அண்ணாமலை எனும் வெற்றுக் கூச்சல்! பாஜகவை முடித்த கதை!

அண்ணாமலை, இங்கு தினமும் ஊடகங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து பேசி தன்னை தொடர்ந்து லைம்லைட்டில் தக்கவைத்துக்கொண்டவர்.

கோயம்பத்தூர் மக்களவைத் தொகுதி Vs பாஜக :

தற்போது நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் தொகுதியில் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ப.ராஜ்குமாா் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதே போன்று அங்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும், நாம் தமிழா் வேட்பாளரான கலாமணி ஜெகந்நாதன் 82,657 வாக்குகளும் பெற்றனர்.

மேலும் ஆரம்பம் முதலே அண்ணாமலை தன்னுடைய “என் மண் என் மக்கள்” யாத்திரை மூலமும்,  ஊடக சந்திப்புகளிலும், 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும், குறிப்பாக தென்தமிழகத்தில் பாஜக தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் என்று கூறியிருந்தார். இதன் மூலம் பலரும் பாஜக மீது ஒரு பிம்பத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால் அண்ணாமலையால் தான் போட்டியிட்ட கோயம்பத்தூர் தொகுதியில் கூட தன்னுடைய பலத்தை நிரூபிக்க முடியவில்லை.

குறிப்பாக, தமிழ்நாட்டில் அண்ணாமலையுடன், முன்னாள் ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்தத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகிய பெரும் தலைகள் களத்தில் இறக்கிய போதும், அத்தனை பேரும் படுதோல்வியையே சந்தித்துள்ளனர்.

கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூா், பல்லடம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை மக்களவைத் தொகுதி ஆரம்பத்தில் இருந்தே பாஜவிற்கு மிகவும் நெருக்கமான தொகுதியாகவே இருந்துள்ளது. இறுதியாக பாஜக சார்பில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 1998 இல் கோயம்பத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்ததால் மீண்டும் 1999 இல் பாஜக சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

அதற்குப்பின்பு தொடர்ந்து தோல்வி முகமே. அண்ணாமலை வரை தோல்வியை தழுவியுள்ளனர். ஆனால் இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்களில் அண்ணாமலை தான் கோயம்புத்தூரில் அதிக வாக்குகளை பெற்றவர் என்ற பிம்பம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. எனவே அது குறித்து இங்கு தெளிவாகக் காண்போம்.

தமிழ்நாட்டில் அண்ணாமலை குறித்து உருவானது போலி பிம்பமா?

2014 மக்களவை பொதுத்தேர்தல்:

2014 மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரையில், 2024 மக்களவைத் தேர்தலைப் போன்றே பாரதிஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. மாறாக தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்திருந்தது.  அதன்படி 2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அதிமுக 37 இடங்களிலும், பாஜக தலைமையிலான கூட்டணி 2 (பாஜக 1, பாமக 1) இடங்களிலும் வெற்றி பெற்றன.  குறிப்பாக பாஜக சார்பில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

மேலும் இத்தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 5.56 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 மக்களவை பொதுத்தேர்தல்:

எனவே கோயம்பத்தூர் தொகுதியில் 2014, 2019, 2024 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் பாஜக பெற்றுள்ள வாக்குகளை ஆய்வு செய்து பார்க்கையில், 2014 தேர்தலில் 11,76,627 வாக்காளர்களை கொண்ட கோயம்புத்தூரில், சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளை, அதாவது 33 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதை அறிய முடிகிறது. இதே போன்று 2019 தேர்தலில் மொத்த வாக்களர்கள் எண்ணிக்கை அங்கு 12,50,863 ஆக இருந்துள்ளது இதில் 31% (3,92,007) வாக்குகளையே சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றிருந்தார்.

இதே போன்று தற்போது நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில், வாக்களர்களின் எண்ணிக்கை கோயம்புத்தூரில் 13,72,833 ஆக இருக்கிறது. இதில் அண்ணாமலை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 4,50,132, அதாவது 33 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் சி.பி.ராதாகிருஷ்ணன் இதுவரை அங்கு அதிகபட்சமாக பெற்றிருந்த அதே 33 சதவீத வாக்குகளையே அண்ணாமலையும் பெற்றுள்ளார் என்பதை தெளிவாக காண முடிகிறது. ஆனால் கோயம்புத்தூரில் பாஜகவிற்கு ஓட்டு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று பலரும் சமூக ஊடகங்களில் தவறான தரவுகளை பகிர்ந்து வருகின்றனர். அது வெறும் மாயையே. மேலும் இதற்கு தான் அண்ணாமலை என்ற பிம்பம் இத்தனை கூச்சலிட்டதா என்ற கேள்வியும் எல்லோர் மத்தியிலும் எழுகிறது.

