“தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு; சித்திரை அல்ல” – தமிழறிஞர்கள் !

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டா அல்லது சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா என்பது ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் விவாதத்துக்கு உள்ளாகும் தலைப்பு. 2008ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்பது ‘தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு’ என்று அரசாணை வெளியிட்டு அறிவித்தது. பின்னர் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதனைத் திரும்பப்பெற்று சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.

உண்மையில் தமிழ் புத்தாண்டு தை என தீர்மானிக்கப்பட்டது ஏன்? அதனைக் கூடி முடிவு செய்த அறிஞர் பெருமக்கள் யாவர் என்பது குறித்தும் அவர்கள் வைத்த காரணங்களையும் கீழே இந்த கட்டுரையில் காண உள்ளோம்.

‘தை முதல்நாளே’ தமிழ்ப்புத்தாண்டு என்று பல்வேறு தமிழறிஞர்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்முதல் ஆராய்ந்து கூறிவருகின்றனர். அவ்வாறு கூறிய தமிழ் அறிஞர்களுள் முக்கியமான முதன்மையான பத்து தமிழ் அறிஞர்கள் குறித்து ஒரு சிறுகுறிப்பு.

01. மறைமலை அடிகளார்

19ஆம் நூற்றாண்டு தமிழ் அறிஞர். தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கியவர். தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என தமிழ் அறிஞர்கள் கூடி முடிவுசெய்யப்பட்ட மாநாட்டில் தலைமை பொறுப்பு வகித்தவர்களில் மிக முக்கியமானவர். முதன்மை சைவ சித்தாந்தவாதி.

02. தேவநேயப் பாவாணர்

20ஆம் நூற்றாண்டு தமிழறிஞர். தமிழ் மொழியின் சொற்களை ஆழமாக ஆராய்ச்சி செய்தவர். தமிழ் தேசியத்தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஆசிரியர் தேவநேயப் பாவாணர்.

03. பெருஞ்சித்திரனார்

20ஆம் நூற்றாண்டு தமிழறிஞர். இந்தி எதிர்ப்பு போராட்டம் , தமிழீழ போராட்டம் ஆகியவற்றில் முதன்மை பங்கு வகித்தவர். இதற்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர். அஞ்சல் துறையில் பணியாற்றிக்கொண்டே ‘பெருஞ்சித்திரன்’ என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் எழுதினார். தமிழீழ விடுதலையை தமிழகத்தில் பிரச்சாரம் செய்தவர்.

04. மு.வரதராசனார்

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். முவ என்று அழைக்கப்பட்ட இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றது மட்டுமின்றி 10 ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.இவர் தமிழ் புத்தாண்டு குறித்து கூறியதாவது:-

“உண்ணுவதிலும் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியை பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்வார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்.”

05. கி.ஆ.பெ. விசுவநாதர்

முத்தமிழ்க் காவலர் என்று அறியப்படும் இவர். நீதிக்கட்சியில் மிக முக்கியமான பங்கு வகித்த முன்னோடி. முறையான பள்ளிக்கல்வி இல்லையென்றாலும் திருவிக, சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் மூலமாக தமிழ் பயின்று ‘தமிழ் இலக்கண கடல்’ என அழைக்கப்படலானார்.

06. திரு.வி.க

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படும் திருவிக , தேச விடுதலைக்கு தொண்டாற்றியவர். திராவிடன் , தேசபக்தன் , நவசக்தி உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராக பணியாற்றிவர். பொதுவுடமை கொள்கையை கைகொண்ட இவர் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக தொழிற்சங்கம் கட்டினார்.

07. பாரதிதாசனார்

புரட்சிகவிஞர் என்று அறியப்பட்ட இவர் , பாரதியின் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார். 80க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் எழுத்துகள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை அளிக்கப்பட்டுள்ளது.

08. கா.சுப்பிரமணியனார்

சட்டக்கல்லூரி விரிவுரையாளராக இருந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் எழுதிய தமிழ் அறிஞர். 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். சைவ சித்தாந்த ஈடுபாடு கொண்டவர்.

09. ந.மு.வேங்கடசாமியார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர். வேளிர் வரலாறு , கள்ளர் சரித்திரம் , சோழர் சரித்திரம் ஆகிய நூல்களை எழுதியவர். பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் ஐம்பெருங்காப்பியங்களில் சிலவற்றுக்கு உரை எழுதியவர்.

10. சோமசுந்தர் பாரதியார்

நாவலர் என்று அழைக்கப்பட்ட இவர் மூத்த தமிழ் அறிஞர். வழக்கறிஞராக பணியாற்றிய இவர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மை பங்கு வகித்து பல்வேறு தமிழ்ப்பாடல்களை எழுதியவர்.

தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று சொல்வதற்கு , பல்வேறு காரணங்களை தமிழறிஞர்கள் முன்வைக்கிறார்கள் அவற்றுள் சில:

பழந்தமிழர்கள் தங்களது அறிவுக்கு உகந்தவாறு காலங்களைக் கணித்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் இயற்கை மனிதனை ஆண்டு வந்ததால் தமிழர்கள் ஒரு வருடத்தை ‘ஆண்டு’ என்று குறிப்பிட்டனர். அவ்வாறே தன்னை ஆள்பவனையும், வணங்கும் கடவுளையும் ஆண்டவன் என்று குறிப்பிட்டனர். ஒரு ஆண்டை தமிழன் ஆறு பருவ காலமாகப் பிரித்தான்.

1. இளவேனில் (தை மாசி), முதுவேனில் (பங்குனி, சித்திரை), கார் (வைகாசி, ஆனி), கூதிர் (ஆடி, ஆவணி), முன்பனி (புரட்டாசி, அய்ப்பசி), பின் பனி (கார்த்திகை மார்கழி). தமிழன் தன் வாழ்வை இளவேனிற் காலத்தில் தொடங்கினான்.

இதையே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். எனவே தை மாத முதல் நாளே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். இவை தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்பதற்கான வாழ்வியல் காரணங்கள்.

2. “தை” மாதத்தைப்பற்றி இலக்கியங்கள் பெருமை பேசுவதால் அதுவே புத்தாண்டின் தொடக்கம்.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” எனக் குறுந்தொகையும்

“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என புறநானூறும்

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என கலித்தொகையும் பாடியுள்ளது.

இவை அனைத்தும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்துள்ளன.

3. குறிஞ்சி , முல்லை , மருதம் நெய்தல் ,பாலை என ஐவகை தமிழ் நிலத்தில் பாலை என்பதொன்று தனியாக இருந்ததில்லை. குறிஞ்சி நிலத்திலும் முல்லை நிலத்திலும் ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் புல் பூண்டு, செடி , கொடி இன்றி காய்ந்து பாலை நிலமாக மாறிவிடும். இது சித்திரையின் போதுதான் நிகழும். எனவே இத்தகைய வருந்தத்தக்க காலநிலையை புத்தாண்டாக கொண்டாடியிருக்க முடியாது.

இந்த முடிவுகளை எட்ட காரணமாக இருந்த சந்திப்புகள் குறித்து இங்கே பார்ப்போம்:-

1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த மூன்று முக்கிய முடிவுகள்.

1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.

(2) அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது.

(3) திருவள்ளுவர் காலம் கி.மு.31

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின்னர் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு நடந்தது. நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் தலைமையில் நடந்த
அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழ்க்கடல் மறைமலையடிகள் உள்ளிட்டோர் கூடினர். தமிழ்க்கடல் மறைமலையடிகள் சான்றுகளுடன் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார். அதை தந்தைப் பெரியாரும் அம்மாநாட்டு மேடையிலேயே ஆமோதித்தார்.

60 ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றுள் ஒன்றேனும் தமிழில் இல்லை. நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இந்தப் புராணக் கதை அருவருப்பான, அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது என்பதும் தமிழறிஞர்களின் வாதமாக உள்ளது.

“அவற்றை தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது தமிழ் ஆண்டுகள் என ஒப்புக் கொள்வானா? என தந்தைப் பெரியாரும் சித்திரையை தமிழ் புத்தாண்டாகக் கருதுவதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு ஆண்டு என்பது ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு, என்று வரிசையாக சென்று கொண்டே இருக்கவேண்டும். அப்பொழுதுதான் 1ஆம் ஆண்டு என்ன நடந்தது? இரண்டாம் ஆண்டு என்ன நடந்தது 50ஆம்ஆண்டு என்ன நடந்தது? 61ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பது போன்றவற்றை நாம் புரிந்துகொள்ள இயலும்.

சித்திரையை புத்தாண்டாக கொண்டுள்ள ஆண்டுவரிசை என்பது அறுபதுடன் முடிந்து பின்னர் மீண்டும் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும். இப்படி சுழற்சி முறையில் ஆண்டுகள் மீண்டும் ஒன்றிலிருந்து துவங்கினால் எந்த ஆண்டு என்ன நடந்தது ? என்பது அறுதியிட்டு சொல்லமுடியாத குழப்ப நிலையே மிஞ்சும்.

எனவே அறிவுக்கு ஒவ்வாத, பயன்பாட்டிற்கு ஒவ்வாத இந்த ஆண்டுகளை தமிழ் ஆண்டு முறையாக தமிழர்கள் கடைபிடித்து வந்திருக்கமாட்டார்கள் என்பது தமிழறிஞர்களின் வாதம். மேலும் இந்த சித்திரை புத்தாண்டு என சொல்லப்படும் ஆண்டுமுறை இடைச்செருகலாக வந்து சேர்ந்தது எனவும் அவர்கள் கருதுகின்றனர். இதனால் மட்டுமின்றி தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்ந்து தமிழரின் நிலப் பிரிவினை , பருவ காலப் பிரிவினை மற்றும் தை போற்றுதலுக்குரிய மாதமாக இருந்தமை இவற்றை வைத்து ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என தமிழறிஞர்கள் முடிவு வந்துள்ளார்கள்!

Please complete the required fields.
Back to top button