தமிழக தேர்தல்: அரசியலுக்காக உருவாக்கப்படும் போலி செய்திகளும், வதந்திகளும் !

தமிழக தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்க சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த புரளி செய்திகள் உருவாக்கப்பட்டு வைரல் செய்யப்படுகிறது. சாதி, மதம், அரசியல் கட்சி, நையாண்டி என செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகளை தெளிவாய் வாட்டர் மார்க் லோகோ உடன் எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.

Advertisement

1. ஸ்டாலின் வன்னியர் உள் ஒதுக்கீடு :

Twitter link | Archive link 

மு.க.ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தில், ” வன்னியர் உள் ஒதுக்கீட்டை தடுக்காமல் வேடிக்கை பார்த்தவர் ஓபிஎஸ். தேனி-போடியில் வன்னியர்களுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் ” என தந்தி டிவி செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று  பரப்பப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பாக கூட, வன்னியர்களின் 10.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஸ்டாலின், திமுக எதிர்ப்பு தெரிவிப்பதாக பல போலியான நியூஸ் கார்டுகள் பரப்பப்பட்டன. அதேபோல், இதுவும் போலியான நியூஸ் கார்டே. தந்தி டிவி செய்தியில் இப்படியொரு நியூஸ் கார்டு வெளியாகவில்லை.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூரில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் மேற்கொண்ட பரப்புரையில், ” வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியபோது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதை கைதட்டி வரவேற்று விட்டு இன்று அது தற்காலிகமானது என்று கூறுவது ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம். அடுத்து அமையப் போகும் திமுக அரசு, சமூக நீதி அரசாக இருக்கும். அனைத்து சமூகத்தினரும் திருப்தி அடையக்கூடிய விதத்தில் சட்டத்தை இயற்றுவோம் ” என பேசியதாக பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

2. வழிபாட்டு தலங்களில் பிரச்சாரத்திற்கு தடை :

” கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகளில் தடையை மீறி தேர்தல் பிரச்சாரம் செய்வோருக்கு ஒரு வருட கடுங்காவல் தண்டனையுடன் ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்படும் ” என தேர்தல் ஆணையம் அறிவித்ததாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்ற வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேர்தல் விதிமுறைகள் குறித்து பேசும் போது தெரிவித்து இருந்தார். ஆனால், அபராதம், தண்டனை குறித்து செய்தி ஏதும் வெளியாகவில்லை.

ஆனால், சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. அந்த சேனலில் இப்படியொரு நியூஸ் கார்டு வெளியாகவில்லை. திமுக எம்.பி ஆ.ராசா தேர்தல் பரப்புரை செய்ய தடை என வெளியாகிய நியூஸ் கார்டில் எடிட் செய்து உள்ளார்.

3. யோகி தக்ஷிண பிரதேஷ் :

” தமிழகத்தின் பெயரை தக்ஷிண பிரதேஷ் என்று மாற்ற சம்மதித்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி ” என கோவையில் பரப்புரையில் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் கூறியதாக எடிட் செய்யப்பட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டு பரப்பப்படுகிறது.

Facebook link | Archive link

” அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தமிழகத்திலிருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது ” என வெளியான புதிய தலைமுறை நியூஸ் கார்டில் தக்ஷண குறித்து எடிட் செய்துள்ளனர். பாஜகவிற்கு எதிராக தொடர்ந்து  தக்ஷண பிரதேஷ் வதந்தியை பரப்பி வருகின்றனர் என நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.

மேலும் படிக்க : பாஜகவை விட்டு நீங்காத தக்ஷிண பிரதேசம்… திருமாவளவன் பேச்சும், ஃபோட்டோஷாப் போஸ்டர்களும் !

4. அண்ணாமலை சர்ச்சை பேச்சு 

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினர் பற்றி தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று வைரலாகியது. இதற்கு எதிராக திமுக எம்.பி கனிமொழி பேசியதும் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இதற்கிடையில், ” நான் பேசியதாகப் பரவும் வீடியோ டப்பிங் செய்யப்பட்டது. எனது நற்பெயருக்குக் கலங்கம் விளைவிக்க சமூகவிரோதிகள் முயற்சி ” என அண்ணாமலை வைரல் வீடியோ குறித்து மறுப்பு தெரிவித்ததாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்றை பரப்பி வருகிறார்கள். இப்படியொரு செய்தி வெளியாகவே இல்லை.

5. யோகி ஆதித்யநாத் பொள்ளாச்சி விவகாரம் 

” பெண்கள் ஆறு மணிக்கு மேல் வெளியே வராமல் இருந்தால் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் தவிர்க்கலாம் ” என யோகி ஆதித்யநாத் பேசியதாக போலியான, எடிட் செய்யப்பட்ட தந்தி டிவி சேனலின் நியூஸ் கார்டு ஒன்றும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

6. வானதி ஸ்ரீனிவாசன் கோவை விவகாரம் 

கோவையில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின் போது நடத்திய பேரணியில் கடைகளை மூடச் சொல்லி கல் வீசிய சம்பவம் தேர்தல் களத்தில் எதிர்ப்பை சந்தித்தது.

இதையடுத்து, ” உடைக்கப்பட்டவை தேசதுரோகிகளுடைய கடைகள்தான். யோகிஜியை வரவேற்க இதை கூட செய்யாமல் இருந்தால்தான் தவறு ” என வானதி ஸ்ரீனிவாசன் பேசியதாக எடிட் செய்யப்பட்ட முகநூல் பக்க கார்டு ஒன்று வைரல் செய்யப்படுகிறது.

Facebook link | Archive link  

simplicity Coimbatore எனும் முகநூல் பக்கத்தில், வானதி ஸ்ரீனிவாசன் கமல்ஹாசனை விமர்சித்து பேசியது தொடர்பாக வெளியான கார்டில் தவறாக எடிட் செய்து உள்ளனர்.

மேலும் படிக்க : திமுக ஆட்சி வந்த உடன் சபரிமலைக்கு செல்வேன் என கனிமொழி கூறினாரா ?

தேர்தல் தருனத்தில் அரசியல் சார்ந்து எண்ணற்ற போலி நியூஸ் கார்டுகள், வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. வதந்திகள் தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் பேசவும், பகிரவும் வேண்டாம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button