மனைவியை மானபங்கம் செய்ததாக பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சதித்திட்டம் அம்பலம் !

திருவண்ணாமலை படவேடு கிராமத்தில் இராணுவ வீரரின் மனைவியைச் சிலர் தாக்கியதாகச் சொல்லப்பட்ட சம்பவத்தில் இராணுவ வீரர் பிரபாகரன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், கத்தியால் குத்தியதைச் சொல்ல வேண்டாம், நான் பிறரிடம் சொன்னது போலவே ஜீவாவும் சொல்ல வேண்டும் என பல்வேறு விஷயங்களை அவர் பேசியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு எனும் கிராமத்தில் கடை வைத்துள்ள தனது மனைவி கீர்த்தியை 120 பேர் தாக்கியதாகவும், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இராணுவ வீரர் பிரபாகரன் வீடியோ ஒன்றினை வெளியிட்டுருந்தார்.
ஆனால், அவரது மனைவி கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கவோ, மானபங்கம் செய்யவோ இல்லை. ஜீவா (கீர்த்தியின் அண்ணன்) என்பவர் தான் கடை உரிமையாளர் ராமுவின் தலையில் கத்தியால் தாக்கியுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் திருவண்ணாமலை காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாகப் பிரபாகரன், வினோத் என்பவரிடம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் பேசியது :
இராணுவ வீரர் : “உடனடியாக உதயா மற்றும் ஜீவாவிடம் பேச வேண்டும் என்றால் எப்படிப் பேசுவது?
வினோத் : போன் செய்தால் பிசி பிசி என வருகிறது. என்னதான் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை.
இரா.வீ : இப்ப வரைக்கும் இவ்வளவு சப்போர்ட் இருக்கு எனச் சொன்னானே. என்ன செய்தான் அவன். ஒரு அடியாளைக் கூப்பிட்டானா?
வினோத் : கூப்பிடுகிறேன் எனச் சொல்கிறான் ஆனால், கூப்பிடவில்லை.
இரா.வீ : நான் எந்த அளவு இறங்கி வேலை செய்திருக்கிறேன் என்பது இன்றைக்கு அல்லது நாளைக்குத் தெரிய வரும் பார். ஜீவா எங்கே இருக்கிறான். அவனிடம் பேச முடியுமா?
வினோத் : நான் வெளியே வந்துள்ளேன். அவர்களுக்குக் கால் செய்தால் பிசி பிசி என வருகிறது. யாரிடம் பேசுகிறார்கள் எனத் தெரியவில்லை.
இரா.வீ : சும்மா பேசிக்கொண்டு இருப்பான். ஒன்றும் புடிங்கி இருக்க மாட்டான். நான் சொல்வதை கேளு. எல்லாமே முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் ஸ்ட்ரைக் ஆகப் போகிறது. இன்று மதியத்திற்கு மேல் தொடங்கிவிடும். உண்மையில் இதுதான் நடந்தது என ஒன்றுக்கு இரண்டாகச் சொல்லுங்கள். இதனை சுமார் 6 கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர். யூடியூப், டிவிட்டர், பேஸ்புக், அரசியல்வாதிகள், நாம் தமிழர் கட்சி, பாஜக எனப் பலருக்கு அனுப்பியுள்ளேன்.
முக்கியமானது, ஜீவா, மற்றும் உதயாவை அடிப்பதினால் யாருக்கும் எந்த பிரோஜனமும் இல்லை. இவர்கள் எல்லாம் இருந்தார்கள் அடித்தார்கள் என வெளியே காட்டலாம். மற்றபடி எனது மனைவியை அடித்ததினால் மட்டும்தான் சிவியராக போய்க்கொண்டு இருக்கிறது.
வினோத் : நைட்டே வேலூர் ஆட்களை வர வைக்கிறேன் என சொன்ன மாதிரி.
