்பைகள் அங்காங்கு உள்ள அரசின் கிடங்குகளில் உரங்களாக மாற்றப்படுகின்றன.

மீதமுள்ள 6,765 டன்கள், அதாவது 53% குப்பைகள் (மக்காதவை) பெரும் கிடங்குகளில் புதைக்கப்படுவதாக (Landfilled) அரசின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.

அதாவது நாளொன்றிற்கு சென்னை மட்டும், ஏறத்தாழ 2,650 டன்கள் அளவுள்ள குப்பைகளை குழியில் இட்டு மூடிவிடுகிறது. ஆண்டொன்றிற்கு இதன் அளவு எவ்வளவு கடந்த ஒரு தசாப்தத்தில் எவ்வளவு என்கிற விவரங்களை உங்கள் கணித மூளையின் வசம் விட்டுவிடுகிறேன்.

இவ்வளவு குப்பையும் புதைக்கப்படும் மண்ணில், அதன்வழி பிற்கால சந்ததிகளுக்கு, இயற்கைக்கு என்ன விதமான விளைவுகளைத் தரவிருக்கிறது என்பதனையும் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இருப்பினும் நினைவில் பதியும் வண்ணம் விவரிக்க இரண்டே இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிட விழைகிறேன்.

  • அண்மையில், நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு உட்பட்ட பகுதியில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய போது மக்காக் குப்பைகள் கொத்து கொத்தாக வந்தது நினைவிருக்கலாம். அந்த மண்டபம் திறக்கப்பட்டது டிசம்பர் மாதம் 1989-ஆம் ஆண்டு. அதற்கு முன்பாக அந்த நிலத்தில் புதைக்கப்பட்ட குப்பைகள் 31 ஆண்டுகள் கழித்து அதே நிலையில் ஒரு தொல்பொருள் போல மீண்டு வந்துள்ளது. இது ஒரு பிரபலமான உதாரணமே. உங்கள் அருகிலும் இப்படியொரு நிகழ்வை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்படி அழுத்தப்படும் குப்பைகள் ஆண்டாண்டுகள், நூற்றாண்டுகள் கழித்து கிடைக்கும் ஒரு அவல நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். சில நூறு ஆண்டுகள் கழித்து தோண்டப்படும் போது நமது வரலாறு நம்மை ஒரு நாகரீகமற்ற குப்பை சமூகமாகத் தான் சந்ததிகளுக்கு பறைசாற்றும்.

  • 2007-ஆம் ஆண்டு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எஹிமா பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வறிக்கை ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதன்படி, பெருங்குடி (சென்னையின் மாபெரும் குப்பைக் கிடங்கு) அருகில் வசிக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் பெண்களிடம் தாய்ப்பால் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், அதில் குப்பைகளை எரிப்பதால் வெளிவரும் அநேக வகை, நச்சு OrganoChlorines மற்றும் Dioxin-கள் கலந்திருப்பதாக அதிர வைக்கும் ஒரு ஆய்வு முடிவை போகிற போக்கில் முன்வைத்து போகிறது. இதே நிலைதான் தமிழகத்தின் இதர குப்பைக் கிடங்குகளுக்கு அருகில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஆக, புனிதம் என நாம் போற்றும் தாய்ப்பால் கூட இங்கு அருவருக்கத்தக்க, அங்க குறைபாடுகளை உருவாக்கவல்ல நச்சு பாலாகத் தான் இருக்கிறது என்பது படித்துக் கடக்கும் செய்தியல்ல.

குப்பைகளை பிரித்து தரும் (Segregation at Source) என்கிற புத்தாண்டு புதிய ‘ஜிமிக்கிக் கம்மல்’ மின்னுமே தவிர, ஒரு ஆறு மாத காலத்தில் பழைய நிலைக்கு நம்மை மீண்டும் இட்டுச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதற்கிடையில், நகரமயமாக்கலின் விளைவாக, நகரத்தின் பெரும்பாலான குப்பைப் கிடங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளன. இன்னும் நகரத்தின் வெளிப்புறங்களுக்கு கிடங்குகளை நகர்த்துவது என்பது, சேகரிக்கப்படும் குப்பைகள் சென்று சேருவதில் மேலும் சிக்கலை உருவாக்கும். உதாரணமாக பூந்தமல்லியில், ஒரு டிப்பர் லாரியில் சேகரிக்கப்படும் குப்பை, கிட்டத்தட்ட 36 கிலோமீட்டர்கள் பயணம் செய்து கிடங்கில் புதைக்கப்படுகிறது. இது மேலும் தூரமாக்கப்படும் சூழலில், குப்பை சேகரிப்பதே, அரசுக்கு மிக அதிக செலவு பிடிக்கும் செயலாகிவிடும்.