அதிமுக கூட்டணியை உடைத்து தவறு செய்ததா பாஜக?

தமிழ்நாட்டில் ஆரம்பம் முதலே பாஜகவும், அதிமுகவும் ஒரே கூட்டணியில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது போன்ற பிம்பத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தேர்தலுக்கு முன்பு இரண்டு கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன.

அதிமுகவும், பாஜகவும் இணைந்து இத்தேர்தலில் செயல்பட்டிருந்தால் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் ஓரளவு மாறியிருப்பதற்கான வாய்ப்புகளை கீழே உள்ள தரவுகளின் அடிப்படையில் அறிய முடிகிறது.

குறிப்பாக கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், விருதுநகர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஆரணி, தருமபுரி, தென்காசி, விழுப்புரம், சிதம்பரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில், திமுக பெற்றுள்ள வாக்குகளைவிட, பாஜக-அதிமுக என இரண்டு கட்சிகளும் சேர்த்து பெற்றுள்ள வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.

மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக சார்பில் கோயம்புத்தூரில் போட்டியிட்ட அண்ணாமலை, இத்தேர்தலில் 4,50,132 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தைப்பிடித்துள்ளார். கூட்டணி உடைக்க காரணமாக இருந்தது அண்ணாமலை. அவர் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் ஒருவேளை பாஜகவிற்கு சாதமாக அமைந்திருக்கலாம்..!

இன்று கூட்டணி ஆட்சி தான் பாஜக அமைத்திருக்கிறது. இப்படி அமைத்திருக்கும் சூழலில் வேறு வேறு கட்சியை சார்ந்திருக்கும் நிலைமை உள்ளது. மேலும் ஒரு கூட்டணி அதிமுக போன்ற கட்சியோடு இருந்திருந்தால் அது பாஜகவிற்கு கூடுதல் பலமாகவே அமைந்திருக்கும்.

சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் நிதிஷ் குமார், இருவரும் நம்பக்கூடியவர்கள் அல்ல. இதை பாஜக தலைமை உணர்ந்திருக்கும். அவர்கள் எப்போதுவேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒரு மோசமான சூழலில் தான் பாஜக இன்று இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் அதிமுக போன்ற கட்சியும் தமிழகத்தில் ஒன்றிரண்டு இடங்களில் பாஜக-வும் நின்றிருந்தால் அது நிச்சயம் பாஜகவிற்கு பலமாக அமைந்திருக்கும். அப்படியில்லாமல், இன்று தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது, சுயேட்சையை நம்ப வேண்டும், இந்த கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டும், என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு பாஜகவை தள்ளியது அண்ணாமலை ஈகோவும் ஒரு பெரிய காரணம் என்றால் அதில் மாற்றுக்கருத்தில்லை.

அப்படி ஒரு பெரிய ஈகோவை தூக்கி சுமந்தவர் ஓரிரு தொகுதிகளிலாவது ஜெயித்துக்காட்டியிருக்க வேண்டும். பெரும் பணக்காரர்களாக A.C.சண்முகம், பாரிவேந்தர் போன்றோர்கள் இருந்தும், பல்வேறு கூட்டணி கட்சிகள் தமிழ் நாட்டில் இருந்தும் ஒரு மெகா கூட்டணி அமைத்தும் அதிமுகவின் வாய்ப்பை இவ்வளவு தூரம் பறித்தும் கூட பாஜகவால் ஒன்றும் பெரிதாக செய்துமுடித்துவிட முடியவில்லை என்பது தான் எதார்த்தம். ஒரு மெகா கூட்டணியும் பணபலமும் முன்னாள் அமைச்சர்கள் களம் கண்டும் கூட மொத்தமாக தோல்வி அடைந்திருக்கிறார் அண்ணாமலை. இவ்வளவு பெரிய பிம்ப கட்டமைப்பாக அவர் முன்னிறுத்தப்பட்டதில் அவர் கொண்டிருப்பது ஒரு மெகா தோல்வி. இதை பாஜக தலைமை உணராமலா இருக்கும்? பாஜகவுடைய இன்றைய சிக்கலுக்கு அண்ணாமலை ஒரு பெரிய காரணம். அண்ணாமலை ஒரு same-side goal அடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

 

ஆதாரங்கள்:

https://results.eci.gov.in/PcResultGenJune2024/partywiseresult-S22.htm

2019_kovai_election_report_PC20

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader