This article is from Apr 20, 2022

தமிழக ஆளுநர் காரின் மீது கற்கள், கறுப்புக் கொடிகள் வீசப்பட்டதா ?

தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவிற்கு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இருந்து ஞானரத யாத்திரையை தொடங்கி வைக்க தமிழக ஆளுநர் ரவி ஏப்ரல் 19-ம் தேதி வருகை வந்தார். நீட் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டுள்ளதால் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்பினர் கூடி இருந்தனர்.

தமிழக ஆளுநர் கான்வாய் மீது கற்கள் மற்றும் கறுப்புக் கொடிகள் வீசப்பட்டதாக பாஜக தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆளுநரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , ” தமிழக ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசியதாக கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என ஏ.டி.ஜி.பி விளக்கம் அளித்து உள்ளார். ஆளுநரின் கான்வாய் கடந்து சென்ற பின்பே கையில் இருந்த கறுப்புக் கொடிகளை போராட்டக்காரர்கள் வீசியுள்ளனர் ” என விளக்கம் அளித்து இருந்தார்.

மேலும், தமிழக டி.ஜி.பிக்கு ஆளுநரின் பாதுகாப்பு அலுவலர் விஷ்வேஸ் சாஸ்திரி அனுப்பிய கடிதத்தில், ” தருமபுரம் மடத்தை நோக்கி ஆளுநரின் கான்வாய் சென்று கொண்டிருந்த போது மன்னம்பந்தல் பகுதியில் ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர்கள் காவல்துறையின் தடையை மீறி சாலையை நோக்கி வர தொடங்கினார்கள். அந்த கூட்டத்தில் இருந்து கொடிகளும் சில பொருட்களும் வீசப்பட்டன. ஆனால், ஆளுநர் மற்றும் ஆளுநர் கான்வாய் ஆகியவற்றுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழக ஆளுநர் ரவி சென்ற கறுப்பு நிற பென்ஸ் கார் போராட்டக்காரர்கள் பகுதியைக் கடக்கும் போது மூன்றாவது காராகவே சென்று விட்டது. அப்போது காரின் மீது கற்களோ அல்லது கறுப்புக் கொடியோ வீசப்படவில்லை. ஆளுநரின் கார் கடந்து சென்ற பிறகு பாதுகாப்பிற்காக சென்ற வாகனங்கள் மீது கறுப்புக் கொடிகளை வீசுவதை தெளிவாக பார்க்க முடிந்தது.

தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ரவியின் கார் மீது கற்களோ அல்லது கறுப்புக் கொடியோ வீசப்படவில்லை. ஆளுநரின் கான்வாயில் உடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது கறுப்புக் கொடிகளை போராட்டக்காரர்கள் வீசி இருக்கிறார்கள். அந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்து உள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader