மாணவர்களிடம் சாதி, மத ஒடுக்குமுறையில் ஈடுபடும் ஆசிரியர்கள்.. என்று தீரும் இந்த அவலம் ?

மாணவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கு முதலில் சாதி என்பது ஒரு மனநோய் எனப் பாடம் எடுக்க வேண்டியுள்ளது. “ தீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்” எனப் பள்ளி பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
முதல் பக்கத்தில் உள்ள அவ்வாசகத்தைப் படிக்காத அல்லது படித்தும் அதை ஏற்க மனம் இல்லாத ஆசிரியர்கள் மாணவர்களைச் சாதியின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்துவது, கழிவறை சுத்தம் செய்யச் சொல்வது போன்ற வன்கொடுமைகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டுதான் உள்ளனர்.
பட்டியலின மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பட்டியலின மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வற்புறுத்தியுள்ளார். அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வீடியோவில் கூறியதன் அடிப்படையில் இவ்வன்கொடுமை நடப்பது முதல் முறை அல்ல. பல ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியர் கீதா ராணி இக்குற்றத்தைச் செய்து வந்துள்ளார்.
இதனை விசாரிக்க மூன்று வட்டார கல்வி அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கீதா ராணி மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து கீதா ராணியை பணியிடை நீக்கம் செய்ததுடன், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போல் 2019ம் ஆண்டு கோவை மாவட்டம், கரட்டு மேடு கந்தசாமி நகரில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களைச் சாதியின் பெயரால் இழிவுபடுத்துவது, கழிவறையைச் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது முதலான வன்கொடுமைகளில் ஈடுப்பட்டுள்ளார்.
பழங்குடியின மாணவர்களைத் தனியாக அமர வைத்தல்
கடந்த நவம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம், தத்தைமஞ்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த பழங்குடியின மாணவர்கள் 2 நாட்களாகப் பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பழங்குடியின மாணவர்களை வகுப்பறையில் தனியாக அமர வைப்பது, பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்காதது குறித்து அம்மாணவர்கள் கூறியுள்ளனர்.
எல்லோரும் சமம் தானே டீச்சர் :
கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருந்தது. அப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி அப்பள்ளி மாணவர் ஒருவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சில ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு “அவர்களை உனக்குப் பிடிக்குமா” எனக் கேள்வி கேட்கிறார். அனைத்து ஆசிரியர்களையும் பிடிக்கும் என அம்மாணவன் பதிலளித்தார்.
“நமது பள்ளியில் உனது சாதியைச் சேர்ந்தவர்களும், எனது சாதியைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் உள்ளனர். எனவே பட்டியலினத்தவரிடம் பள்ளி சென்றுவிடக் கூடாது. உங்கள் ஊர் ஆட்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருக்கான தேர்தலில் கலந்து கொள்ளச் சொல்” எனச் சாதிய வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் ஆசிரியர் பேசியது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
அந்த ஆசிரியரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு அம்மாணவன் சொன்ன “எல்லோரும் சமம் தானே டீச்சர்” என்ற ஒற்றை வாக்கியம் சம்மட்டியில் அடித்தது போல சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது.
ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அனைத்து தளங்களிலும் உள்ள தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர் எனப் பள்ளியின் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் பள்ளியில் சிறார்களிடம் தங்களது சாதிய வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டுதான் உள்ளனர்.
கல்லூரி பேராசிரியர்களின் சாதிய மனநிலை :
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியரான அனுராதா அக்கல்லூரி மாணவர் ஒருவரிடம் அவருடன் படிக்கும் சக மாணவர்களின் சாதிப் பெயரினை கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களால்தான் பிரச்சினையே வருகிறது என அவர் பட்டியலின மாணவர்களைக் குறிப்பிட்டுப் பேசி மாணவர்களின் மத்தியில் சாதிய பாகுபாட்டினை தூண்டினார். இதனையடுத்து அப்பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கல்வி நிலையங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களையடுத்து இத்தகைய ஒடுக்குமுறை இஸ்லாமிய மாணவர்களின் மீதும் நிகழ்த்தப்படத் தொடங்கிவிட்டனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவரைப் பேராசிரியர் ஒருவர் மும்பை தாக்குதல் பயங்கரவாதியான கசாப் என்பவனின் பெயரை வைத்து தீவிரவாதி என அழைத்துள்ளார்.
பேராசிரியர் இப்படிப் பேசியதற்கு அம்மாணவர் கடும் எதிர்வினையாற்றியுள்ளார். “நீங்கள் என்னை எப்படி தீவிரவாதி எனக் குறிப்பிட்டுப் பேசலாம். இந்த நாட்டில் முஸ்லிமாக இருப்பவர்கள், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற வேதனையை அனுபவித்து வருகின்றனர். இது வேடிக்கை அல்ல. என்னுடைய மதத்தைக் கேலி செய்யக் கூடாது. இதுவொரு வகுப்பறை. நீங்கள் என்னை அப்படி அழைக்க முடியாது” எனப் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து அப்பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் அந்நிகழ்விற்குக் கர்நாடகா மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறிய விளக்கம்தான் மிக மோசமானதாக உள்ளது. ‘நாம் மாணவர்களை ராவணன், சகுனி என அழைக்கிறோம். அந்த வார்த்தைகள் பிரச்சனையாக மாறுவதில்லை. ஆனால் கசாப் என்ற ஒரு சமூகத்தின் பெயர் மட்டும் ஏன் பிரச்சனையாக மாறுகிறது எனத் தெரியவில்லை. இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லை’ எனக் கூறி இருக்கிறார். ஒரு மாணவன் இஸ்லாமியர் என்பதற்காக அவரை பயங்கரவாதி எனப் பேராசிரியர் வகுப்பறையில் மற்ற மாணவர்களின் முன்னிலையில் பேசியது பெரிய விஷயம் இல்லை என பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் பேசுகிறார்.
ஆசிரியர்களும் பேராசிரியர்களும் கல்வியை மட்டுமின்றி சமூகம் சார்ந்த விஷயங்களையும் கற்பிக்கும் இடத்தில் உள்ளனர். ஆனால் அவர்களில் சிலரோ மாணவர்கள் மத்தியில் சாதிய, மத பாகுபாட்டினை ஏற்படுத்துவது, பட்டியலின மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது என தங்களின் சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி கொண்டே இருக்கின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது அவர்களை பணியிடை நீக்கம் செய்வது, கைது செய்வது போன்ற அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது தான். ஆனால், அவை மட்டும் போதுமானது கிடையாது. புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது போலச் சாதிய பாகுபாடு, மாணவர்களின் மத்தியில் எப்படி சமத்துவமாக நடந்து கொள்வது போன்றவை குறித்து பயிற்சியும் ஆலோசனையும் அளிக்கப்பட வேண்டியுள்ளது. அத்தகைய முன்னெடுப்புகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.