“வரலாற்று பிழை” எனக் கட்டுரை வெளியிட்ட துக்ளக்| அரசியலுக்குள் சிக்கும் வள்ளுவர் !

” வள்ளுவர் ” எழுதி விட்டுச் சென்ற கருத்துக்கள் அனைவருக்குமான உலகப் பொதுமறையாக அமைந்து இருக்கிறது . ஆனால், அவற்றை ஏற்காமல் திருவள்ளுவரின் மதம், சாதிய அடையாளங்களை முன்னிறுத்தி எழும் சர்ச்சைகள், அரசியல் பேச்சுக்களுக்கு முடிவில்லை.
சமீபத்தில் திருவள்ளுவர் இந்து மத்தைச் சேர்ந்தவர் என்ற வாதங்கள் எழுந்து வருகிறது. திருவள்ளுவரின் புகைப்படத்திற்கு காவி உடை, திருநீர் மற்றும் பூணூல் அணிவித்து சித்தரித்து வருகிறார்கள். திருவள்ளுவரின் உருவம் என பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படத்தை திரித்து உருவாக்கி இருக்கிறார்கள். 19-ம் நூற்றாண்டில் அவரின் உண்மையான புகைப்படங்கள் என பூணூல் அணிவித்த புகைப்படம் மற்றும் நாணயம் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
19-ம் நூற்றாண்டில் திருவள்ளுவர் :
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எல்லீஸ் என்பவர் வெளியிட்ட தங்க நாணயத்தில் திருவள்ளுவரின் உருவம் மாறுபட்டு இருப்பதாக அப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மெட்ராஸின் வருவாய் அதிகாரியாக இருந்தவரும் , திராவிட மொழிக் குடும்பத்தை முதன் முதலில் இனம் கண்டவருமான எல்லீஸ் திருவள்ளுவருக்கு தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், திருவள்ளுவர் ஜைன மதத் துறவியாக அடையாளப்படுத்தி இருந்ததாக 2017-ல் நியூஸ் தமிழில் வெளியான திருவள்ளுவர் மதம் குறித்த விவாதக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அன்றைய காலத்தில் சமண மதம் அதிகம் பரவி இருந்த காரணத்தினால் வள்ளுவர் சமண மத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என அவ்வாறு அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, 1935-ல் வெளியான புத்தகம் ஒன்றில் திருவள்ளுவருக்கு திருநீர், பூணூல் அணிவித்து அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.
துக்ளக் கட்டுரை :
இப்படி ஒவ்வொருவரும் ஒரு அடையாளத்தை கொடுப்பதால் திருவள்ளுவருக்கு பொதுவான உருவத்தை வழங்க உருவாக்கப்பட்ட(தற்பொழுது பயன்படுத்தப்படும் உருவம்) ஓவியம் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டது.
” சர்மா என்ற ஓவியர் வரைந்த அந்தப் படத்தில் வள்ளுவருக்கு பூணூல் இருந்தது. கலைஞர் அந்த ஓவியரிடம் திருவள்ளுவர் மார்பில் குறுக்கே ஒரு துண்டை வரையும்படி கூறினார் ” என 22.08.2018 தேதி வெளியான துக்ளக் இதழில் பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களின் வாய்வழியாக கூறிய பதிவு வெளியாகி இருந்தது.
ஆனால், அந்த பதிவிற்கு எதிராக திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்த வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா மறுப்பு தெரிவித்த கட்டுரை துக்ளக் இதழில் ” வரலாறு பிழை ” என்ற தலைப்பிலேயே வெளியிட்டு இருந்தனர். இது தொடர்பாக திரு.ஸ்ரீராம் சர்மாவை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது இதை உறுதிப்படுத்தி உள்ளார்.
கிருத்தவ மதம் :
திருக்குறளில் இந்து மதக் கருத்துக்களை கூறியதாக என்றுரைத்து வள்ளுவரை இந்து மதம் சார்ந்தவராக சித்தரித்தது போல் , திருக்குறளின் அடிப்படையே கிறிஸ்தவம் தான் என மற்றொரு தரப்பினர் வெளியிட்ட புத்தகம் மற்றும் உரைகள் சமூக வலைதளங்களில் இப்பொழுதும் சர்ச்சையாக பரவி வருகிறது.
இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பாகவே நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அதனைப் பற்றி,
விரிவாக படிக்க : திருக்குறள் அடிப்படை கிறிஸ்தவமே என வெளியான புத்தகம் | திருவள்ளுவருக்கு மத சாயமா ?
இதைத் தவிர்த்து, திருவள்ளுவரின் சாதி என்ன என்பது குறித்து உருவாகிய பேச்சுகளின் போதும் நாம் மற்றொரு கட்டுரையையும் வெளியிட்டு இருந்தோம். அதனைப் பற்றி,
விரிவாக படிக்க : திருவள்ளுவரின் சாதி என்ன ?
உலக மக்களுக்கு பொதுவாக எடுத்துரைத்த நூலை மதம், சாதி எனக் குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப் பார்ப்பது அறிவார்ந்த செயல் அல்ல . ஆகையால், வள்ளுவருக்கு மத பட்டம் சூட்டுவதை விடுத்து அவர் சொல்லிச் சென்ற வாழ்வியலை உலகம் முழுவதிலும் பரப்பச் செய்வோம்.
Link :
https://web.archive.org/web/20180816000846/http://ns7.tv/ta
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.