This article is from Aug 23, 2019

பயங்கரவாதியின் புகைப்படம் என வெளியான தகவலுக்கு தமிழக டிஜிபி மறுப்பு !

லக்சர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை அளித்த எச்சரிக்கையால் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊடுருவிய 6 பேர்களில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் இருக்கலாம் என்றும், 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் உளவுத்துறை தகவல் தெரிவித்து இருக்கிறது.

இதனிடையே, செய்திகளில் தமிழகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக வெளியாகி வந்தன. மேலும், கோவையில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதி எனக் கருதப்படும் நபரின் புகைப்படத்தையும் காவல்துறை வெளியிட்டு இருப்பதாக தந்தி டிவி உள்ளிட்ட செய்திகளில் ஒருவரின் புகைப்படம் வெளியாகி வருகிறது.

ஆனால், பயங்கரவாதி என சந்தேகப்படக்கூடிய நபரின் புகைப்படங்கள் என வெளியாகும் செய்திக்கு தமிழக டிஜிபி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். பயங்கரவாதிகள் என சந்தேகிப்பவரின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடவில்லை என டிஜிபி திரிபாதி கூறியுள்ளார்.

யூடர்ன் தரப்பிடம் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், ” தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருப்பது உண்மையே. ஆனால், பயங்கரவாதி என சந்தேகப்படுபவரின் புகைப்படங்கள் வெளியான தகவல் மற்றும் குறிப்பிட்ட கார் எண்களில் பயங்கரவாதிகள் பயணித்து வருவதாக வரும் தகவலை காவல்துறை வெளியிடவில்லை ” எனத் தெரிவித்து உள்ளார்.

Please complete the required fields.




Back to top button
loader