விளைவு, முன்னர் குறிப்பிட்டது போல, அதிக அளவிலான குப்பை, நீக்கப்படாமல் நகரின் தெருக்களில் மிதக்கும் நிலை தான் உருவாகும். நீங்களும், நானும் குப்பைகளோடு வாழப் பழக நேரிடும்.

இது சென்னைக்குத் தானே என்பது உங்கள் எண்ணம் எனில், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஒரு காலி மனையை சென்று பார்க்கத் தவறாதீர்கள்.

சென்னையின் மிக முக்கிய குடிநீர் ஏரியான போரூர் ஏரியின் பின் பகுதியில் ஏரியின் பரப்பிற்கு உட்பக்கத்தில் பல்லாயிரம் டன் அளவிலான குப்பைகள் (மருத்துவக் கழிவுகள் உட்பட) நித்தம் கொட்டப்படுகிறது.

‘எஞ்சியிருக்கிற நீர்நிலைகள் கூட குப்பைக் கிடங்குகளாக மாறிவருகின்றன’ என்பதே இதன் பொருள். கவனிக்கப்படாத இடங்கள் தானே, ஈழிவான செயல்களின் ஊற்றுக் கண்?

சரி. என்னதான் தீர்வு ?

‘தீர்வு என்ன?’ என்பது மூன்று பக்கக் கட்டுரையில் வருவதல்ல என்றாலும், ஒரு விவாத்தத்தினை துவங்கி வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

குப்பை மேலாண்மை என்பது இந்தியாவிற்கான சவால் மட்டுமல்ல. ஏனைய உலக நாடுகளும், வளர்ந்த நாடுகளும் இது போன்ற சிக்கல்களைச் சந்தித்து, பல ஆக்கப்பூர்வமான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றன. அவற்றில் சில உதாரணங்களை நமது சிந்தனைக்கு எடுத்து செல்வதன் மூலம் நாம் தீர்வை நோக்கிய பாதையில் சிந்திக்கலாம்.

எரி உலை

சென்னையின் மொத்த பரப்பளவு 426 ச.கி.மீ. சிங்கப்பூரின் மொத்த பரப்பளவு 728 ச.கி.மீ. 2011 கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை 70.7 லட்சம். சிங்கப்பூரின் மக்கள் தொகை 56.4 லட்சம் (2018 கணக்கெடுப்பு).

எனவே இவை இரண்டையும் ஒப்பிடுவது சரியான ஒப்பீடாக அமையும்.

பரப்பளவில் சிறியதாக இருக்கும் சிங்கப்பூர் தனது மொத்த குப்பைகளுக்கு பெரும் குழிகள் தோண்டுவது சாத்தியமில்லாத செயல். அதற்கு காரணம் சிங்கப்பூர் மிக வேகமாக வளரும் ஒரு பொருளாதார முனையம் (Economic hub).

அப்படி என்றால் அவர்களின் குப்பைகளை, குறிப்பாக மக்காத குப்பைகளை என்ன செய்கிறார்கள்? இதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.

தீயிட்டு எரிக்கிறார்கள். உடனடியாக, Dioxin, OrganoChlorines என்று உங்கள் மனதில் உதிக்கும் அத்தனை கேள்விகளுக்கும் அவர்களிடம் பதில் உண்டு.

சிங்கப்பூர் நாளொன்றுக்கு 8,443 டன்கள் குப்பைகளை உருவாக்குகிறது. ஆம். சென்னையின் அளவை விட அதிகமான அளவில் குப்பைகளை கொட்டுகிறது அந்த நாடு.

