ஸ்டெர்லைட்க்கு சீல்.! முழு வெற்றியா ?

ஸ்டெர்லைட் ஆலை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை வெளியிடப்பட்ட உடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையிலான அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர். ஆனால், இங்கு எல்லாருடைய கேள்வியுமாக இருப்பது இது நிரந்தர தடையா.!
தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. Article 48-A படி ஒரு மாநிலம் தனது சுற்றுச்சூழலை பாதுகாக்க, முன்னேற்ற, வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கலாம். Article 18(1)(B)-ன் படி மக்களின் நலன் கருதி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கையை ஏற்று ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு காலம் தாழ்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் அரசாணை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்து இருப்பது நல்ல நடவடிக்கை. ஆனால், ஏற்கனவே வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. இந்த அரசாணையை எதிர்த்தும் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதிலெல்லாம் என்ன மாதிரியான தீர்ப்பு வரும் என்கிற கேள்வியும் இருக்கிறது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருப்பதால் அதை ஏற்று நிரந்தரமாக மூடும் முடிவை நீதிமன்றமும் தீர்ப்பாக வழங்க வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச் சூடும், மக்கள் கொந்தளிப்பும் நிச்சயம் நீதிமன்றத்தால் கவனிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எனினும், தமிழக அரசு வைத்த குற்றச்சாட்டே தவறு நாங்கள் எந்தவித மாசையும் ஏற்படுத்தவில்லை என்று ஸ்டெர்லைட் நிறுவனம் வாதாடக் கூடும்.அதில் ஆதாரப் பூர்வமாக வழக்கை எடுத்துச் செல்ல வேண்டிய கடமை தமிழக அரசிடம் உண்டு . அதனால் தீர்ப்பை பொறுத்தே அடுத்த நகர்வு இருக்கும். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கருத்தும் இதில் முக்கியமானது. இந்நிலையில், பல்வேறு வழக்குகளுக்கும் ஆளாகியுள்ள மக்கள், தங்களது மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வருகிறார்கள் , சுடப்பட்ட மற்றும் தாக்கபட்டவர்களுக்கான நீதியையும் பெற்று தர வேண்டும்.
உயிர் கொடுத்து போராடிய மக்களுக்கு கிடைத்து இருக்கிற ஆறுதல் இந்த வெற்றி நிரந்தரமாக மூடும் தமிழக அரசின் அரசாணை அவர்களுக்கு தரும் அஞ்சலி. இளைப்பாரட்டும் அவர்கள் ஆன்மா.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.