தமிழ்நாட்டில் இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பில்லை என உருவாக்கப்படும் பொய் பிரச்சாரம்.. முழு தகவல் !

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு எனும் கிராமத்தில் கடை வைத்துள்ள தனது மனைவி கீர்த்தியை 120 பேர் தாக்கியதாகவும், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இராணுவ வீரர் பிரபாகரன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு வீடியோ மூலம் புகார் ஒன்றினை அளித்திருந்தார். அந்த வீடியோவினை இந்திய முன்னாள் இராணுவ வீரர் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் “எனது பெயர் பிரபாகரன். நான் காஷ்மீரில் பணி செய்து வருகிறேன். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு கிராமத்தைச் சேர்ந்தவன். அக்கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு அருகில் எனது மனைவி கடை வைத்துள்ளார். 2023, ஜூன் 10ம் தேதி 120 பேர் கடையை அடித்து உடைத்து, எனது மனைவியையும் அடித்துள்ளனர். காதிலும் மூக்கிலும் இரத்தத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. 

Archive link

எனது அதிகாரி திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயனிடம் பேசியதில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போகும் இடமெல்லாம் அடிக்கிறார்களாம். டி.ஜி.பி. ஐயா எப்படியாவது காப்பாற்றுங்கள். அரை நிர்வாணமாக்கி எனது மனைவியை அடித்துள்ளனர். எங்காவது இப்படி நடக்குமா?  காப்பாற்றுங்கள்” என மண்டியிட்டுக் கதறியுள்ளார்.

காவல் துறை அறிக்கை : 

இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் முதல்கட்ட விசாரணையில், இராணுவ வீரரின் புகார் மிகைப்படுத்தப்பட்டது என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் குன்னத்துர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டடம் கட்டி, படவேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வமூர்த்தி என்பவரிடம் ரூ.9.5 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு மாத வாடகை ரூ.3000க்கு கடையினை அளித்துள்ளார். கடந்த ஆண்டு குமார் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் ராமு கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் செல்வமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதன்படி குமார் செல்வமூர்த்தியிடம் பெற்ற ரூ.9.5 லட்சத்தை ராமு திருப்பி அளிப்பதாகவும், அதைப் பெற்றுக்கொண்டு 10.02.2023ம் தேதிக்குள் கடையை காலி செய்வதென்றும் இருவருக்குமிடையே எழுத்துப்பூர்வமாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி உடன்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், செல்வமூர்த்தி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமல், கடையையும் காலி செய்யாமல் இருந்த நிலையில், கடந்த (ஜூன்) 10ம் தேதி ராமும் அவரது குடும்பத்தினரும் செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோரிடம் பணத்தைக் கொடுத்து கடையை காலி செய்யக் கூறியுள்ளனர். அப்போது ஜீவா என்பவர் ராமுவின் தலையில் கத்தியால் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தின் போது இராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியும், செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தியும், அவரது தாயாரும் (செல்வமூர்த்தியின் மனைவி) அங்கு இருந்துள்ளார். 

ராமுவிற்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்த அருகிலிருந்த பொது மக்கள், ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்யாமல், கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள் என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள்.

ஆனால், கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கவோ, மானபங்கம் செய்யவோ இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இராணுவ வீரர் கூறியது மிகைப்படுத்திய தகவல். இருப்பினும், இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் உண்மைத் தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊர் மக்கள் விளக்கம் : 

இது தொடர்பாக படவேடு கிராம மக்கள் பேசிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி, கடையினை காலி செய்யச் சொன்ன ராமுவை இராணுவ வீரரின் மனைவி தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், ஜீவா (இராணுவ வீரரின் மச்சான்) என்பவர் ராமுவை கத்தியால் குத்தியதைப் பார்த்ததாகவும் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக இராணுவ வீரர் பிரபாகரனுக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படியே அவர் வீடியோவில் பேசியுள்ளார். ஆனால், அவர் சொன்ன தகவல்கள் எதுவும் உண்மை அல்ல எனக் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளும், இராணுவ வீரரின் மைத்துனர் ஜீவா கடை உரிமையாளரை(ராமு) தாக்கி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள புகைப்படமும் நமக்கு கிடைத்தன.

தமிழ்நாட்டில் இராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா ? 

இந்த சம்பவத்தில் தீர விசாரிக்காமல், காவல்துறை பூசி மெழுகப் பார்க்கிறது என பாஜக மாநிலச் செயலாளர் அண்ணாமலை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும், “திறனற்ற திமுக அரசு, பிரிவினைவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் மட்டுமேயான அரசாக இருக்கிறது, சாதாரணப் பொதுமக்களுக்கான அரசாக இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 Archive link 

இதற்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி இரண்டு தரப்பிற்கு இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் பிரபு என்ற இராணுவ வீரர் உயிரிழந்தார். அச்சம்பவத்தின் போதும் தமிழ்நாட்டில் இராணுவ வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பாஜகவினர் கூறிவந்தனர்.

ஆனால், அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே உறவினர்கள் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இதனை சில அரசியல் கட்சிகள் திட்டமிட்ட கொலை என சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியிருந்தார்.

இதேபோன்று கடந்த மார்ச் மாதம் வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களின் போதும் நிகழ்வின் முழு பின்னணியை அறியாமல், தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலம் என்பது போன்ற தகவல்களை வலதுசாரிகளும் சில ஊடகங்களும் வெளியிட்டன. தற்போதும் அதே பாணியில் இராணுவ வீரரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என்ற தொனியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

Archive link  

பொதுவாக வலதுசாரிகள் மற்றும் பாஜகவினர் தாங்கள் ஆட்சி செய்யாத பகுதிகளில் இத்தகைய யுக்தியினை கையாண்டு வருகின்றனர். அதாவது பாஜக ஆட்சி செய்யாத மாநிலத்தில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை, ஆபத்து எனப் பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியே தமிழ்நாட்டில் இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதாகும்.

பிரபாகரன் மற்றும் பிரபு இவர்கள் இருவரது விவகாரத்திலும் அவர்கள் இராணுவத்தினர் என்பதற்காகவோ, இராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவோ பிரச்சனைகள் எழவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவே சண்டைகள் நிகழ்ந்துள்ளது என்பதைக் காவல்துறை மற்றும் பொது மக்கள் அளித்த விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இதனைச் சிலர் அரசியல் ஆதாயத்திற்காகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader