தேர்தல் களத்தில் அதிகரிக்கும் ஃபோட்டோஷாப் போலி செய்திகள்.. அவற்றின் தாக்கம் என்ன ?

தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்துக் கொண்டிருக்கையில் அரசியல் கட்சிகளுக்கு எதிராக போலிச் செய்திகளும், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலி நியூஸ் கார்டு செய்திகளும் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆகவே, தற்போது பரப்பப்பட்டு வரும் எண்ணற்ற போலி நியூஸ் கார்டுகள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து விரிவாக பார்ப்போம்.
1.திமுக- விசிக கூட்டம் :
” விழுப்புரம் மாவட்ட திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். எங்கள் கட்சி கொடியுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என்ற காரணத்தினால் ஊருக்கு வெளியே தடுத்து நிறுத்துகின்றனர் விசிக வன்னியரசு வேதனை ” என தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை ட்விட்டர் உள்ளிட்டவையில் பரப்பி வருகிறார்கள்.
#ALERT : FAKE NEWS pic.twitter.com/960hA1C47g
— Thanthi TV (@ThanthiTV) March 22, 2021
ஆனால், தந்தி டிவி செய்தியில் இப்படியொரு நியூஸ் கார்டு வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் வைரலானதால் அந்த செய்தி நிறுவனமே இதை போலியான செய்தி எனப் பதிவிட்டு உள்ளது.
2. வன்னியர் இடஒதுக்கீடு :
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் எ.வ.வேலு பேசியதாக இரு போலியான நியூஸ் கார்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டை செயல்படுத்தும் நிலைப்பாட்டிலேயே திமுகவும் இருக்கிறது. வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு வெறும் அறிவிப்பு மட்டுமே, வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும் என மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பிரச்சாரத்தில் தெரிவித்து இருக்கிறார்.
3. உளவுத்துறை தகவல்
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையுமென தமிழக தேர்தல் உளவுத்துரையின் ரகசிய ஆய்வுத் தகவல் என நியூஸ் 7 தமிழ் செய்தியின் பெயரில் போலியான எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டை வைரலாக்கி வருகிறார்கள். இது போலியானது என நியூஸ் 7 தமிழ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
4. ஹெச்.ராஜா :
பெட்ரோல், டீசல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என பாஜக தலைவர் ஹெச்.ராஜா கூறியது போல் போலியான நியூஸ் கார்டை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசை ஆட்சியை விட தற்போது பெட்ரோல் விலை குறைவு எனக் கூறியதை மாற்றி பரப்புகின்றனர்.
5. எடப்பாடி பழனிச்சாமி :
கொரோனா காரணமாக 11 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், 12 வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவித்ததாக எடிட் செய்த பழைய நியூஸ் கார்டை பரப்பி இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : தேர்தல் களம்: அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதாக பரப்பப்படும் போலிச் செய்திகள் !
இவற்றைத் தவிர்த்து, நாம் தமிழர் கட்சிக்கு எதிராக ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட பிரச்சார போஸ்டர், அதிமுக அமைச்சருக்கு எதிராக எடிட் செய்யப்பட்ட வீடியோவையும் தவறாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க : அவர் நாடார் சமூகமே இல்லை… நாம் தமிழர் கட்சி போஸ்டரை ஃபோட்டோஷாப் செய்து வதந்தி !
மேலும் படிக்க : ராஜேந்திர பாலாஜி பேசியதை எடிட் செய்து பரப்பும் திமுக ஆதரவாளர்கள் !
தமிழக தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுக்கும் எதிராக பல புரளி செய்திகள் மற்றும் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட நியூஸ் கார்டுகளை பரப்புவதன் மூலம் சமூக வலைதளங்களில் எதிரான மனநிலையை உருவாக்க முயல்கின்றனர். இவையனைத்தையும், போலி செய்திகள் குறித்து அறியாத சாமானிய மக்கள் நம்பவும் செய்கிறார்கள்.
இணையத்தில் போலி நியூஸ் கார்டு செய்திகள் அதிகரித்து வருவதால் மக்கள் தாங்கள் பார்க்கும் செய்தியின் உண்மைத்தன்மை அறிந்து பதிவிடுதல் அவசியம்.