‘தமிழ்நாடு கஞ்சாவின் தலைநகரம்’, ‘காலை உணவுத் திட்டம்’ பற்றி அண்ணாமலை சொன்ன பொய்கள்!

கடந்த 12ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அரசு தயாரிக்கும் அந்த உரையில் அரசின் சாதனைகள், அடுத்துச் செயல்படுத்த இருக்கும் முக்கிய திட்டங்கள் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி இம்முறை தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் முதல் பகுதியில் சில கருத்துகளை மட்டும் வாசித்துவிட்டு அவையிலிருந்து வெளியேறினார். 

ஆளுநரின் உரையில் திமுகவினர் பொய் சொல்லியுள்ளதாகத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார். அதில், ’இன்னுயிர் காப்போம்’ மற்றும் ‘குட் சமாரிட்டன்’ திட்டம் பற்றி அண்ணாமலை தவறான தகவல்கள் பேசியது குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டிருந்தது. மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஒழுங்கு, காலை மற்றும் மதிய உணவுத் திட்டம்  தொடர்பான தகவல்களையும் அண்ணாமலை தவறாகப் பேசி இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்.

1. தமிழ்நாடு கஞ்சா தலைநகரமா ? 

ஆளுநர் உரையில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் ‘ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தைக் கஞ்சா தலைநகரமாக மாற்றியதைத் தவிர என்ன சாதனை செய்தது திமுக’ என்றுள்ளது. 

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்ட தரவுகளின்படி தமிழ் நாட்டில் 2020 ஜூன் முதல் 2021 மே மாதம் வரை 18,687 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தது அதிமுக அரசு என்பது குறிப்பிடத்தக்கது. 2021 மே மாதம் தான் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது.

மேலும் அக்காலக்கட்டத்தில், அதிகப்படியாக ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் முறையே 1,72,186 மற்றும் 1,43,012 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடையின் அடிப்படையில் மாநிலங்கள் வாரியாக பட்டியலிட்டால் தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது.  

அதேபோல், 2021 ஜூன் முதல் 2022 மே மாதம் வரையில் தமிழ்நாட்டில் கைப்பற்றப்பட்ட கஞ்சா 20,707 கிலோ கிராம். அந்த ஆண்டும் ஆந்திரப் பிரதேசம் (178,804) மற்றும் ஒடிசா (175,242) மாநிலங்களிலேயே அதிகம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இறுதியாக 2022 ஜூன் முதல் 2023 மே மாதம் வரை பார்க்கையில் 5,276 கிலோ கிராம் கஞ்சா தமிழ்நாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் அதிகப்படியாக 2,41,857 கிலோ கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

போதைப் பொருள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் 2020 ஜூன் முதல் 2021 மே வரை உத்தரப் பிரதேசம் (9,131) முதல் இடத்திலும் பஞ்சாப் (7,764) இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு 5,683 வழக்குகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த ஆண்டில் (2021 ஜுன் – 2022 மே) முதல் மூன்று மாநிலங்கள் முறையே கேரளா (14,134), பஞ்சாப் (10,178), உத்தர பிரதேஷ் (8,370) உள்ளது. தமிழ்நாடு 5,552 வழக்குகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இறுதியாக 2022 ஜூன் முதல் 2023 மே மாதம் வரை பார்க்கையில் தமிழ்நாட்டில் போதைப் பொருள் தொடர்பாக 532 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது (21வது இடம்). 

போதைப் பொருள் தடுப்பு பிரிவு தகவலின்படி பார்க்கையில் மற்ற மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு, வழக்குகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாகவே இருந்துள்ளது. இதிலிருந்து கஞ்சாவின் தலைநகராகத் தமிழ்நாடு உள்ளது என அண்ணாமலை கூறியது பொய் என்பதை அறிய முடிகிறது.

2.முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் : 

1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் ’முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ 2022, செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு தொடங்கியது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட போதே இது குறித்த தவறான தகவல்கள் பரவியது. அப்போதே இத்திட்டம் பற்றி விரிவான கட்டுரை ஒன்று யூடர்ன் தளத்தில் வெளியிடப்பட்டது. 

தற்போது இத்திட்டம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை ”காலை உணவுத் திட்டத்தை 2020ம் ஆண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவந்துவிட்டது. காலை உணவுத் திட்டத்திற்கான பணமும் மத்திய அரசு கொடுக்கிறது. காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கான பணம் மத்திய அரசிடம் இருந்து வரும் போது, அதனைத் திராவிட மாடல் அரசுதான் இந்தியாவில் முதலில் செய்தது என்பதை எப்படிச் சொல்ல முடியும்” எனக் கூறியுள்ளார். 

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவலுடன் போஷான் திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கு 2020 முதல் 2022 வரை 1,146 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காலை உணவுத் திட்டம் பற்றி புதிய கல்விக் கொள்கை-2020ல் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தோம். அதில், காலை உணவு வழங்குவதன் மூலம் கற்றல் திறனை அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை நீண்டகால திட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், எந்த இடத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்றோ இதற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கும் என்றோ குறிப்புகள் இல்லை. 

மேற்கொண்டு பிரதான் மந்திர் போஷான் திட்டம் குறித்துத் தேடியதில், மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட பதில் ஒன்று கிடைத்தது. மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா கடந்த மூன்று ஆண்டுகளில் போஷான் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிதி தொடர்பாக 2023, டிசம்பர் மாதம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதிலில் தமிழ்நாட்டிற்கு 2020-21 முதல் 2022-23 நிதியாண்டு வரை அளிக்கப்பட்ட நிதி குறித்த விவரம் உள்ளது. 

