பெண்கள் படிக்க உதவித்தொகை எனும் புரட்சி, தாலிக்கு தங்கம் நிறுத்தம் ?

ன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் ஆனது ” மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் ” என மாற்றியமைக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் படிப்பு முடியும் வரை மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், பட்ஜெட் அறிக்கையில் ஏழை பெண்களின் திருமண நிதியுதவியாக அதிகபட்சமாக ரூ50,000 மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் திட்டமும் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” இங்கு 5 வகையான திருமண உதவித் திட்டம் இருக்கிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டம் தவிர, கலப்பு திருமணம், விதவை மறுமணம் உ;உள்ளிட்ட 4 திருமண நிதியுதவி திட்டங்கள் உள்ளன. அந்த 4 திருமண நிதியுதவி திட்டங்களும் தொடர்ந்து எந்தவித மாற்றமும் இன்றி செயல்படுத்தப்படும்.

தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமே மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. கல்வி தான் மிக முக்கியம். முன்பு இருந்ததில் ஒருமுறை மட்டுமே வழங்குகிறோம், அதில் பயனாளிகளை சரியாக தேர்வு செய்ய முடியவில்லை. இது நேரடியாக அரசுப் பள்ளி மாணவிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தி விடலாம். அந்த திட்டம் தான் இப்படி மறுசீரமைக்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளியில் இருந்து 44% பேர் மட்டுமே மேற்படிப்பிற்கு செல்கின்றனர். மீதமுள்ள 56% பேர் இடைநிற்றல். பெரும்பாலும் அவர்கள் ஏழைக் குடும்பம். ஆகவே, அதற்காக தான் இந்த திட்டம். முன்பு ஆண்டிற்கு 1 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது, ஆனால் இதில் 6 லட்சம் மாணவிகளுக்கு பயன் கிடைக்கும், 6 மடங்கு அதிகமாகிறது. மீதமுள்ள 4 திட்டங்களும் தொடரும் ” என பதில் அளித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்(விதவையர் மகள் திருமணம்), டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் மற்றும் அன்னை தெரசா அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்(ஆதரவற்றோர்) என பெண்களுக்கு 5 திருமண நிதியுதவி திட்டங்கள் உள்ளன. இந்த 5 திட்டங்களுக்கும் தலா ரூ.25,000 அல்லது ரூ50,000 மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

இந்த 5 திருமண நிதியுதவி திட்டங்களில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. எனினும், மற்ற 4 திட்டங்களை ஒப்பிடுகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் பொதுவாக அனைத்து தரப்பு ஏழைக் குடும்பத்தினராலும் விண்ணப்பிக்கப்படுகிறது.

இனி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் சார்பில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் நிறுத்தப்பட்டு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் மேற்படிப்பிற்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளை கொண்ட பட்டப் படிப்புகளுக்கு ரூ.36,000 ரூபாயும், நான்கு ஆண்டு படிப்புகளுக்கு ரூ. 48,000 பெறுவார்கள் என நிதித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார்.

Please complete the required fields.
Back to top button