இரா.வீ : அங்கே நமது ஆட்கள் 10லிருந்து 20 பேர் ஸ்ட்ரைக் செய்யும் போது வேண்டும். அதற்கான ஆட்கள் ரெடியாக இருக்க வேண்டும் நம்ப பசங்க. பேசும்போது அறை நிர்வாணப்படுத்தி அடிச்சாங்கனு சொன்ன பாத்தீங்களா…
வினோத் : அதுக்கு ஜீவாவும் உதயாவும் இங்கு இருக்க வேண்டும் அல்லவா?
இரா.வீ : கண்டிப்பா வந்துடுவாங்க. வரனும். அதற்கான ஏற்பாடு பண்ணு. கொஞ்சம் கிட்டவே தலைமறைவாக இருப்பது போன்று பார்.
என் தங்கச்சியை அடிக்கும் போது சும்மா இருக்க சொல்லறியா? ஆத்திரத்தில் நான் பண்ணேன் எனச் சொல்ல சொல்லு. கத்தியில் எல்லாம் குத்தவில்லை. யாருங்க குத்தியது. கூட்டிட்டு வந்து காண்பி என சொல்லு. சரியா? குத்தியதாக எதுவும் சொல்லாத. குத்தியதாக எதுவும் சொல்லத் தேவையில்லை.
என் தங்கச்சியை அடித்தார்கள் நான் அடிக்க முடியாதா? என்பதுபோல்தான் பேச வேண்டும். புரிகிறதா? இதில் தெளிவாக இருங்கள். இது பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. இனி கடை கொடுக்கிறேன் என்றாலும் நமக்கு வேண்டாம். மானம்தான் முக்கியம். செல்வராஜுக்குக் கலி தின்பதற்கான நேரம் வந்துவிட்டது.
இது பயங்கர இஷுவாக போய்க்கொண்டு இருக்கிறது. உனக்கு ஒன்னும் தெரியல போல இருக்கே? படவேடு, நடுமோடு எல்லாம் பயந்துபோய் இருக்கிறது. என்னிடம் எந்தெந்த அரசியல்வாதியெல்லாம் பேசி இருக்கிறார்கள் தெரியுமா? மினிஸ்டரில் இருந்து, சி.எம். செல்லிலிருந்து நிறையபேரு போன் பண்ணி பேசனாங்க.
இன்னும் முக்கியமான மெயின் பார்டி பேசி இருக்கிறார்கள். அதனைச் சொல்லக் கூடாது. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் பண்ணும்போது இன்னிக்கு நைட்குள்ள மொத்த பேரையும் தூக்குறோம். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்காதே. உஷாராகி விடுவார்கள். நான் உன்னிடமே சொல்லி இருக்கக் கூடாது.
அழகா கொத்தா துக்கி கொண்டு பொய் கும்மு கும்முன்னு கும்மட்டும். அப்போ தெரியும் அவனுங்களுக்கு. முதலில் அவங்கள (ஜீவா) என்னிடம் பேச சொல்லு. அப்போதுதான் நான் எல்லோரிடமும் என்ன சொல்லி இருக்கிறேன் என்பது அவனுக்குத் தெரியும். அப்போதுதான் ஒரே மாதிரி சொல்ல முடியும்” என பேசியுள்ளார்.
இராணுவ வீரர் என்ற மரியாதையை பிரபாகரன் என்பவர் தனது சொந்த தேவைக்காக, அதுவும் தனது மச்சான் (ஜீவா) ஒருவரை கத்தியால் குத்தியதை மறைப்பதற்காக திட்டமிட்டு பயன்படுத்தியுள்ளார். மேலும் இதனை சில அரசியல் கட்சியினர் தங்களது அரசியல் லாபத்திற்காக தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : தமிழ்நாட்டில் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லை என உருவாக்கப்படும் பொய் பிரச்சாரம்.. முழு தகவல் !
இந்த சம்பவம் குறித்த விரிவான கட்டுரையை இதற்கு முன்னர் யூடர்னில் வெளியிட்டிருந்தோம்.
Link :