கொரோனாவால் வேலை இல்லை 1.50 லட்சம் எப்படி கட்டுவது – தேனாம்பேட்டை குடிசை மாற்று வீடு வாசிகள் !

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் ஏற்கனவே இருந்த 864 குடும்பங்களுக்காக புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு ஒவ்வொரு குடும்பங்களும் தலா 1.50 லட்சம் ரூபாய் பயனாளர் பங்களிப்பாக அளிக்க வேண்டும் என எழுந்த பிரச்சனை தொடர்பாக விரிவான கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.

Advertisement

மேலும் படிக்க : சென்னை புளியந்தோப்பு குடியிருப்பில் 864 வீடுகளுக்கு 1.50 லட்சம் கட்டணுமா ? களநிலவரம் என்ன ?

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரியப் பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளில் குடியேற ஒவ்வொரு வீட்டிற்கும் 1.50 லட்சம் ரூபாய் கேட்பதாகவும், கொரோனா காலத்தில் வேலையின்றி இருக்கும் சூழலில் எப்படி பணத்தை செலுத்துவது என அங்கு வசித்த மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர் நம்மிடம் பேசுகையில், ” தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் அருகே உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் நாங்கள் வசித்து வந்த போது 5 ஆண்டுகளுக்கு முன்பாக பழைய  வீடுகளை இடித்து விட்டு புதிதாக வீடுகளை கட்டி தருவதாக 8,000 ரூபாய் பணம் கொடுத்து காலி செய்ய வைத்தனர். அப்போது, வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு 80,000 கொடுத்தால் வீடுகள் கொடுத்து விடுவோம் எனக் கூறினார்கள். ஆனால், தற்போது 1.50 லட்சம் கொடுத்தால் தான் வீடு வழங்கப்படும் எனச் சொல்கிறார்கள்.

2 ஆண்டுகளில் வீடு தருவதாகக் கூறினார்கள், ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வீடுகளை தருவதாக கூறியுள்ளார்கள். இங்கு இருப்பவர்கள் பெரும்பாலும் செருப்பு தைப்பவர்கள், கூலி வேலை பார்ப்பவர்கள், கட்டிட வேலை பார்ப்பவர்கள். இங்குள்ள 250 குடும்பங்களுக்கு வீடுகள் போக மீதமுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளும் உள்ளன. அவற்றில் குடியமர்த்தப்படும் குடும்பங்களிடம் 1.50 லட்சம் பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது முன்பு கூறியதுபடி ரூ80,000த்தை ஆவது நிர்ணயிக்கலாம் எனக் கூறியதற்கு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதுகுறித்து எம்எல்ஏ-விடம் மனுக் கொடுத்து பேசினோம். ஆனால், இது கடந்த அதிமுக ஆட்சியில் நடந்துள்ளது, இதுதொடர்பாக கலந்து ஆலோசித்து விட்டு பேசுவதாகக் கூறினார். 1.50 லட்சம் தொகைக்கு வங்கி லோன் ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், கொரோனா சூழ்நிலையில் நானும் வேலையை இழந்து விட்டேன், இன்னும் வேலை கிடைக்கவில்லை. மாதம் என்ன இருக்கிறதோ அதை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில், மாதந்தோறும் வங்கிக்கு இஎம்ஐ போன்ற விசயம் சாத்தியமில்லாதது. இதற்கு பதில் அரசிற்கு 1.50 லட்சத்தை தவணை முறையில் செலுத்த ஏற்பாடுகள் செய்து தந்தால் நன்றாக இருக்கும் ” எனக் கூறி இருந்தார்.

இதுகுறித்து, தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசுகையில், அந்த பகுதிக்கு உரிய அதிகாரியிடம் பேசும்படி என மாற்றி மாற்றி பதில் அளிக்கவில்லை.

Advertisement

சென்னை பகுதியில் சிதலமடைந்த நிலையில் இருக்கும் பழைய குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால், குடிசை மாற்று வாரியத்தின் வீடுகள் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்(1.50லட்சம்) கீழ் மாநில அரசின் நிதி(7 லட்சம்) பங்கீடும் இணைந்து வருவதால் வீடுகளை பெறும் பயனாளிகள் 1.50 லட்சம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

புதிய வீடுகளுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்பவர்களாகவும், கொரோனா சூழ்நிலையில் சிக்கி வேலை இழந்தும் உள்ளனர்.

இதற்கிடையில், சென்னையில் சிதலமடைந்த நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகள் மீண்டும் அதே இடங்களில் 5 ஆண்டுகளில் கட்டித் தர உள்ளதாக குடிசை மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார். தற்போது அமைக்கப்படும் வீடுகளுக்கு பயனார் பங்களிப்பு தொகை குறித்து அறிவுறுத்தப்படும். ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளுக்கு காத்திருக்கும் மக்களுக்கு எளிதாக முறையில் பங்களிப்பு தொகையை செலுத்தும் வகையில் அரசு ஏற்பாடு செய்து தருவதே உகந்ததாக இருக்கும்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button