தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு ! மதமாற்றமில்லை எனக் கூறும் தஞ்சை பாஜகத் தலைவர் !

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியின் மகளிர் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரின் தாயார் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். ஜனவரி 9-ம் தேதி மாணவி விடுதியில் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்ததால் அடுத்தநாள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனையில் ஜனவரி 15-ம் தேதி சேர்க்கப்பட்டார். மாணவி பூச்சி மருந்தை குடித்ததாக கண்டறியவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
இதற்கிடையில், பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி மாணவியை மதமாற்ற கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.
மாணவி பேசிய வீடியோவில், ” இரண்டு வருசத்திற்கு முன்பாக அங்கிருந்த சிஸ்டர் என் முன்னாடியும், அப்பா அம்மாவிடம் உங்கள் பொண்ணை கிறிஸ்டியனா மாத்திக்கவா எனக் கேட்டாங்க, நாங்களே படிக்க வச்சுக்கிறதாவும் கேட்டாங்க. அப்போதில் இருந்து திட்டிக்கிட்டே இருப்பாங்க. அப்போது வீடியோ எடுத்தவர் ,” மாறாததுனால உன்ன தொந்தரவு பண்ணிருக்காங்க எனக் கேட்கும் போது அந்த பெண் ” இருக்கலாம் ” என பதில் அளித்து இருப்பார்.
மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக, கடந்த 16-ம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கி இருந்த விடுதி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, பள்ளி மாணவியை கட்டாய மதமாற்றத்திற்கு உட்பட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தி தற்கொலை செய்ய வைத்ததாக பாஜகவினர், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினரும் போராட்டத்திலும் இறங்கினர்.
ஆனால், மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிப்ரியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ” மாணவியிடம் மாஜிஸ்திரேட் பெற்ற வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடர்பாக அந்த மாணவி எந்தவிதத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேபோல், அவரது பெற்றோரும் அப்படி சொல்லவில்லை. ஆகையால், முதற்கட்ட விசாரணையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
மாணவி அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்து சொல்லப்படவில்லை என காவல்துறை தரப்பில் வெளியான தகவலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் தரப்பில், மகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தியதாக மீண்டும் புகார் ஒன்றை அளித்தனர்.
#JusticeforLavanya
மதம் மாற துன்புறுத்தி தூய இருதய பள்ளி பள்ளி ஆசிரியர்கள் அழுத்தம் தற்கொலை செய்து கொண்ட லாவண்யா -பெற்றோர் கடும் ஆதங்கத்தில் பேட்டி . @annamalai_k @rnandakumarbjp @BJP4TamilNadu @tnpoliceoffl @CMOTamilnadu pic.twitter.com/I0aXaWvcQo— Bjp4 Coimbatore MaaNagar (@bjp4kovai) January 21, 2022
ஜனவரி 21-ம் தேதி மாணவியின் சித்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,” பாத்ரூம் சுத்தம் செய்ய சொல்வது, கணக்கு வழக்கு பார்க்க சொல்வது என மிகவும் துன்புறுத்தி இருக்கிறார்கள். எங்கள் பொண்ணுக்கு நியாயம் வேண்டும். அந்த இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும். எங்கள் பொண்ணுக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்க கூடாது. 2 வருசமா என்னிடமே மதம் மாற சொல்லி கேட்டு இருக்கிறார்கள். கொரோனா காரணமாக டிசி வாங்கவில்லை ” எனப் பேசி இருந்தார்.
மாணவியின் சித்தி பேட்டி அளிக்கும் போது, அவர்களுக்கு பின்னால் இருக்கும் நபர்கள் பேசுவதற்கு எடுத்துக் கொடுக்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று இருப்பதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் இவ்வீடியோ பகிரவும் செய்தனர்.
தற்போது மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடக்கூடாது என்றும், அப்படி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜகவினர் தொடர்ந்து மாணவியின் புகைப்படத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட பாஜக தலைவர்களில் ஒருவரான மாணவி படித்த பள்ளி அமைந்துள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்த டேவிட் என்பவரிடம் பேசுகையில், ” நாங்கள் நேரடியாக அந்த மாணவியின் ஊருக்கு சென்று விசாரித்த போது, மாணவியின் அம்மா இறந்த பிறகு அவரின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த மாணவிக்கு தோல் சார்ந்த பிரச்சனை இருந்ததாவும், சித்தி தரப்பில் மாணவியை ஒதுக்கி வைத்ததாகவும் ஊர் மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில், 7-ம் வகுப்பு படிக்கும் போது அந்த மாணவியை இங்குள்ள பள்ளியில் அப்பாவும், சித்தியும் சேர்த்துள்ளனர்.
இடையில் தீபாவளிக்கு வீட்டிற்கு சென்ற போது சித்தி மாணவியின் கையில் சூடு வைத்ததாக பள்ளி தோழிகள் தரப்பில் எங்களுக்கு தெரிவித்தனர். விடுதியில் மதமாற்றக் கட்டாயப்படுத்தி துன்புறுத்தி இருந்தால் 10-ம் வகுப்பில் 450-க்கும் மேல் எப்படி மதிப்பெண் வாங்கி இருக்க முடியும். அந்த பள்ளியில் ஆண்டிற்கு 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மதமாற்றமாக இருந்தால் குறைந்தது 100 மாணவர்களை மதமாற்றி இருக்க முடியும் அல்லவா.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக கட்சி தலைமை அரியலூர் மாவட்டத்திற்கு மட்டுமே சென்று உள்ளனர், இங்குள்ளவர்களிடம் விசாரிக்க வரவே இல்லை. இங்கு விசாரித்தால் தானே உண்மை தெரியும். மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டம் எனக் கூறி நோட்டீஸ் அடித்துக் கொடுக்கிறார்கள். தற்போது அளித்து வரும் பேட்டிகளால் கட்சி தரப்பில் அழுத்தம் வருவதாகவும் ” தெரிவித்து இருந்தார்.
மாணவி பேசிய வீடியோவை முதலில் சமூக ஊடகங்களில் பரப்பியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட உறுப்பினர் முத்துவேல் என்பவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரின் செல்போன் ஆய்விற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மாஜிஸ்திரேட் பெற்ற வாக்குமூலத்தில் மதமாற்றம் தொடர்பாக எந்த தகவலும் அளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், தஞ்சை மாவட்ட பாஜகத் தலைவர்களில் ஒருவரான டேவிட் அளித்த தகவல் மாணவி உயிரிழப்பை வைத்து மத அரசியலை முன்னெடுப்பதாக சந்தேகங்களை எழுப்புகிறது.