இந்த மொத்த அளவில் மறுசுழற்சி செய்யப்படும் அளவு 61% (தமிழகத்தில் இந்த விழுக்காடு 47% என்று பார்த்தோம்). மீதமுள்ள 3,293 டன்கள் குழிகளில் கொட்டி மூடப்பட வேண்டும். அப்படித்தானே?

இல்லை. சிறிய நாடான சிங்கப்பூர் இவற்றை எரிக்க 4 முக்கிய எரிஉலைகளை இரண்டு எல்லைகளில் அமைத்துள்ளது. அதன் ஒட்டுமொத்த எரிக்கும் திறன் நாளொன்றிற்கு 7,800 டன்கள். அதாவது, 850 முதல் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த குப்பைகள் எரிக்கப்படுகின்றன.

அப்படி எரிக்கப்படும் எஞ்சிய குப்பைகளின் வழி, அந்த எரிஉலைகள் மின்சாரம் தயாரிக்கின்றன. அதாவது நமக்கு தான் அது குப்பை எரிப்பு. எரிஉலையைப் பொறுத்தவரை குப்பை என்பது இடுபொருள். அப்படி நாளொன்றிற்கு அங்கு உருவாக்கப்படும் மின்சாரம் 1600 MW. அதாவது கூடங்குளத்தின் ஒரு அணு உலையின் மொத்த மின் உற்பத்தியை விட அதிகம் (1000 MW).

அப்படி எரிப்பதன் வழி இந்தக் குப்பைகளின் மொத்த எடை 90% குறைக்கப்படும். என்றால் நமக்கு இந்த எரிஉலைகளின் வழி 10% கழிவுகள் மணல் மணலாக வரும். சென்னையின் மொத்த 2650 டன்கள் குப்பை (புதைக்கப்படும் அளவு) வெறும் 265 டன்கள் எனக் குறையும். இப்படி மீதமிருக்கிற எடையில் பெரும்பாலும் இரும்பு அடிப்படை பொருட்கள் கிடைக்கும் (Ferrous Material and Ashes), அதனை மீண்டும் மறுசுழற்சி செய்ய இயலும்.

இப்படியாக படிப்படியாக எடை குறைக்கப்பட்டு, இறுதியாக கிடைக்கும் உபரி அளவு சாம்பல்களை கடலில் இருக்கும் ஒரு தீவின் அருகில் கொட்டி நிரப்பி, ஒரு பத்தாண்டுகளில் நிலமாக பயன்படுத்தலாமா என்று நாட்டின் அரசு யோசித்து செயல்படுத்தி வருகிறது.

இதுதானே ஆக்கப்பூர்வமான செயல்? அன்றி, மொத்த கழிவுகளையும் ஒரு சில படுகுழிகளில் நிரப்பி, சென்னை மாநகரின் நுரையீரலை மொத்தமாக நிறுத்துவதா மாற்றம்?

Dioxin-களும் நச்சு வாயுக்களும்

குப்பைப் கிடங்குகள் தான் நச்சு வாயுக்களின் உறைவிடம். அப்படி என்றால் எரித்தால் நச்சு வாயுக்கள் வராதா?

நிச்சயம் வரும். ஆனால் ஆய்வுகள் கூறுவது வேறு. கிடங்கு குழிகளில் உருவாகும் நச்சு வாயுக்களை விட, எரிஉலைகளில் உருவாகும் வாயுக்கள் பன்மடங்கு குறைவானது என்று பதிவு செய்கின்றன.

சரி, பொதுவெளியில் எரித்துவிடலாமே? இன்று அப்படி அங்காங்கே எரிப்பது சரிதானே.? என்று தோன்றலாம்.

இல்லை. பெரும்பாலான நச்சு வாயுக்கள் (Particularly Dioxins and OrganoChlorines) கொழுப்பில் கரையும் தன்மை கொண்டவை. அதாவது பொதுவெளியில் எரிக்கப்படும்போது இவை மனித சுவாசத்தின் வழி உடற்கொழுப்பில் கரையும் வாய்ப்புகள் அதிகம்.

அப்படி என்றால் எரிஉலை எப்படி சரியாகும்? அங்கும் இவை காற்றில் கலக்கும் தானே?

