This article is from Aug 02, 2021

திருமாவளவனுக்கு உடைந்த நாற்காலியைக் கொடுத்தாரா அமைச்சர் ?

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்தநாளன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக தளத்தில் வெளியாகி இருந்தன. அதில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து திருமாவளவனுக்கு அமைச்சர் வீட்டில் சிம்மாசனம் இருந்தும் உடைந்த நாற்காலி கொடுக்கப்பட்டது என பரப்பி வருகிறார்கள்.

வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்தது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

Facebook link 

இந்த சந்திப்பின் ஒரு புகைப்படத்தை பா.ஜ.க-வைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதற்கான தலைப்பை கொடுக்க சொல்லி இருந்தார். அந்த பதிவிற்கு பலர் திருமாவளவன் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் நாற்காலியை விமர்சித்து பதில் அளித்திருந்தனர்.

Twitter link  

இந்த விமர்சனங்கள் மீம் வடிவிலும் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர். இது குறித்த உண்மையை ஆராய்ந்து கூற சொல்லி யூடர்னிடம் கேட்டிருந்தார்கள்.

நாம் வி.சி.க கட்சியை சேர்ந்த வன்னி அரசிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அவர் இதை பற்றி கூறுகையில், “தலைவர் திருமாவளவன் வருவதை அறிந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அவரது வீடு வாசல் வரை வந்து தனது வீட்டிற்குள் அழைத்து சென்றார். சமூக வலைதள பதிவுகளில் பரவுவது போல் அமைச்சர் தலைவரை எந்த மரியாதை குறைவுடனும் நடத்தவில்லை. இயல்பாகவே எளிமையானவர் திருமாவளவன். கையை கட்டி உட்காருவதென்பது அவருக்கு எப்போதும் உள்ள பழக்கம். இதை அமைச்சர் முன்னால் மட்டும் கை கட்டி அமர்ந்தது போல் சித்தரிக்கிறார்கள். திருமாவளவன் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறார் என்று உண்மையாக அக்கறைப்படுகிறவர்கள் என்றால் அமைச்சரை கேள்வி கேட்டிருப்பார்கள். அதற்கு எதிர்மறையாக கேள்வி எழுப்புபவர்களின் உள்நோக்கம் இதிலிருந்தே தெரிகிறது” என்று பதில் அளித்தார்.

Twitter link  

வன்னி அரசு கூறியது போல அமைச்சர் தனது வாசல் வரை வந்து திருமாவளவனை வரவேற்றது ஒரு வீடியோவில் பதிவாகி உள்ளது. மேலும் மற்ற புகைப்படங்களை பார்க்கையில் திருமாவளவன் சந்திப்பின் அனைத்து தருணங்களிலும் கை கட்டி இருந்ததாக தெரியவில்லை.

Twitter link  

ABP நாடு தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் திருமாவளவன் கைக்கட்டி அமர்ந்து பேசவில்லை. கைகளைக் கட்டிக்கொண்டு திருமாவளவன் பேசியதாக வெளியான புகைப்படம் திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் தான் அனைத்து புகைப்படங்களையும் எடுத்தேன் – இரா.கிட்டு, மண்டல அமைப்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சந்திப்பின் வேறு புகைப்படங்களை பார்க்கையில் அந்த நாற்காலி உடைந்தது அல்ல என்பது தெளிவாகும். மேலும் வி.சி.க-வின் அமைப்பு செயலாளர் இரா.கிட்டு, “ராஜகண்ணப்பன் திருமாவளவனை சோஃபாவில்-தான் அமரச்சொன்னார். ஆனால், இடையில் ஒரு சிலை இருந்ததால், முகம் பார்த்து பேச சிரமமாக இருக்கும் என்பதால் திருமாவளவனே அருகே இருந்த நாற்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்து பேசினார்”, எனக் கூறியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

சந்திப்பின் வேறு புகைப்படங்கள் அந்த நாற்காலி உடைந்தது அல்ல என்பதை தெளிவுப்படுத்துகிறது. மேலும் ஒரு சிம்மாசனம் இருந்தும் புறக்கணிக்கப்பட்டதாக கூறுவதும் வதந்தி என்பது இரா.கிட்டுவின் தகவலில் இருந்து தெரிகிறது. திருமாவளவன் அமர்ந்த தோரணை இயல்பானது என்று வன்னி அரசு தெரிவித்திருக்கிறார். இது வெற்று வெறுப்பு மற்றும் சாதிய ரீதியான வெறுப்பை உமிழும் முயற்சியாகவே தெரிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader