நெட்டிசன்களின் எதிர்ப்பால் “துணிவு” ட்வீட் பதிவை நீக்கிய TANGEDCO !

டிசம்பர் 24ம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின் வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ” எனக் கூறி TANGEDCO துணிவு திரைப்படத்தின் லோகோ படத்துடன் பதிவிட்டு இருந்தது.

TANGEDCO தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “துணிவு” லோகோ உடன் பதிவிட்டது தொடர்பாக செய்தி சேனல்களிலும் நியூஸ் கார்டுகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

Archive link 

இதையடுத்து, TANGEDCOவின் ட்விட்டர் பதிவு சர்ச்சையாகி பல்வேறு விமர்சனங்களை பெறத் தொடங்கியது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள துணிவு திரைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விநியோகம் செய்யும் “துணிவு” திரைப்படத்திற்கு விளம்பரம் செய்யும் பணியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொள்வதாக நெட்டிசன்கள் தரப்பில் விமர்சனப் பதிவுகள் சமூக வலைதளங்களில் எழுந்தன.

இந்நிலையில், TANGEDCOவின் பதிவு சர்ச்சையாகவே, ட்விட்டர் பக்கத்தில் துணிவு பதிவு நீக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க : நடிகர் அஜித் குமாரின் எடிட் செய்யப்பட்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அமர் பிரசாத் !

அரசு சார்ந்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் கடுமையான பணியை போற்றக்கூடிய வகையில் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் தெரிவித்து பதிவிடுவது நியாயமான ஒன்று. ஆனால், ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக அந்த படத்தின் லோகோ உடன் பதிவிடுவது அந்த படத்திற்கான விளம்பரத்தையே ஏற்படுத்திக் கொடுக்கும் !

Please complete the required fields.




Back to top button
loader