சிங்கப்பூர் மட்டுமல்லாடும், ஸ்வீடன், ஜப்பான், ஃப்ரான்ஸ் என உலகின் பல நாடுகள் எரி உலைகளை வெற்றிகரமாக இயக்கி வருகின்றனர். அதன்வழி, வெளியேறும் நச்சு வாயுக்கள் “பல அடுக்கு வடிகட்டிகளின் ஊடே, வேதியியல் முறைகளின் வழி” (Multi level filtration and Chemical processing) நச்சு நீக்கப்பட்டு, வெளியேறும் காற்றின் தரம் சோதிக்கப்படுகிறது.

பொதுவெளி படுகுழிகளிலும், காலி மனைகளிலும், நீர் ஆதார ஏரி, குளங்களிலும் கொட்டப்படுவதைவிட, முறைப்படுத்தி எரித்து அதன்வழி நகரையும், சூழலையும் சுத்தமாக வைக்கும் முறைதான் நமது இலக்காக இருக்க வேண்டும். இருக்கக் கூடும்.?

மீதமுள்ள கழிவுகளின் நிலை

சிங்கப்பூர் போல நாம் மீதமுள்ள கழிவுகளை கடலில் கொட்ட வேண்டிய தேவையில்லை. இது போன்ற இடங்களில் நாம் வளர்ந்து வரும் அறிவியலில் துணையை நாடலாம்.

ஒரு உதாரணத்திற்கு, சீனா போன்ற நாடுகள் அதிவேக ரயில்களை இயக்குகின்றன. இவை ஏன் இந்தியாவில் சாத்தியமில்லை.?

System சரியில்லை என்பது தான் பதில். ஆம் இது ரயில் தடங்களின் அமைப்பு (வேற System). அதாவது அதிவேக ரயில்கள் பயணிக்க ஏதுவாக இந்திய ரயில் தடங்கள் இல்லை. அதிவேகமாக பயணிக்கும் ரயில்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளை, தடம் தாக்குப்பிடிக்க வேண்டும் (Cushion to absorb vibrations).

அதற்கு நெகிழிக் கழிவுகள் (குறிப்பாக நாம் மேற்சொன்ன எரிஉலை மிச்சம்) உதவும் என்கிறது இன்றைய ஆய்வுகள்.

அதாவது இன்று நாம் பார்க்கும் தடங்களில் இருக்கும் CEMENT BAR (WOODEN BAR in some places) -க்கு பதிலாக நெகிழிக் கழிவுகள் கொண்டு உருவாக்கப்படும் Bar-களைப் பயன்படுத்தினால் அதிவேக ரயில்களுக்கான தடங்களை குறைந்த செலவில் உருவாக்க இயலும் என்கிறது அறிவியல். இதற்கான முதல்நிலை சாத்திய ஆய்வுகளை (Pilot studies) இந்திய ரயில்வே துறையிடம் முறையிட வேண்டும். இது சாமான்யனின் செயலால் நடக்குமா?

தவிர, நடைபாதை கற்கள் (Pavements), சாலைகள் (used in tar generation), இப்படியாக உபரி கழிவுகளையும் பயனுள்ளதாக நாம் மாற்ற இயலும்.

இப்படி உருவாக்கப்படும் கற்கள் மற்றும் ரயில் தடங்கள், 50 ஆண்டுகள் வரை நீட்டித்து நிற்கும் என்று ஆய்வுகள் மிகைப்படுத்துகின்றன.

50 ஆண்டுகள் இல்லை என்றாலும், இன்றைய சாலைகள் போல 10 நாட்களில் பெயர்ந்து விடாது என்று உறுதியாக நம்பலாம் தானே?

ஆக, எரிஉலை மற்றும் இதர வழிகளில் முழுமையாக திடக் கழிவு மேலாண்மையின் தமிழகம் முன்னோடி மாநிலமாக வர நிறைய சாத்தியக் கூறுகள் உள்ளன.

எரிஉலைகளுக்கு எதிரான குரல்

இதற்கிடையில், கோவை மாநகராட்சி முன்னெடுத்த, எரிஉலை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை சில இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.

அப்படி என்றால், இந்த எதிர்ப்புகள் மீண்டும் குப்பைக் கிடங்கு குழிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்திற்கே வழிவகுக்கும் என்பது திண்ணம்.

