“ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தொடர் அரசியல் பேச்சுகளுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்து வருவது தொடர் கதையாக மாறிவிட்டது. இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் அளித்த பேட்டியில் பல்வேறு பொய்யான தகவல்களை அவர் அளித்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக யூடர்ன் வெளியிட்ட வீடியோவின் ஆதாரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

என்னால் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்ய முடியவில்லை : 

தமிழ்நாடு காவல்துறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஆளுநர் கூறுகையில், 2022 ஏப்ரல் 19ம் தேதி தருமபுர ஆதீனத்திற்கு சென்று கொண்டிருந்த போது நான்(எனது கான்வாய்) தடி மற்றும் கற்களால் தாக்கப்பட்டேன். அடுத்ததாக, சில அச்சுறுத்தல்களும், வசைகளும் இருந்தன. இந்த இரண்டு வழக்குகளிலும், ஆளுநர் எப்.ஐ.ஆர் பதிவு செய்தும், போலீசார் அதை பதிவு செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதே இதற்குக் காரணம். ஒரு ஆளுநரால் எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்ய முடியவில்லை எனப் பேசி இருந்தார்.

விரிவாக படிக்க : தமிழக ஆளுநர் காரின் மீது கற்கள், கறுப்புக் கொடிகள் வீசப்பட்டதா ?

2022ம் ஆண்டே தருமபுர ஆதீனத்திற்கு சென்ற ஆளுநர் கார் மீது கற்களோ அல்லது கொடியோ வீசப்படவில்லை. அவர் கார் சென்ற பிறகு இறுதியாக வந்த பாதுகாப்பு காவலர் வாகனத்தின் மீதே கொடிகள் வீசப்பட்டன என்று விரிவான கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.

அதேபோல், இச்சம்பவம் தொடர்பாக 2022 ஏப்ரல் 19ம் தேதியே காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்ய முடியவில்லை எனப் பொய்யான தகவலை பேசி இருக்கிறார்.

கள்ளக்குறிச்சியில் பசுவின் பால் மடியை வெட்டினார்கள் : 

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தின் போது பசு மாடுகளின் மடிகளை வெட்டினார்கள் என ஆளுநர் பேசி இருக்கிறார். ஆனால், இது ஆதாரமற்ற தகவல். இந்த தகவல் கலவரத்தின் போதே சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. ஆனால், அதுதொடர்பாக எந்த செய்திகளோ, பதிவுகளோ இல்லை.

மாறாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது பசுக்களை திருடிச் சென்றதாகவும், அவர்களை போலீசார் கைது செய்தது தொடர்பான செய்திகளே வெளியாகி இருக்கின்றன.

ஒரு மாநில முதல்வர் பல்கலைக்கழக வேந்தராக இருக்கக்கூடாது :

சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு ஆளுநர் கூறுகையில், சித்தா பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, அது யு.ஜி.சி சட்டம் மற்றும் விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என அதற்கு ஒப்புதல் அளிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், அங்கு வேந்தராக முதல்வர் இருப்பார் என்பது மாநிலப் பட்டியலில் வருகிறது. இது சாத்தியமில்லை என்றேன். அதனால் இந்த மசோதாவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி இருந்தார்.

ஆனால், பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் உள்ள மகாயோகி கோரக்நாத் பல்கலைக்கழகம், கௌதம புத்தா பல்கலைக்கழகம் மற்றும் உத்தரப்பிரதேச மெடிக்கல் சயின்ஸ் பல்கலைக்கழகம் என 3 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கிறார். இது பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் பொருந்துமா ?..மேலும், ஒரு மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருக்கும் ஆளுநரை நீக்கும் முயற்சியை கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் கல்வி நிலை : 

தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சரியில்லை. இதன் விளைவால் தமிழ்நாட்டில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என ஆளுநர் பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டின் கல்வி நிலவரம் குறித்துப் பார்க்கையில், இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 15 தமிழ்நாட்டைச் சேர்ந்தது. அதேபோல், சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 20 தமிழ்நாட்டில் இருக்கிறது. மேலும், சிறந்த 100 கலைக் கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில் உள்ளன.

சிதம்பரம் குழந்தை திருமணங்கள் : 

ஆளுநர் ரவி தனது பேட்டியில், ” இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத சிதம்பரம் கோவிலில் 2022ல் என்ன நடந்தது என்று பாருங்கள். பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறையின் அரசு அலுவலர்கள், தீட்சிதர்கள் மீது குழந்தைத் திருமணம் தொடர்பாக 8 புகார்களை அளித்தனர். இதனால் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, கன்னித்தன்மையை  பரிசோதிக்க” இரண்டு விரல் பரிசோதனை “செய்ய வைத்தனர். அவர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றனர் ” எனத் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால், ஆளுநரின் இக்குற்றச்சாட்டை மறுத்து தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு விளக்கம் அளித்து இருக்கிறார். அதில், ” குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்தன. அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்த பின், அதற்கான ஆதாரங்களை திரட்டி சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றத்தில் ஈடுபட்ட 8 ஆண்கள், 3  பெண்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி இரண்டு சிறுமியர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் பெண் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களை இருவிரல் பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. அந்த சிறுமியர் தற்கொலைக்கு முயன்றனர் என்பது பொய்யான தகவல். ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

 

ஆதாரங்கள் : 

AnyScanner_05_04_2023(1)

Chidambaram child marriage cases: 2-finger test not done in child marriage cases, says DGP

https://mgug.ac.in/Chancellor.aspx

https://www.gbu.ac.in/Content/gbudata/about/Profile_ShYogiAdityanath_latest.pdf

Kerala moves to remove Governor as Chancellor of universities

National Institutional Ranking Framework, University

Please complete the required fields.




Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader