இஸ்லாமிய மதவாதமும் இனிக்காது ! கலவரம் தேவையா ?

தேனி மாவட்டத்தில் நடந்த கலவரம், அதற்காக வாகனங்களுக்கு தீ, கடை மற்றும் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதம், அதில் பலர் படுகாயம். தேனி மாவட்டத்தின் பொம்மிநாயக்கன்பட்டியில் ஒரு வயதான தலித் பெண்மணி இறந்து போகிறார். அதே நாளில் அவர்கள் பொதுவாக இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வழியில் வேறு ஒரு ஈமச் சடங்கு நடந்து வந்ததால் முஸ்லீம் தெருவை பயன்படுத்த முயற்சித்து இருக்கிறார்கள். அதை அனுமதிக்காமல் முஸ்லீம்கள் தடுக்க பிரச்சனை மூள்கிறது. சிறிய தகராறு உடன் முடிந்தாலும், பின் சையத் என்பவர் தலித் மக்கள் குடியிருக்கும் பாதையை பயன்படுத்தி அவர் தோட்டத்திற்கு செல்லும் போது அங்கிருந்த சிலர் அவரைத் தடுத்து இருக்கிறார்கள். மீண்டும் மோதல் வெடித்து இரு பிரிவினருக்கு இடையே கலவரம் உண்டாகிறது.
ஒரு குடிமகன் ஒரு தெருவை பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல இங்கு யாருக்கு உரிமை இருக்கிறது. தலித் மக்கள் தொடர்ந்து சாதி ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது சரிதானா. இந்து மக்களில் சிலர் வர்ணாசிரம தர்மத்தை ஏற்று தலித்களை கீழானவர்கள் என்று நம்பி செய்யும் முட்டாள்தனத்தை இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் செய்யத் துணிந்து இருப்பது வர்ணாசிரம தர்மத்தை இஸ்லாமியர்களும் ஏற்கிறார்களோ என்ற கேள்வி எழச் செய்கிறது. சாதி விசத்திற்கு இவர்களும் அடிமையாய் போன உதாரணம் இது. சக மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத குணம் எதை பரிசளிக்கும், இப்படியான கலவரங்களையே.
இந்துத்துவ அடிப்படைவாதிகளை எதிர்ப்பதின் நோக்கம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு குந்தகம் வரக் கூடாது. அதனால், வெளிப்படும் வெறுப்புணர்வு நாட்டின் அமைதிக்கு ஆபத்து என்பதாலே தான். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுதளத்தில் இருப்பவர்கள் சிறுபான்மை மக்களோடு நின்று பேசுவதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அர்த்தம் பிற மதத்தின் அடிப்படைவாதத்தை ஏற்கிறோமா, அவர்கள் செய்கிற தவறை எதிர்க்கமாட்டோம் என்பது அல்ல.
எந்த ஒரு நாட்டில் ஊரில் மதத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில் வன்முறை நிகழுமோ அது தனது சந்ததிக்கு மெல்ல மெல்ல சவக்குழியை தோண்டுகிறது என்று அர்த்தம். இந்நேரத்தில் ஒற்றுமையின் தேவையைப் புரிந்து அமைதி திரும்புதலின் அவசியம் குறித்து சிந்திக்க வேண்டும். இஸ்லாம் மத அடிப்படைவாதிகளை சக இஸ்லாமிய தலைவர்களும், மக்களுமே கண்டித்து இப்படியான கீழான சிந்தனையில் இருந்து விடுபட நிர்பந்திக்க வேண்டும். தலித் இயக்கத் தலைவர்களும், மக்களும் வன்முறையை நாடாமல் அமைதிக்கு திரும்ப வேண்டும்.
இந்த விசயத்தை பயன்படுத்தி சில விசமிகள் தேனிக் கலவரம் என்ற பெயரில் தவறான வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர். அது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகும். இப்படியான விச சிந்தனையாளர்களுக்கு ஊக்கம் அளிக்காமல் இரு பிரிவினரும் இருக்க வேண்டும்.
எல்லா மத அடிப்படைவாதிகளும் செய்கிற தவறை திருத்திக் கொண்டு அமைதியை நோக்கிய தேசத்தை உருவாக்க வேண்டுமே தவிர உங்கள் மத வெறிக்கு உணவளித்து கொண்டிருக்கக் கூடாது.