விரிந்த சிந்தனையோடு அறிவியல் சார்ந்த தீர்வை நோக்கி நகர்த்த ஒவ்வொரு இயக்கமும் செயல்பட வேண்டும். வெறும் எதிர்ப்போடு நில்லாது, தன்னாலான திட்ட வடிவங்களை பரிந்துரை செய்ய வேண்டும்.

நெகிழி தடை

கடந்த ஆண்டு, 50 மைக்ரானுக்கு கீழான நெகிழித் தாள்கள் விற்க அரசு தடை விதித்தது. என்றால் மொத்தமாக நெகிழியை தடை செய்துவிட்டால் என்ன.?

நெகிழி தடை செய்யப்பட்டால், துணியும், தாளும் மாற்றாக அமையும். அதன்வழி வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை மற்றும் சாயக் கழிவுகளின் அளவு குறித்து ஒரு விரிவான ஆய்வையும் நாம் சேர்த்தே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படி என்றால், நெகிழி தான் தீர்வா? இல்லை.

பொதுவாக, துணிக்கடைகளில் நாம் பெரும் அடர்த்தியான நெகிழிப் பைகளை, கட்டைப் பைகளை எளிதில் வீசி எறிவதில்லை. காரணம் அதன் நீட்டித்த பயன்பாடு.

ஆனால் மெல்லிய தாள்கள் பெரும்பாலும் இரண்டாம் பயன்பாட்டிற்கே வராது. பெரும்பாலான ஐரோப்பிய, மத்திய தரைக் கடல் நாடுகள் இதனை உணர்ந்தே, 100 மைக்ரான்-களை விட அளவு குறைந்த நெகிழி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்து அதனை நடைமுறைபடுத்தியும் இருக்கின்றன.

இதில் உணர வேண்டியது இரண்டு.

முதலில், உற்பத்திக்கு தடை. சில ஆண்டுகள் முன்னர் நம் அரசு செய்ததை போல “இலவசமாக தரத் தடை, ஆனால் நெகிழிப் பைகளை விற்றுக் கொள்ளலாம்” (Offering for free) என்பதல்ல இது. விற்பனைக்கு தடை என்றால், தயாரிக்கலாமா என்று ஒரு கேள்வி வரும் தானே.? ஒட்டுமொத்த புழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இரண்டாவதாக, வெறும் தடை என்பதோடு நில்லாது, கடுமையான விதிகளின் வழி அதன் விற்பனையை கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

இப்படி செய்யும் நிலையில், கிடங்குகளில் படிப்படியாக நெகிழிகளின் அளவு குறையும். காரணம் பெரும் அடர்த்தி நெகிழிகள், மறுசுழற்சிக்கு தன்னிச்சையாக நகரும்.

இப்படி படிப்படியாக தொலைநோக்கு திட்டங்களின் வழி ஒரு 10 ஆண்டுகளில் நிகழ்த்த வேண்டிய மாற்றத்தினை, ஒரு புத்தாண்டின் முதல் நாள் காலை, குப்பைகளை பிரித்து கொடுப்பதன் மூலம் நடத்திக் காட்டுவோம் என்று அறைகூவல் விடுப்பது, வெறும் கேலிக் கூத்தாக மட்டுமே வரலாற்றில் நினைவில் நிற்கும்.

மாற்றங்கள் எதார்த்தங்களின் வழி கட்டமைக்கப்பட வேண்டும். வெறும் அரைகுறை கனவுகளின் வழி அல்ல !

  • அதீதன்

Proof links : 

http://www.cmdachennai.gov.in/Volume1_English_PDF/Vol1_Chapter08_Solid%20Waste%20Management.pdf

https://tnpcb.gov.in/pdf_2019/AnnualRptSolidwaste1920.pdf

https://www.researchgate.net/publication/6471128_High_levels_of_organochlorines_in_mothers’_milk_from_Chennai_Madras_city_India

Where does your rubbish go? | Singapore Works | The Straits Times

Should we burn or bury waste plastic ?

Duratrack Railway Sleepers – An Innovative Solution to Waste Plastic

Chennai: A city choking on waste

Please complete the required fields.




Back to top button
loader