6-ம் வகுப்பு கணிதத்தில் சீட்டுக் கட்டு இடம்பெற்றதால் சர்ச்சை.. கல்வியாளர்கள் கூறுவதென்ன ?

மிழக பள்ளிக்கல்வித்துறையின் 6-ம் வகுப்பு கணித புத்தகத்தில்(டெர்ம் 3), சீட்டுக்கட்டுகளை உதாரணமாக கூறி இடம்பெற்று இருக்கும் பாடப் பகுதியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளுடன் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா ,”கீழ்த்தரமான பட்டிமன்ற பேச்சாளர் லியோனி பாடநூல் நிறுவனத் தலைவராகவும், திருமணம் கடந்த உறவின் குத்தகைதாரர் சுப வி வழிகாட்டுனராகவும் இருந்தால் இப்படிப்பட்ட புத்தகம்தான் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும். இந்த திராவிட மாடல் அரசு எவ்வளவு மட்டமானது என்பதை இப்போதாவது புரிந்து கொள்வோம் ” என ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Twitter link 

இதுகுறித்து சிறார் எழுத்தாளர் உமாநாத் செல்வன் கூறுகையில், ” வைரலாகும் 6-ம் வகுப்பு புத்தகம் வந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகிறது. சீட்டுக்கட்டுகளே பயமூட்டுபவை என்ற பாவனையே அச்சமூட்டுகின்றது. சீட்டுக்கட்டுகள் மூலம் கணிதத்தில் பல கூறுகளை எளிதாக கற்கலாம்.

இந்த பாடத்திலும் சீட்டுக்கட்டினைக் கொண்டு கூட்டல் கழித்தலையே எளிதாக சொல்லித் தருகின்றனர். இதில் எங்கே வந்தது சூதாட்டம் ? சீட்டுக்கட்டு விளையாட்டுகளால் கணிதத்தையும் வித்தைகளையும் கற்கலாம். கணிதத்தில் பல விசயங்களை எளிதாகவும் கற்கலாம்.
.
சீட்டுக்கட்டு மிக எளிதான விளையாட்டுப்பொருள். அது சூதாடவும் பயன்படும், மறுப்பதற்கு இல்லை. ஆனால், சூதாட்டத்தை தவிர  சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ஏராளமான விளையாட்டுகளை விளையாடலாம். குடும்பமாக வீட்டிற்குள் உள்ளரங்கிற்குள் விளையாட சீட்டுக்கட்டுகள் மிக சிறந்தவை. சீட்டுக்கட்டு விளையாட்டுகள் மூலம் கணித அறிவு மட்டுமல்ல, Logical Thinking வெகுவாக உயரும்.
ஏன், சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு புத்தகத்தில் கூட சீட்டுக்கட்டுகளை விளையாடுவது குறித்து இடம்பெற்று இருக்கிறது. சீட்டுக்கட்டுகள் என்றாலே ரம்மி மட்டுமே அல்ல. அனைத்திற்கும் தீர்வு ஒன்று உரையாடல் மட்டுமே. இதை இயல்பான விசயமாகதான் நான் பார்க்கிறேன். இதை தற்போது பூதாகரமானதாக கொண்டு செல்கிறார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.
ஹெச்.ராஜா கூறுவதுபடி பார்த்தால், வைரலாகும் 6-ம் வகுப்பு புத்தகம் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திருத்திய பதிப்பு. அதுமட்டுமின்றி, சீட்டுக்கட்டை கணித பாடத்துடன் தொடர்புப்படுத்துவது வழக்கமான ஒன்று. சிபிஎஸ்இ பாடத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டை விளையாடுவது பற்றி குறிப்பே கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
சீட்டு விளையாடுவதே மோசமான செயலா அல்லது சீட்டு விளையாட்டை சூதாட்டமாக மாற்றுவது மோசமானதா அப்படியொரு கேள்வி இங்குள்ளது. சூதாடுவதே தவறு. எந்த விளையாட்டிலும் பணத்தை வைத்து சூதாட முடியும். கிரிக்கெட் ஆட்டத்தை கூட பெரிய சூதாட்டமாக மாற்ற வாய்ப்புகள் இருக்கிறது. ஆக, விளையாட்டின் மீது சிக்கல் இல்லை, விளையாட்டின் மீது பணம் வைத்து விளையாடுவதே சிக்கல். கிரிக்கெட் விளையாட்டில் பல கோடி சூதாட்டம் நடைபெற்றது என செய்திகள் வருகிறது. அதற்காக, கிரிக்கெட்டை தடை செய்ய சொல்வோமா அல்லது சூதை தடைச் செய்ய சொல்வோமா !
Please complete the required fields.




Back to top button
loader