Articles

புரளியால் உயிர் பலி, பரப்பியவர் அதிரடிக் கைது!

சமீபகாலமாக தமிழகத்தில் குழந்தை கடத்துபவர் என்று சந்தேகித்து அப்பாவி மக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகம் அரங்கேறி வருகின்றது. குழந்தைகளை கடத்தும் கும்பல் சுற்றி வருவதாகக் கூறி வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவியதன் விளைவால் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பதற்றங்கள் நிலவுகிறது.

Advertisement

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த இருவர் மலேசியாவில் இருந்து வந்த உறவினர் இருவருடன் குல தெய்வ கோவிலுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை போளூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் கோவிலுக்கு செல்வது குறித்து விசாரித்துள்ளனர். அந்நேரத்தில், அங்கிருந்த குழந்தைகளுக்கு காரில் இருந்தவர்கள் சாக்லேட்களை வழங்கியதைக் கண்டதால் மூதாட்டி ஒருவர் குழந்தை கடத்தல் கும்பல் வந்ததாக கிராம மக்களை அழைத்துள்ளார். இதனால், அச்சம் அடைந்தவர்கள் உடனடியாக காரில் அங்கிருந்து சென்றுள்ளனர். எனினும், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஊர் மக்கள் அவர்கள் சென்ற காரை வளைத்து பிடித்துள்ளனர்.

ஊர் மக்கள் தங்களை குழந்தை கடத்தல் கும்பல் என தவறாக நினைத்துள்ளதாக காரில் இருந்த வெங்கடேசன் என்பவர் விளக்கியுள்ளார். நான் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், மலேசியாவில் இருந்து வந்த உறவினர்களின் குல தெய்வ கோவிலுக்காக செல்வதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தன்னிடம் இருந்த அடையாள அட்டை மற்றும் உறவினர்கள் தங்களின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை காண்பித்தும் ஊர் மக்கள் நம்ப மறுத்துள்ளனர். இதையடுத்து, காரில் இருந்த 5 பேர் மீது ஊர் மக்கள் கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அதில், சென்னையைச் சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி அடி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மூதாட்டி இறந்ததும் ஊர் மக்கள் மக்கள் மற்ற நால்வர் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். அதில், உச்ச கட்டமாக ஒருவரை நிர்வணமாக்கி காலால் மிதித்துள்ளனர். செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை அளிக்கப்பட்ட பின் தங்களை பற்றிய முழு விவரத்தையும் போலீசாரிடமும், செய்தி நிறுவனங்களிடமும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த வீடியோ பதிவுகளை வைத்து போலீசார் 23 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

 

குல தெய்வ கோவிலுக்கு சென்றவர்களை குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து கிராம மக்கள் காட்டிய மூர்க்கத்தனமாக செயலில் ஒரு மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், வாட்ஸ் ஆப்பில் குழந்தைகளை கடத்த வடநாட்டு கும்பல் ஒன்று சுற்றி வருகிறது என வதந்தியை பரப்பிய நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். திருவண்ணாமலை செய்யாறு அருகே புரிசைக் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் பரப்பிய வாட்ஸ் ஆப் வீடியோவில், செய்யாறு பகுதியில் 20 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளை கடத்த வடநாட்டில் இருந்து 100 பேர் வந்துள்ளனர்.பல இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று இடம்பெற்றிருக்கும். இதை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் திருவண்ணாமலை போலீசார் கண்டறிந்து வீரராகவனை கைது செய்துள்ளனர்.

வதந்தியால் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தகுந்த நடவடிக்கையும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், யார் மீதும் சந்தேகம் இருந்தால் தாக்குதல் நடத்தக் கூடாது என திருவண்ணாமலை எஸ்.பி பொன்னி தெரிவித்துள்ளார். குழந்தை கடத்தல் குறித்த வதந்திகளுக்கு எதிராக  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாட்ஸ் ஆப்பில் குழந்தை கடத்தல் குறித்து வதந்திகளை பரப்புவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் தேவைபட்டால்குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்புள்ளது என வேலூர் எஸ்.பி பகலவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் குறித்த வதந்தி செய்திகள் அதிகம் வைரலாகி பல மாவட்டங்களில் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை சம்பவம் அளித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை கடத்த வந்தவர் என நினைத்து மன நோயாளி ஒருவரை அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சமீப காலமாக வாட்ஸ் ஆப் வதந்திகளால் வட மாநில அப்பாவி இளைஞர்களும் அடித்து கொல்லப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வதந்தியின் விளைவால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே. முழுமையான தகவல்கள் ஏதும் அறியாமல், கிடைத்த அரைகுறை செய்திகளை வைத்து பதிவிடப்படும் கருத்துக்கள் மற்றும் வீடியோ பதிவுகளை மக்களும் கண்மூடித்தனமாக நம்பி விடுகின்றனர். சமூக வலைத்தளத்தில் வதந்தியை பரப்புவோர் மீது குண்டர் சட்டமும், ஓராண்டு தண்டனையும் வழங்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

வதந்தியை பரப்புவோர் ஒருபுறம் இருக்க, எது உண்மையான செய்தி என அறியாத மக்கள் உடனடியாக ஷேர் செய்வது தவறான செயலாகும். குழந்தையை கடத்தும் கும்பல் என நினைத்து பலர் ஒன்று சேர்ந்து ஒருவரை கண்மூடித்தனமாக தாக்குவது எவ்விதத்தில் நியாயம். ஒருவேளை சந்தேகம் இருந்தால் சமபந்தப்பட்டவரை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதைவிடுத்து உயிர் போகும் அளவிற்கு தாக்குவது கண்டிக்கத்தக்க செயலாகும். குழந்தை உயிர் பற்றி நினைப்பவர்கள் வதந்தியால் சிக்கி கொள்ளும் அப்பாவி மக்களின் உயிர் மீது கருணை காட்டாமல் மனிதநேய மற்றவர்களாக இருப்பதை இச்சம்பவங்கள் எடுத்துரைக்கிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு செய்தியையும் நன்கு அறிந்த பின்னர் பகிரவும். இல்லையெனில், வதந்திகள் எத்தனை எத்தனை அப்பாவி மக்களின் உயிரை பறிப்பதற்கு நீங்களும் ஒரு காரணமாகலாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button