This article is from Jan 27, 2022

வெளிவராத உண்மை : தஞ்சை மாணவிக்கு நடந்தது என்ன? வீடியோ வைரல் !

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மாணவியின் தற்கொலைக்கு காரணம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதே என பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி மருத்துவமனையில் சிகிச்சையின் போது பேசிய மற்றொரு புதிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், ” என் பெயர் ***. எங்க அப்பா பெயர் ***. எங்க அம்மா பெயர்**. நான் மைக்கேல்பட்டியில் 8-ல் இருந்து 12 வரை படிக்கிறேன். எப்பவுமே நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன். ஆனா இந்த வருஷம் என் குடும்ப சூழ்நிலை ஸ்கூல்-க்கு என்னால் போக முடியல. கொஞ்சம் லேட்டா தான் போனேன். அதனால் எப்பவுமே என்னைய வந்து போர்டிங்கில் சிஸ்டர் இருப்பாங்க. அவங்க வந்து கணக்கு வழக்கு பக்க சொல்வாங்க.

இல்ல சிஸ்டர் நான் லேட்டா தானே வந்தேன், எனக்கு ஒன்னும் புரியல நான் அப்புறமா எழுதிதறேன்னு சொன்னாலும், கேட்கவே மாட்டாங்க. பரவாயில்லை எழுதி கொடுத்திட்டு உன் வேலையை பாரு, அப்படி இப்படினு சொல்லி எதாச்சும் என்ன எழுதவச்சிட்டே இருப்பாங்க.

நான் கரெக்டா எழுதினாலும் தப்பு தப்புனு சொல்லி ஒரு கணக்குக்கு ஒரு மணி நேரம் உட்கார வச்சிருவாங்க. கான்சென்ட்ரேட் பண்ணவே முடியல, அதனாலே நான் மார்க் கம்மியா எடுத்திட்டே இருந்தேன். இப்படியே போயிட்டு இருந்தா என்னால படிக்கச் முடியாதுனு நெனச்சுதான், நான் விஷத்தை குடிச்சிட்டேன்.

இதன் பிறகு அடையாளம் தெரியாத நபர் கேட்கும் கேள்விக்கு மாணவி பதில் அளிப்பது இடம்பெற்று இருக்கும்.

அந்த நபர் : உன் பெயர் என்னம்மா ? மாணவி : *** .

அந்த நபர் : அந்த சிஸ்டர் பெயர் என்ன ?  மாணவி : சகாயமேரி.

அந்த நபர் : ஃபாதர் பெயர் என்ன ? மாணவி : ஃபாதர்லாம் இல்ல.

அந்த நபர் : ஸ்கூல் ஹெட்மாஸ்டர் பெயர் ? மாணவி : அவங்கலாம் எதுவும் செய்யல.

அந்த நபர் : அவங்க பெயர் தான் கேட்டேன் ? மாணவி : ஆரோக்கிய மேரி.

அந்த நபர் : உங்கள வந்து வேற ஏதாச்சும் வேலை செய்ய சொல்வார்களா ? மாணவி : வேற வேலனா, கேட் பூட்ட சொல்வாங்க. எல்லா வேலையும் என்னையே செய்ய சொல்வாங்க..

அந்த நபர் : என்னென்ன வேலை செய்வீங்க ?

மாணவி : நான் காலையில் எல்லாரும் எந்திரிக்கிறப்ப, கேட் தொறக்குறது, மோட்டார் போட்டு, எல்லாரும் சாப்பிட்ட அப்புறம் மோட்டார் எல்லாம் கரெக்ட்டா இருக்கா. வார்டன் சார் எல்லா வேலையையும் என்ன செய்ய சொல்வாரு.

அந்த நபர் : அவரு பெயர் ?  மாணவி : கேட்டா நீ தான் பொறுப்பா இருக்க அப்படிம்பாங்க.

அந்த நபர் : “உன்னைய ஸ்கூல்ல பொட்டு வைக்கக்கூடாது அந்த மாதிரியெல்லாம் எதாவது சொல்வாங்களா ? ”

மாணவி : அதெல்லாம் எதுவும் சொல்லமாட்டாங்க .

அந்த நபர் : வேற.. பொங்கலுக்கு ஊருக்கு வந்தியா ?

மாணவி : அப்படியெல்லாம் கேட்டா, இல்ல நீ படிக்கனும், நீ இங்கே இரு அப்படினு சொல்லி என்னைய அங்கேயே இருக்க வச்சிருவாங்க.

அந்த நபர் : இப்ப பொங்கலுக்கு கூட ஊருக்கு வரலையா ?

மாணவி : பொங்கலுக்கு இப்ப உடம்பு சரியில்லனு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்க.

அந்த நபர் : நீங்க மருந்து சாப்பிட்டது வந்து அவங்களுக்கு தெரியுமா ? மாணவி : தெரியாது. ” எனப் பேசி இருக்கிறார்.

முதலில் வைரலான மாணவி பேசும் வீடியோவை எடுத்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முத்துவேல் உடைய செல்போன் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அவர் 4 வீடியோக்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. முதல் வீடியோ மாணவியின் தனிப்பட்ட விவரங்கள், இரண்டாவது தற்போது வைரலாகும் புதிய வீடியோ, மூன்றாவது மதம்மாற கூறியதாக பேசிய வீடியோ, நான்காவது மாணவியின் சித்தி பேசும் வீடியோ.

தற்போது வைரலாகும் வீடியோவில், மாணவி மதமாற்றம் குறித்து குறிப்பிடவில்லை. அதுமட்டுமின்றி, பள்ளியில் பொட்டு வைக்கக்கூடாது என சொல்வார்களா என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் எதும் சொல்லமாட்டாங்க என்றே பதில் அளித்து இருக்கிறார்.

இதற்கிடையில், மைக்கேல்பட்டி பள்ளி நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ” மாணவியின் இழப்பு பள்ளிக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. மாணவி விடுமுறையில் கூட வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் அங்கேயே தங்கியிருந்தார். விடுதி காப்பாளர் மீது மாணவி குற்றம்சாட்டி இருக்கிறார். எனவே, இதுதொடர்பாக சட்ட விசாரணைக்குப் பள்ளி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும். இந்த விவகாரத்தை சில பிரிவினர் அரசியலுக்காக கையில் எடுக்கின்றனர் ” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் படிக்க : தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு ! மதமாற்றமில்லை எனக் கூறும் தஞ்சை பாஜகத் தலைவர் !

இதற்கு முன்பாக, மாணவி தற்கொலைக்கு பின்னால் மதமாற்றமில்லை என தஞ்சை பாஜக தலைவர்களில் ஒருவர் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், வைரலாகும் மாணவி பேசும் புதிய வீடியோ பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

Link : 

New video of Thanjavur Student

Please complete the required fields.




Back to top button
loader