தமிழகத்தில் மின் கட்டண தொகையுடன் ஜிஎஸ்டி வசூலிப்பு.. எதற்காக ?

தமிழ்நாட்டில் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் என அனைத்திற்கும் மின்விநியோகம் செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாட்டை அளவீடு செய்து கட்டணம் வசூலிக்கிறது.

Advertisement
இந்நிலையில், தமிழகத்தில் நடப்பு மாதத்தில் மின் கட்டணம் செலுத்தும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது எதற்காக வசூலிக்கப்படுகிறது என குறிப்பிடாத காரணத்தால் மின் கட்டணத்துடன் ஜிஎஸ்டி தொகை வசூலிப்பது பரபரப்பையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது. 
கூகுள் பே போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கும் முதலில் அட்டையில் குறிப்பிடப்பட்ட தொகையே காண்பிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் ஜிஎஸ்டி உடன் கூடிய தொகை காண்பிக்கப்பட்டு உள்ளது.
.
இந்நிலையில், மின் கட்டணத்துடன் ஜிஎஸ்டி தொகை வசூலிக்கப்படுவதற்கு அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்து கண்டனமும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ” மின் நுகர்வில் 100 யூனிட்டுக்கும் குறைவாகப் பயன்படுத்திய வீடுகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது அநியாயமாகும். சான்றாக திருச்சி மின் திட்டத்தில் மின் இணைப்பு எண் 464-ன் மின் கட்டணம் ரூ.95. இதற்கு விதிக்கப்பட்டுள்ளன ஜிஎஸ்டி ரூ.90 என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வசூலிக்கப்பட்ட வரித் தொகையைக் கட்டணத்தில் வரவு வைத்து ஈடு செய்ய வேண்டும் ” எனத் தெரிவித்து உள்ளார்.
.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில், ”  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் பதிவு கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு கட்டணம், மின் துண்டிப்புக் கட்டணம் என பல வகையான கட்டணங்களை வசூலித்து வருகிறது என்றும், இந்தக் கட்டணத்திற்கும் இதுவரை பொருட்கள் மற்றும் சேவை வரி வசூலிக்கப்படவில்லை என்றும், ஆனால் தி.மு.க ஆட்சியில் இதற்கு 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவை வரி வசூலிக்கப்படுவதாகவும், 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பொருட்கள் மற்றும் சேவை வரி அமலுக்கு வந்ததிலிருந்து இதுநாள் வரை வசூலிக்கப்படாதவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து நுகர்வோர் சந்தேகம் எழுப்பினால் தெளிப்படுத்த மின்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

மின் பயனீட்டிற்கான கட்டணத்திற்கும் ஒரு சில நேர்வுகளில் பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து மின் வாரிய அலுவலர்களிடம் கேட்டதற்கு அவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்துடன் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி தொகை மின் பயன்பாட்டு கட்டணத்திற்கு அல்ல. ஏனெனில், மின் பயன்பாட்டு கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அந்த ஜிஎஸ்டி தொகை வேறுபடுகிறது.
.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் பேசுகையில், ” மின் பயன்பாட்டிற்கான கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனால், இதர மின் சேவைகளுக்காக வசூலிக்கப்படும் பல வகையான கட்டணங்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜிஎஸ்டி வசூலிக்காதவர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது ” எனத் தெரிவித்து இருந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டில் கூட தமிழக மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்திய போது சிலரது பில்லில் ஜிஎஸ்டி தொகை வசூலிக்கப்பட்டது. அப்போதும், இதேபோல் பதிவு கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் கட்டணம் போன்றவைகளுக்கான ஜிஎஸ்டி தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக மின்வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Advertisement

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button