‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பிரச்சாரமாக்கிய பிரதமர்.. 32,000 பெண்கள் என்பதை நீக்குகிறோம் என்ற படத்தின் தயாரிப்பாளர் !

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி‘ திரைப்படம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டம் (Teaser) கடந்த 2022 மார்ச் 22 அன்று வெளியிடப்பட்டது. அப்போது இருந்தே இந்த திரைப்படத்திற்கான எதிர்ப்பு இந்தியா முழுவதும் கிளம்பியது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு போன்றவற்றில் இன்று வரை கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்த நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் இப்படத்திற்கு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இதையடுத்து இந்த படத்தில் சர்சைக்குரிய வகையிலான 10 காட்சிகள் நீக்கப்பட்டு புதிய ‘டீசர்’ வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த 32,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. எனவே இது இந்திய மக்களின் சகோதரத்துவத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்து, இதற்கு தடை விதிக்க கோரி கடந்த மே 2, 3-ம் தேதிகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களிடம் முறையிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. இதைத் தொடர்ந்து 3-வது முறையாக தலைமை நீதிபதியிடம் மீண்டும் முறையிடப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் படத்தை தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து தற்போது கேரள உயர் நீதிமன்றமும், இத்திரைப்படம் தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்த வழக்கில், கேரளாவைச் சேர்ந்த 32,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட படத்தின் டீசரை சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியதற்கும் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
#BREAKING The producer of “The Kerala Story” tells Kerala High Court that the teaser of the movie, which claimed that over 32,000 women from Kerala were recruited to ISIS, will be removed from their social media accounts.
High Court records the statement.#TheKeralaStory pic.twitter.com/juqh0PU4gd
— Live Law (@LiveLawIndia) May 5, 2023
இதுகுறித்து Livelaw செய்தியில் கூறுகையில், ” கேரளாவில் இருந்து 32,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாகக் கூறிய படத்தின் டீசரை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்படும் என்று தி கேரளா ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளர் கேரளா உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் ” என வெளியாகி இருக்கிறது.
Kadam: That was on the basis of an information we received. That was in the teaser. That will not be continued. Please record my submission. We will remove it from social media#KeralaHC #TheKeralaStory
— Live Law (@LiveLawIndia) May 5, 2023
32,000 பெண்கள் என்று எதை வைத்து நீங்கள் கூறுகிறீர்கள் என நீதிபதி கேட்டக் கேள்விக்கு, ” இது எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வைக்கப்பட்டது. அதுதான் டீசரில் இருந்தது. இனி அது தொடராது என்பதை பதிவு செய்கிறேன். அதை சமூக ஊடகங்களில் இருந்தும் அகற்றுவோம் ” என தயாரிப்பாளர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்து இருக்கிறார்.
தி கேரளா ஸ்டோரி கதையின் பின்னணி :
கேரளாவைச் சேர்ந்த பெண்கள் குழு ஒன்று இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு, ‘லவ் ஜிகாத்தில்’ சிக்க வைத்து, இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவிற்கு (ஐஎஸ்ஐஎஸ்) கூட்டிச்செல்வது போன்று கதை செல்கிறது. மேலும் இந்த படம் ஒரு நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனப் படத்தினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
மேலும் இந்த படத்தின் முன்னோட்டம் (Teaser) கடந்த 2022 மார்ச் 22 அன்று Sunshine Pictures என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் தலைப்பு “Behind the beautiful backwaters of Kerala, lies the horror of 32000 missing females.” என்று குறிப்பிடப்பட்ட நிலையில், 2023 ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்ட ட்ரைலரின் தலைப்பில் “…The Kerala Story is a compilation of the true stories of three young girls from different parts of Kerala…” என மாற்றி இருந்தனர். அதாவது, 32,000 பெண்கள் என்பதை 3 இளம்பெண்கள் என மாற்றினர்.
மேலும் படிக்க : “தி கேரளா ஸ்டோரி” எனும் திரைப்படத்தின் டீசரை உண்மைப் போல் பரப்பும் வலதுசாரிகள்
இத்திரைப்படத்தின் டீசர் வெளியான போதே உண்மையான சம்பவம் எனக் கூறி நாடு முழுவதிலும் வலதுசாரிகள் அவ்வீடியோவை வைரல் செய்தனர்.
இதற்கிடையில், கர்நாடக மாநில சட்டமன்றத்தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி, தி கேரளா ஸ்டோரி படம் குறித்து தனது கருத்தினை கூறியுள்ளார். அதில் அவர், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தீவிரவாதிகளின் சதி வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தீவிரவாதிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் செயல்களை எதிர்க்கும் படத்தினை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் தளத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது.
ஆதாரங்கள் :