மேற்கண்ட மூன்று நிதியாண்டுகள் சேர்த்து 1,201.85 கோடி ரூபாய் தமிழ்நாட்டிற்கு போஷான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. போஷான்  திட்டம் பற்றிய ஒன்றிய அரசின் இணையதளத்தில் காலை உணவு பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. மதிய உணவிற்கு (சத்துணவு) வழங்கப்படும் பணம், அரிசி, பருப்பு (1-8ம் வகுப்பு வரை) முதலியவை பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மதிய உணவு நிதி தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தளத்தில் உள்ள தரவுகள் : 

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் ஒருவருக்கு 4.13 ரூபாயும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் ஒருவருக்கு 6.18 ரூபாயும்  மதிய உணவுக்காக ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது என தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் ஒன்றிய அரசின் பங்கு, 40 சதவீதம் மாநில அரசின் பங்கு. 

அதன்படி பார்க்கையில், 1-5 வகுப்பு மாணவர்களுக்கு ஒன்றிய அரசு 2.48 ரூபாயும் மாநில அரசு 1.65 ரூபாயும் வழங்குகிறது. இதனைத் தவிரக் கூடுதலாகத் தமிழ்நாடு அரசு மாணவர் ஒருவருக்கு 2.98 ரூபாய் வழங்குகிறது. இதன்படி Primary மாணவர் ஒருவருக்கு மதிய உணவுத் திட்டத்தில் 7.11 ரூபாய் தமிழ்நாட்டில் செலவு செய்யப்படுகிறது. இந்த மொத்த தொகையில் தமிழ்நாடு அரசின் பங்கு 4.63 ரூபாய் (65%), ஒன்றிய அரசின் பங்கு 2.48 ரூபாய் (35%) ஆகும். 

அடுத்தபடியாக 6 முதல் 8 வரை படிக்கும் மாணவர் ஒருவருக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த தொகை 6.18 ரூபாய். இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.3.71 (60%), மாநில அரசின் பங்கு ரூ.2.47 (40%). இந்த 40% பங்களிப்பைத் தவிர்த்துக் கூடுதலாகத் தமிழ்நாடு அரசு மாணவர் ஒருவருக்கு ரூ.1.03 செலவு செய்கிறது. இதன்படி 6-8 படிக்கும் மாணவர் ஒருவருக்கு மொத்த மதிய உணவு செலவில் (ரூ.7.21) தமிழ்நாடு அரசு ரூ.3.50 வழங்குகிறது. 

மதிய உணவு திட்டத்தில் மாநில அரசுகளுக்கு என நிர்ணயிக்கப்பட்ட 40 சதவீதத்தைக் காட்டிலும் தமிழ்நாடு அரசு கூடுதலாகத்தான் செலவு செய்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு மதிய உணவுக்காக 1 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நிதி வழங்குகிறது. 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிய உணவு செலவை (ரூ.8.78) முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுதான் செலவு செய்கிறது. 

ஒன்றிய அரசின் தகவல் : 

தமிழ்நாடு அரசின் தளத்தில் உள்ள இத்தகவல் எப்போது பதிவிடப்பட்டது என்கிற விவரம் இல்லை. எனவே இது குறித்து மேற்கொண்டு தேடியதில், 2022, அக்டோபர் மாதம் மதிய உணவுத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு உயர்த்திய தொகை பற்றிய விவரம் கிடைத்தது. 

அதில் Primary-க்கு ரூ.5.45, Upper primary-க்கு ரூ.8.17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்குகள் (60:40) உள்ளது. ஒன்றிய அரசு Primary மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகை என்பது இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் செலவு செய்யும் தொகையை (ரூ.7.11) காட்டிலும் குறைவு. இந்த உயர்த்தப்பட்ட தொகைப்பற்றிய விவரம் இன்னும் தமிழ்நாடு அரசு இணையதளத்தில் பதிவிடப்படவில்லை. 

இவற்றிலிருந்து மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர் ஒருவருக்கு இவ்வளவு என ஒன்றிய அரசு நிர்ணயித்து வழங்கக் கூடிய பங்களிப்புக்கு நிகராகவும் சில வகுப்புகளுக்குக் கூடுதலாகவும் தமிழ்நாடு அரசு செலவு செய்கிறது என்பதை அறிய முடிகிறது. அது மட்டுமின்றி 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவிற்காக ஒன்றிய அரசு தனது பங்களிப்பைச் செய்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசுதான் முழுக்க முழுக்க செலவு செய்கிறது. 

சமீபத்தில் தமிழ்நாடு அரசு 2024-25க்கான பட்ஜெட்டை வெளியிட்டது. அதில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து காலை உணவுத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி அளிப்பதாக அண்ணாமலை சொன்ன தகவல் பொய் என்பதை உறுதி செய்ய முடிகிறது. 

மேலும் படிக்க : காலை உணவு திட்டம் : அருவருப்பு தலைப்பால் எழுந்த கண்டனங்கள்.. தினமலருக்கு பதில் இதோ !

வேறு சில மாநிலங்களும் காலை உணவுத் திட்டத்தைச் சோதனை முறையில் தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து செய்யத் தொடங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அரசு தனது செலவில் இப்பணியைச் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பொய்களின் தொகுப்பு !

மேலும் படிக்க : “ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

இப்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய்களையும் தவறான தகவல்களையும் கூறுவது முதல் முறை கிடையாது. அவர் சொன்ன பொய்கள் தொடர்பான உண்மைகள் யூடர்னில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டு வருகிறது. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader