தஞ்சையில் ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு சம்பவம் – டிஎஸ்பி பதில்.

தஞ்சையில் பிரம்மாண்ட சிவலிங்க சிலை அமைந்திருந்த ஆதிமாரியம்மன் கோவில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை பொதுப்பணித்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர். அப்பணிகளின் போது பிரம்மாண்ட சிவலிங்கம் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
சிலப் பதிவுகளில், இது தமிழ்நாடா அல்லது தாலிபான் நாடா எனப் பதிவிட்டு கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். தஞ்சையில் கோவில் இடிப்பு சம்பவம் குறித்து பதிவிடுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. கோவில் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியின் வாயிலாக கிடைத்த தகவலையும், தஞ்சை டிஎஸ்பி அளித்த பதிலையும் இணைத்து உள்ளோம்.
தஞ்சை ஆதிமாரியம்மன் கோவில் :
தஞ்சை அருகே உள்ள சமுத்திரம் ஏரி மற்றும் அதன் கரைப் பகுதிகளில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பொதுப்பணித்துறையினர் புளியந் தோப்பு, அருண்மொழிப்பேட்டை கிராமங்களில் சமுத்திரம் ஏரியை சுற்றி 91 ஆக்கிரமிப்புகள் இருப்பதை கண்டறிந்தனர். இப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணிகளை கடந்த 2017-ம் ஆண்டிலேயே துவங்கி இருக்கின்றனர்.
புளியந்தோப்பு கிராமத்தில் சமுத்திர ஏரிப் பகுதியை ஆக்கிரமித்து 14 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்து இருந்த ஆதிமாரியம்மன் கோவில், ராமமூர்த்தி சுவாமிகள் சமாதி, வீடுகள் ஆகியவற்றை அகற்றும் பணிகளைத் தொடங்கிய தருணத்தில் 2018-ல் அக்கோயிலை சேர்ந்த நிர்வாகி பத்மாவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனால் கோவிலை இடிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை விளக்க அளிக்க உத்தரவிடப்பட்டது.
எனினும், பொதுப்பணித்துறை அளித்த பதிலின் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி 10 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆகஸ்ட் மாதமே உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவால், போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் பகுதிகளை இடிக்கத் தொடங்கினர்.
கோவில் இடிக்கத் தொடங்கிய போது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர் சிவலிங்க பீடத்தில் ஏறி தற்கொலைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கி உள்ளனர். இரவாகியதால் வெளிச்சம் இல்லாத காரணத்தினால் கோவிலை அகற்றும் பணிகளை பாதியுடன் நின்றது. அதனால் சிவலிங்கம் மட்டும் தனியாக காட்சி அளித்தது. பின்னர் அதுவும் இடிந்தது விழுந்தது.
இதுகுறித்து, டிஎஸ்பி சீதாராமன் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய போது, இது 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில். கோவிலை அகற்றும் பணியின் போது, கோவில் பல ஆண்டுகளாக இங்குள்ளது எனக் கூறி உரிமையாளர் பத்மாவதி என்பவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், உயர்நீதிமன்றத்தில் ஆவணங்களைக் கொண்டு விரிவாக விசாரணை நடத்திய போது அக்கோவில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டது எனத் தெரியவந்த பிறகு 10 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என பொதுப்பணிதுறை உத்தரவிட்டுள்ளார்கள். அதன் காரணமாகதான் கோவிலை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது ” எனத் தெரிவித்து இருந்தார்.