“தமிழ்நாடு வங்கி” தொடங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதா ?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கை 2021-ஐ நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சமாக இருப்பது, தமிழ்நாட்டிற்கு என்று ஓர் வங்கி தொடங்குவதே என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Twitter link | Archive link 

” தமிழ்நாடு அரசு வங்கி ” மூலம் பெரு முதலாளிகளுக்கு கடன்கள் கொடுக்காமல், தமிழகத்தில் உள்ள மக்களின் பணம் தமிழகத்திற்கே பயன்படுத்தும் என நீண்ட பதிவுகள் வெளியாகி வருவதை பார்க்க முடிந்தது. மற்ற வங்கிகள் போன்று தமிழ்நாடு அரசு வங்கி வரப் போவதாக பதிவிட்டு வருகிறார்கள்.

உண்மை என்ன ?

தமிழ்நாடு அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களில் 40வது பக்கத்தில், ” ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் அடுத்த கட்டமாக, கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு முன் தணிக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, அவை அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணம் செலுத்தும் வங்கியாக(payment bank) மாற்றப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் பேசுகையில், ” தமிழ்நாடு வங்கி என்று இல்லை. இது ஒரு நீண்ட தொலைநோக்கு திட்டம். நாம் பல்வேறு கருவூலங்கள் வைத்துள்ளோம். சார் கருவூலம் வைத்துள்ளோம்.  ஒவ்வொரு தாலுக்கா அளவிலும் சார் கருவூலம் வைக்க வேண்டும் என்பது நம்முடைய நோக்கம். ஒரு வங்கி மூலமாகவோ அல்லது அமைப்பு மூலமாகவோ நிதிகளை வைத்து இருந்தால், நம்முடைய நிதி அரசிடம் இருந்து வங்கியில் போய் நிற்கும். அந்த நிதி வங்கியில் போய் நிற்கும் போது மாநிலத்திற்கு பயன்படாமல் கூட இருக்கலாம்.

நாம் வட்டிக் கொடுத்து கடன் வாங்கி அந்த பணம் வேறு ஏதோ வங்கியில் சும்மா இருப்பது நல்லதாக இல்லை. எந்த அளவிற்கு அந்த நிதி அரசின் கணக்கில் இருந்து வெளியே போகாமல் அரசு கணக்கிற்குள் இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு என்னென்ன வழிகள் எனப் பார்க்கும் போது, ரிசர்வ் வங்கி ஒரு புது முறையை கொண்டு வந்துள்ளது. அந்த முறையில், ஒரு எளிய பேமென்ட்ஸ் பேங்க் முறையை கொண்டு வந்துள்ளனர். ஆகவே, இந்த கருவூலங்கள், சார் கருவூலங்கள் அமைப்பை வங்கியாக மாற்ற முடியுமா என்கிற எண்ணம் தான் ” என பதில் அளித்து இருந்தார்.

ஆக, தமிழ்நாடு அரசின் கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணம் செலுத்தும் வங்கியாக(payment bank) ஆக மாற்றப்படும் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. Paytm payments bank போன்ற பேமென்ட்ஸ் பேங்க் தொடங்கும் திட்டத்தில் அரசு உள்ளது என அறிய முடிகிறது.

Links :

Final BS tamil-highlights (1)

Google pay போன்று விரைவில் வருகிறது தமிழ்நாடு வங்கி – நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்

Please complete the required fields.




Back to top button